பனையேறும் தொழிலாளி மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு; எடப்பாடி பழனிசாமி கண்டனம் !!!
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தமிழ்நாடு முழுவதும் உள்ள பனைமரம் ஏறும் தொழிலாளர்கள் இடையே பீதியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது என்று அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.
தென்காசி மாவட்டத்தில் பனையேறும் தொழிலாளி மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், 'ஆலங்குளம் தொகுதியில் மருதம்புத்தூர் ஊராட்சியில் மணிகண்டன் என்பவர் பனை மரத்தில் பதநீர் இறக்கிய போது, கள் இறக்கியதாக பொய்ப் புகார் கூறியதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளர் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளார். இதில், 2 துப்பாக்கி குண்டுகள் துளைத்து பனைமரம் ஏறும் தொழிலாளி மணிகண்டன் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக வந்த செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் உள்ள பனைமரம் ஏறும் தொழிலாளர்கள் இடையே பீதியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
தேர்தல் நேரத்திலும், எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் தி.மு.க அரசின் காவல் துறை தொடர்ந்து ஏவல் துறையாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது. பதநீர் இறக்கிய தொழிலாளி, கள் வடித்ததாக பொய் குற்றச்சாட்டு சுமத்தி, துப்பாக்கிச் சூடு நடத்திய காவல் உதவி ஆய்வாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக காவல் துறை தலைமை இயக்குநரை வலியுறுத்துகிறேன்' என்று இ.பி.எஸ் குறிப்பிட்டு உள்ளார்.
ஆலங்குளம் அடுத்து உள்ள மருதம்புத்தூர் பகுதியில் சட்ட விரோதமாக கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலை அடுத்து, ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜ் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது பனையேறும் தொழிலாளியான மணிகண்டன் என்பவரை பிடித்து, அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறி, இருவரும் கட்டிப் புரண்டு சண்டையிட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து மணிகண்டன் அருகில் உள்ள கட்டையால் காவல் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜை தாக்கியதாகவும், தற்காப்புக்காக இசக்கி ராஜ் தான் வைத்து இருந்த துப்பாக்கியால் மணிகண்டனை இரண்டு காலிலும் சுட்டதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இரண்டு பேரையும், அருகில் இருந்த போலீசார் பத்திரமாக மீட்டு தென்காசி தலைமை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
காவல் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜும், கள் விற்பனையில் ஈடுபட்ட மணிகண்டனும் தற்போது தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

0 கருத்துகள்: