திங்கள், 18 மே, 2026

திருவனந்தபுரம்-டெல்லி ராஜ்தானி ரயிலில் பயங்கர தீ விபத்து !!!

SHARE

 திருவனந்தபுரம்-டெல்லி ராஜ்தானி ரயிலில் பயங்கர தீ விபத்து !!!

திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லிக்கு சென்ற ராஜ்தானி விரைவு ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு பெட்டி முழுவதும் சேதம் அடைந்தது.

திருவனந்தபுரம் - ஹஸ்ரத் நிஜாமுதீன் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் (வண்டி எண் - 12431) கேரளாவில் இருந்து டெல்லி வரை செல்லும் அதிவிரைவு ரயிலாகும். இந்த ரயில் திருவனந்தபுரத்தில் இருந்து செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகளில் இயக்கப்படுகிறது.

அந்த வகையில், நேற்று முன்தினம் (மே 15) கேரளம் மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்ட ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில், டெல்லியில் உள்ள ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையத்திற்கு இன்று பிற்பகல் 12.30 மணிக்கு வந்தடைய திட்டமிடப்பட்டு இருந்தது.

இதுபோன்ற சூழலில், கோட்டா ரயில்வே கோட்டத்தின் கீழ் உள்ள விக்ரம்கர் அலட் மற்றும் லுனிரிச்சா நிலையங்களுக்கு இடையே ரயில் சென்று கொண்டு இருந்த போது, அதிகாலை சுமார் 5:15 மணி அளவில் குளிரூட்டப்பட்ட B-1 பெட்டியில் (AC coach) திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

அதனைக் கண்ட ரயில்வே போலீசார் லோகோ பைலட்க்கு தகவல் தெரிவித்து உள்ளார். மேலும், அவசரக்கால பிரேக்குகளை பயன்படுத்தி ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, ரயிலில் இருந்த பயணிகளை ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் உடனடியாக வெளியேற்றினர். சுமார் 15 நிமிடங்களுக்குள் தீப்பிடித்த ரயில் பெட்டியில் இருந்த 68 பயணிகளும் வெளியேற்றப்பட்டதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு உள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தீ அடுத்தடுத்த பெட்டிகளுக்குள் பரவாமல் இருக்க, விபத்து ஏற்பட்ட பெட்டி ரயில் இருந்து தனியாக பிரிக்கப்பட்டு, பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக மின் விநியோகமும் நிறுத்தப்பட்டது. அதேபோல, தீ விபத்து ஏற்பட்ட பெட்டிக்கு அருகே இருந்த மற்ற பெட்டிகளில் இருந்த பயணிகளும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

இதுகுறித்து கோட்டா ரயில்வே கோட்டத்தின் முதுநிலை கோட்ட வர்த்தக மேலாளர் சௌரப் ஜெயின் கூறும்போது, 

“தீ ரயில் பெட்டியில் முழுமையாக பரவுவதற்குள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. நல்வாய்ப்பாக எந்தவிதமான உயிர் சேதமும் ஏற்படவில்லை” என்றார்.

மேலும், “விபத்து குறித்த தகவல் கிடைத்த உடனே கோட்டா ரயில் நிலையத்தை சேர்ந்த மீட்புக்குழு மற்றும் நிவாரணக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்தை தொடர்ந்து, மின் இணைப்பும் உடனடியாக துண்டிக்கப்பட்டது.

விபத்து ஏற்பட்ட பெட்டியில் இருந்த பயணிகள் கோட்டா ரயில் நிலையம் வரை மற்ற பெட்டிகளில் இருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு, சிறிது நேரத்திலேயே ரயில் கிளம்பியது. அதைத் தொடர்ந்து, கோட்டா ரயில் நிலையத்தில் கூடுதலாக ஒரு பெட்டி இணைக்கப்பட்டது” என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த ரயில்வே போலீசார், தீ விபத்திற்கான காரணம் என்ன என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீ விபத்தில் ரயில் பெட்டி முழுவதும் எரிந்து நாசமானது. இதனால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.

இதேபோல, மே 15ஆம் தேதி நம்பள்ளி ரயில் நிலையத்தில் ஹைதராபாத் - ஜெய்ப்பூர் சிறப்பு விரைவு ரயிலின் 2 குளிர்சாதனப் பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: