வியாழன், 14 மே, 2026

டாஸ்மாக்கிற்கு கிடுக்கிப்பிடி - 21 வயதுக்கு கீழ் மது கிடையாது; 10 ரூபாய் கூடுதல் வசூலுக்கு செக் !!!

SHARE

 டாஸ்மாக்கிற்கு கிடுக்கிப்பிடி - 21 வயதுக்கு கீழ் மது கிடையாது; 10 ரூபாய் கூடுதல் வசூலுக்கு செக் !!!

ஆதார், ஓட்டுநர் உரிமம் சரிபார்ப்பு கட்டாயம்; விதிகளை மீறினால் ஊழியர்கள் மீது ‘பகீர்’ நடவடிக்கை - முதல்வர் விஜய்யின் அடுத்த அதிரடி!

டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் அங்கீகாரம் பெற்ற தனியார் விடுதிகளில் 21 வயதுக்குட்பட்டோருக்கு மது விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு தடை விதித்து உள்ளது.

இதுகுறித்து அரசின் டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில்,

 "தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் மதுக்கூடங்களில் விதிகள் 2003 விதி எண் 11ஏ-வின் படி 21 வயதிற்குட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்யக் கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் வயதில் சந்தேகம் ஏற்பட்டால் அவர்களிடம் வயதிற்கான ஆதாரமாக ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்ற ஏதேனும் உரிய ஆவணங்களை சரிபார்த்து 21 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கே மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும்" என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

தொடர்ந்து, "21 வயதிற்குட்பட்ட வாடிக்கையார்களுக்கு மதுபானங்கள் விற்பனைச் செய்வது கண்டறியப்பட்டால், விற்பனையாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்" எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இதேபோல், பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்பட்டு வருவதாக சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டு வந்ததன் எதிரொலியாக, கூடுதல் விலை வைத்து மது விற்பனைச் செய்யக் கூடாது என்றும் இதை மீறும் டாஸ்மாக் ஊழியர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவது த.வெ.க-வின் முக்கிய வாக்குறுதியாக சொல்லப்பட்டது. அதை நிறைவேற்றும் வகையில், முதலமைச்சர் விஜய் பதவியேற்ற உடனே, மூன்றாவது கோப்பாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவை உருவாக்கும் கோப்பில் கையெழுத்திட்டார்.

இதைத்தொடர்ந்து, அண்மையில் வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் உள்ள கடைகளை கணக்கெடுத்து அரசிற்கு அறிக்கை அளிக்கும்படி முதலமைச்சர் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, 717 டாஸ்மாக் கடைகள் அடையாளம் காணப்பட்டன.

உடனடியாக இந்த 717 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான உத்தரவையும் முதலமைச்சர் விஜய் பிறப்பித்தார். அவற்றில் பெரும்பாலான கடைகள் தற்போது அடைக்கப்பட்டு, பொதுமக்கள் முதலமைச்சருக்கு நன்றி பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், தற்போது 21 வயது கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கக் கூடாது மற்றும் கூடுதல் விலை வைத்து விற்பனைச் செய்யக் கூடாது என அறிவிக்கப்பட்டு உள்ளது பெரும் வரவேற்பை பெற்று உள்ளன.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: