மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை ரூ. 1,000 இன்று வரவு வைப்பு !!!
புதுமைப்பெண்’ மற்றும் ‘தமிழ்ப் புதல்வன்’ ஆகிய திட்டங்களின் கீழ், உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.1000 உதவித்தொகையானது இன்று அவர்களுடைய வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளது.
கடந்த தி.மு.க ஆட்சியில் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவ - மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன்படி, அரசு பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்று, இடை நிற்றல் இன்றி உயர் கல்வியில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கும், ‘புதுமைப்பெண்’ திட்டம் கடந்த 2022 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் மு.க ஸ்டாலினால் துவக்கி வைக்கப்பட்டது.
இதேபோல் மாணவர்களுக்கும் மாதம் 1,000 ரூபாய் வழங்கும் வகையில், 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று, இடை நிற்றல் இன்றி உயர் கல்வியில் சேர்ந்து பயில்வோருக்கு ‘தமிழ் புதல்வன்’ திட்டம் கடந்த 2024 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.
https://x.com/i/status/2054819872123830514
இந்த திட்டங்களின் கீழ் மாதந்தோறும் 7 ஆம் தேதியன்று மாணவ, மாணவியர்களின் வங்கிக் கணக்கில் 1,000 ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டு வந்தது. ஆனால் தி.மு.க ஆட்சி முடிவடைந்து, தற்போது த.வெ.க புதிதாக ஆட்சியமைத்து இருக்கிறது. தேர்தலுக்கு பின்பு, தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை த.வெ.க ஆட்சியிலும் தொடர்ந்து செயல்படுத்த வேண்டுமென தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு கோரிக்கை விடுத்து இருந்தார்.
இதே கோரிக்கைகளை த.வெ.க ஆட்சி அமைக்க ஆதரவளித்த, தி.மு.க கூட்டணி கட்சிகளும் முன்வைத்து இருந்தன.
மேலும் நேற்று (மே 13) நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கடந்த 7 ஆம் தேதியே வரவு வைக்கப்பட வேண்டிய ஊக்கத்தொகை இன்னும் சென்று சேரவில்லை என்றும், தி.மு.க ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள் தற்போதைய ஆட்சியிலும் தொடர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
அதற்கு, முதலமைச்சர் ஜோசப் விஜய், கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நல திட்டங்கள் தொடரும் என்று சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, ‘புதுமைப்பெண்’ மற்றும் ‘தமிழ் புதல்வன்’ திட்டம் வாயிலாக வழங்கப்பட்டு வந்த 1,000 ரூபாய் உதவித்தொகை இன்று, அனைத்து மாணவ - மாணவியர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளது.
அதேபோல், மே மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகையும் பயனாளிகளின் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும் என்று முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிக்கை வெளியிட்டு உள்ளார். அந்த அறிக்கையில், “பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 100 உரிமைத்தொகையாக வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தினை மறு சீரமைப்பு செய்ய அரசுக்கு உரிய கால அவகாசம் தேவைப்படுகிறது.
மே 2026 மாதத்திற்கான கலைஞர் உரிமைத் தொகை, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் உத்தரவிட்டு உள்ளார்” என கூறப்பட்டு உள்ளது.
முதலமைச்சர் விஜய்யின் இந்த அறிவிப்பை முன்னாள் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் விமர்சித்து உள்ளார். அவர், “திராவிட மாடல் அரசின் திட்டங்கள் தொடரும் என்று சட்டப்பேரவையில் சொன்னீர்கள் ? கலைஞர் மகளிர் தொகையை மேம் 15 ஆம் தேதி வரவு வைக்க வேண்டும். ஏற்கனவே உள்ள திட்டத்தை தொடர எதற்கு அவகாசம் ? என்ன மறுசீரமைப்பு செய்யப்போகிறீர்கள் ? மாதம் ரூ. 2,500 தருவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, ரூ. 1000 கூட தராமல் இழுத்தடிப்பது தான் உங்கள் மாற்றமா ?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

0 கருத்துகள்: