உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 38 ஆக உயர்வு !!!
உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 34-ல் இருந்து 38 ஆக உயர்த்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்து உள்ளார் என மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்து உள்ளார்.
உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை தற்போது தலைமை நீதிபதியை சேர்த்து 34 ஆக உள்ளது. இதனை 38 ஆக உயர்த்துவதற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை குழு சமீபத்தில் முடிவு செய்து, அதை முன்மொழிந்தது. இதற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தற்போது ஒப்புதல் அளித்து உள்ளார். இதனை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால்-ம் இன்று உறுதிப்படுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் தளப்பக்கத்தில் கூறியிருப்பதாவது,
"1956 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை சட்டம், 2026-ல் திருத்தப்பட்டு நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்த அவசர திருத்த சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் முர்மு ஒப்புதல் அளித்து உள்ளார். ஆகையால், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 33 இல் (தலைமை நீதிபதி அல்லாமல்) இருந்து 37 ஆக உயர உள்ளது" என தெரிவித்து உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மே 5, 2026 அன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை, தலைமை நீதிபதியைச் சேர்க்காமல் 33-ல் இருந்து 37 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டது.
அதாவது, கூடுதலாக 4 புதிய நீதிபதிகளை நியமிக்க திட்டமிடப்பட்டது. இதை முன்னிட்டு 1956 ஆம் ஆண்டின் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை சட்டத்தை திருத்தி, 2026 திருத்த அவசர சட்டம் நாடாளுமன்ற கூட்டத்தில் முன்மொழியப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தில் அதிகரித்து வரும் பணிச்சுமை மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை முன் வைத்து இந்த திருத்த அவசரச் சட்டம் முன்மொழியப்பட்டது. இதற்கே தற்போது குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்து உள்ளார்.
நீதிபதிகளின் எண்ணிக்கையை பலப்படுத்துவதன் மூலம், வழக்குகளைத் தீர்த்து வைக்கும் செயல்திறன் மேம்படும் என்றும், விசாரணைகளில் ஏற்படும் தாமதங்கள் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, 2019 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை திருத்தச் சட்டத்தின் மூலம், நீதிபதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது. அப்போது, தலைமை நீதிபதியைச் சேர்க்காமல் 30 ஆக இருந்த எண்ணிக்கையை 33 என அதிகமாக்கப்பட்டது.

0 கருத்துகள்: