இந்த தேர்தல் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தல் ; ஆயிரம் விளக்கு பிரச்சாரத்தில் தி.மு.க வை சாடிய இ.பி.எஸ் !!!
இந்த தேர்தல் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தல் என்று ஆயிரம் விளக்கு பகுதியில் பரப்புரையின் போது எடப்பாடி பழனிசாமி கூறினார்.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி தமிழகத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி, சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புஷ்பா நகர், கருமாரியம்மன் கோயில் அருகே பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், இந்த தேர்தல் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தல். தி.மு.க தேர்தல் அறிக்கையை அ.தி.மு.க காப்பி அடித்தது என்று ஸ்டாலின் கூறுகிறார். அ.தி.மு.க தேர்தல் அறிக்கையை வெளியிட்ட 10 நாட்களுக்கு பின்னரே தி.மு.க அதன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. நமது தேர்தல் அறிக்கையை தி.மு.க-தான் காப்பி அடித்தது. இதை அப்படியே உருட்டிப் பேசுகிறார் ஸ்டாலின் என்றார்.
4 ஆண்டுகள் 2 மாதம், நம் ஆட்சியை வீழ்த்த தி.மு.க நினைத்தது. அப்படி வீழ்த்த நினைத்தவர்கள் மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவிற்கு சிறப்பான ஆட்சியைக் கொடுத்தோம் என்றவர், வறட்சி, கொரோனா காலம், மக்களுக்கு வேலை இல்லை, இந்த மாதிரியான இக்கட்டான காலத்திலும் கூட விலைவாசி உயராமல் பார்த்துக் கொண்டோம் என்று பெருமிதம் தெரிவித்தார்.
அ.தி.மு.க ஆட்சியில் சென்னை மக்களின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, மெட்ரோ 2-ம் கட்டம் திட்டம் கொண்டு வரப்பட்டதாக கூறிய பழனிசாமி, 63 ஆயிரம் கோடிக்கு அனுமதி வாங்கி, மத்திய அமைச்சரை அழைத்து கலைவாணர் அரங்கில் அடிக்கல் நாட்டிய பெருமை அ.தி.மு.க-வை சேரும். இந்தியாவிலேயே ஒரு திட்டத்திற்கு 63 ஆயிரம் கோடி நிதியை பெற்ற அரசு அ.தி.மு.க அரசு. உங்களால் (தி.மு.க) இப்படி ஒரு திட்டத்தை பெற முடிந்ததா ? என்று கேள்வி எழுப்பினார்.
ஒரே ஆண்டில் அ.தி.மு.க அரசு 11 மருத்துவக் கல்லூரிகளை கொண்டு வந்ததாக பெருமிதம் தெரிவித்த இ.பி.எஸ், தி.மு.க-வால் ஒரு மருத்துவக் கல்லூரி கொண்டு வர முடிந்ததா ? என்றும் கேள்வி எழுப்பினார்.
கொரோனா காலத்தில் 7 லட்சம் பேருக்கு அம்மா உணவகம் வாயிலாக சுடச்சுட உணவு தயார் செய்து 3 வேளையும் விலை இல்லாமல் கொடுத்தோம் என்றவர், மீண்டும் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததும், அம்மா உணவகம் தரமாக இருக்கும், கவலைப்பட வேண்டாம் என்று வாக்குறுதி அளித்தார்.
அ.தி.மு.க ஆட்சியில் கொண்டு வந்த திட்டத்தை கூட முழுமையாக நிறைவேற்றாத அரசு தி.மு.க அரசு என்று விமர்சித்த இ.பி.எஸ், எஞ்சிய மழைநீர் வடிகால் பணிகள் இன்னும் மேற்கொள்ளவில்லை. இப்படிப்பட்ட மோசமான தி.மு.க அரசு, மக்களை ஏமாற்ற தற்போது புதிய அறிவிப்புகளை தேர்தல் வாக்குறுதிகளாக வழங்கி இருக்கிறது என்றார்.
கூப்பன் கொடுப்பார்களாம், கூப்பன் யார் கொடுப்பா ? என்று தி.மு.க 8,000 ரூபாய் கூப்பன் அறிவிப்பை கேலி பேசிய இ.பி.எஸ், தி.மு.க 100 சதவீதம் ஆட்சிக்கு வராது. ஆனால், இந்த அறிவிப்பில் கூட தி.மு.க குடும்பத்திற்கு என்ன வருமானம் கிடைக்கும் என பார்த்து அறிவிப்பு கொடுத்து இருக்கிறார்கள். கூப்பன் கொடுத்தால் தானே அவர்களுக்கு கமிஷன் கிடைக்கும். நேரடியாக வங்கிக்கு அனுப்பினால் கிடைக்குமா ? என்று கேள்வி எழுப்பினார்.
அ.தி.மு.க ஆட்சி உங்களால் (மக்களால்) மலரும், அப்போது வரிச்சுமை, விலைவாசி ஏற்றத்தை தடுக்க ஒவ்வொரு குடும்பத்திற்கும் குடும்ப அட்டைக்கும் 10 ஆயிரம் ரூபாய் சிறப்பு உதவித்தொகை வழங்கப்படும். எனவே தமிழ்நாட்டில் நல்ல ஆட்சி மலர நீங்கள் அனைவரும் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வாக்காளர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
பரப்புரையைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம், தலைமைச் செயலாளரை மாற்றியதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், "5 வருடங்களாக காவடி தூக்கிக் கொண்டு இருந்தார்களே அவர்கள் தான் இருக்க வேண்டுமா ? தி.மு.க, மக்களை நம்பி இல்லை, அதிகாரிகளை நம்பி இருக்கிறது. யாரை மாற்றினால் இவர்களுக்கு என்ன கஷ்டம் ? நேர்மையாக தேர்தல் நடக்க வேண்டும் என தேர்தல் அதிகாரிகள் விரும்புகிறார்கள். அதன் அடிப்படையில் அதிகாரிகள் மாற்றப்படுகிறார்கள்" என்று இ.பி.எஸ் பதிலளித்தார்.

0 கருத்துகள்: