பீகாரில் 1200 ஆண்டுகள் பழமையான புத்த மடாலய சிற்பங்கள் கண்டுபிடிப்பு !!!
பீகார் மாநிலம், கயா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சுமார் 1,200 ஆண்டுகள் பழமையான புத்த மடாலயத்தின் சிற்பம் உள்ளிட்ட எச்சங்களை தொல்லியல் துறையினர் கண்டு பிடித்து உள்ளனர்.
புத்த கயாவில் மகத் பல்கலைக் கழகத்தின் வரலாற்று ஆய்வுக் குழுவினர், தலைநகர் பாட்னாவில் இருந்து 140 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டுப்பா கிராமத்தில், இந்த அகழ்வாராச்சியை மே 9 ஆம் தேதி தொடங்கினர்.
அகழாய்வின் போது, செங்கல் கட்டுமானங்கள், சிறு அறைகள், நேர்த்திக் கடன் செலுத்தப்பட்ட ஸ்தூபிகள், சிலைகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக, சுண்ணாம்பு கொண்டு செங்கற்களால் கட்டப்பட்ட 2 அடுக்கு கட்டடம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதில், ஒரு கட்டடம் ஏற்கெனவே சிதிலம் அடைந்த நிலையில் உள்ளது.
மேலும் அங்கு உள்ள சுவர்களில் 3 புத்த தெய்வங்களில் சிலைகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. தாமரை பூவின் மொட்டு போன்ற வடிவில் சுடுமண்ணால் செய்யப்பட்ட பாட்டில் மூடிகள், மணிகள் ஆகியவையும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. தாரா உள்ளிட்ட புத்த தெய்வங்களில் சிலைகள் கருங்கற்களால் செய்யப்பட்டு உள்ளன.
இதுகுறித்து மகத் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் ஷங்கர் சர்மா, ஊடகத்திற்கு அளித்த பேட்டியில்,
"இங்கு அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட அறைகள், மற்ற புத்த மடாலயத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அறைகளை போன்றே இருக்கின்றன. அவை, புத்த துறவிகள் தியானம் செய்யும் அறைகளாகவும், ஓய்வு எடுக்கும் அறைகளாகவும் இருந்து இருக்க வேண்டும்.
இந்த இடத்தில் நிச்சயம் ஒரு புத்த மடாலயம் அல்லது கோயில் இருக்க வேண்டும். மழைக் காலம் முடிந்த பிறகு அகழாய்வு செய்து நாங்கள் கண்டுபிடித்து விடுவோம்.
இந்த பகுதியை 5 அடுக்குகளாக பிரித்து, ஒவ்வொரு அடுக்கையும் ஒரு காலகட்டமாக நிர்ணயித்து உள்ளோம். கீழ் அடுக்கில் கண்டுபிடிக்கப்பட்ட மண்பாண்டங்கள் கி.மு. 2 அல்லது 3-ஆம் நூற்றாண்டை சார்ந்தவையாக இருக்கலாம். நடுவில் இருக்கும் 2 அடுக்குகளில் கண்டுபிடிக்கப்பட்டவை, குப்தர் காலத்திற்கு பிந்தையவையாக இருக்கலாம். மேலே உள்ள 2 அடுக்குகளில் கண்டுபிடிக்கப்பட்டவை, கி.பி. 8 முதல் 12-ஆம் நாற்றாண்டு வரை ஆட்சி செய்த பால வம்ச காலத்தை சார்ந்தவையாக இருக்கலாம்.
இங்கு கிடைக்கும் எச்சங்களை முழுமையாக கண்டுபிடித்த பிறகு துறை ரீதியிலான வல்லுநர்களிடம் காண்பித்து, அவற்றின் உண்மையான காலத்தை கண்டறிவோம்" என்றார்.
இதேபோல், அகழாய்வுக் குழுவை சேர்ந்த அல்கா மிஸ்ரா கூறுகையில்,
"இந்த இடத்தில், புத்த மதத்தின் ஒரு பிரிவான மகாயானத்தை பின்பற்றியவர்கள் வாழ்ந்து இருக்க கூடும். இந்த கிராமத்தில் இன்னும் நாங்கள் நிறைய அகழாய்வு செய்ய வேண்டி உள்ளது" என்றார்.
இதற்கு இடையே, தங்கள் பல்கலைக் கழகத்தின் குழுவினர், பழமையான எச்சங்களை கண்டுபிடித்து இருப்பதற்கு மகத் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் சசி பிரதாப் சகி மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
"இது மிகப்பெரிய சாதனை. எங்கள் பேராசிரியர்களும் மாணவர்களும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவு சின்னத்தை கண்டுபிடித்து உள்ளனர்.
அகழாய்வுக்காக இதுவரை 50 லட்ச ரூபாய் கொடுத்து உள்ளோம். இந்த அகழாய்வுப் பணி, எங்கள் பல்கலைக் கழகம் தரமான கல்வி, ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளிப்பதை பிரதிபலிக்கிறது" என்றார்.

0 கருத்துகள்: