செவ்வாய், 19 மே, 2026

பொது விடுமுறை அறிவிப்பு: மே 28 பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் - அரசு தலைமை காஜி !!!

SHARE

 பொது விடுமுறை அறிவிப்பு: மே 28 பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் - அரசு தலைமை காஜி !!!

தமிழ்நாட்டில் மே 28 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி மௌலானா முஃப்தி உஸ்மான் முகைதீன் பாகவி அறிவித்து உள்ளார்.

இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று பக்ரீத் எனப்படும் ஈகை திருநாள் பண்டிகை. இந்த பண்டிகை நாளன்று அதிகாலையிலே எழுந்து, புத்தாடை உடுத்தி சிறப்பு தொழுகைகளில் பங்கேற்று, குர்பானி பலி செலுத்தி, அண்டை அயலகத்தாருடன் உணவுகளை பகிர்ந்து இஸ்லாமியர்கள் உண்டு மகிழ்வர். வசதி படைத்தவர்கள் தங்களால் இயன்றதை ஏழை, எளியவர்களுக்கு தானமாக வழங்குவர்.

இந்த ஆண்டு பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் குறித்து தமிழ்நாடு அரசு தலைமை காஜி முஃப்தி உஸ்மான் முகைதீன் பாகவி வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில், “மே மாதம் ஞாயிற்றுக்கிழமை 17 ஆம் தேதி மாலை துல் ஹஜ் மாதத்துக்கான பிறை தமிழகத்தில் தென்படாததால் இன்ஷா அல்லா மே மாதம் செவ்வாய்க்கிழமை 19 ஆம் தேதி அன்று துல் ஹஜ் மாத முதல் பிறை என்று இஸ்லாமிய ஷரியத் முறைப்படி அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆகையால் வரும் 28 ஆம் தேதி வியாழக்கிழமை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும்” என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பக்ரீத் பண்டிகையன்று தமிழ்நாடு அரசு சார்பில் பொது விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

இந்த பண்டிகைக்கு பின்னால் ஒரு வரலாறு இருக்கிறது. நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்த இப்ராஹிம் நபி என்பவர், இறைவரிடம் தொடர் பிரார்த்தனை மேற்கொண்டார். பிரார்த்தனைக்கு பலனாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு இஸ்மாயில் என பெயரிட்டார். குழந்தை வளர்ந்து வந்த சமயத்தில் இப்ராஹிம் நபியின் கனவில் தோன்றிய இறைவன், அந்த குழந்தையை அறுத்து பலியிட வேண்டுமென கட்டளையிட்டு உள்ளார்

நீண்ட காலம் தவம் இருந்து பிறந்த குழந்தை என்பதால், அதன்மீது மிகுந்த பாசம் வைத்திருந்த போதிலும், இறைவனின் கட்டளையை நிறைவேற்ற வேண்டுமென தியாக மனப்பான்மையுடன் தனது மகனை வெட்டி பலியிட இப்ராஹிம் நபி முயன்றார். அப்போது இறைவன் அங்கு தோன்றி, அவரது மகனை அந்த இடத்தில் இருந்து அகற்றி அதற்கு பதிலாக ஆட்டை வைத்ததாகக் கூறப்படுகிறது.


தவமிருந்து பெற்றெடுத்த குழந்தையை இறைவனுக்காக பலி கொடுக்கச் சென்ற இப்ராஹிம் நபியின் தியாகத்தை போற்றும் விதமாக ஆண்டுதோறும் துல் ஹஜ் மாதத்தில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு மே 28 அன்று தமிழ்நாட்டில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: