புதன், 20 மே, 2026

75 அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் இ.பி.எஸ் பக்கம்- அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேட்டி !!!

SHARE

 75 அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் இ.பி.எஸ் பக்கம்- அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேட்டி !!!

அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 75 மாவட்டச் செயலாளர்கள் ஆதரவுத் தெரிவித்து உள்ளதாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கூறி உள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 22 எம்.எல்.ஏ க்கள் கொண்ட அணியும், முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் 25 எம்.எல்.ஏ க்கள் கொண்ட அணியும் என இரு பிரிவாக பிரிந்து கிடக்கிறது. இந்த சூழலில், அ.தி.மு.க வின் அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான செம்மலை கட்சியில் இருந்து விலகி இருப்பது அ.தி.மு.க வினர் இடையே மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

த.வெ.க வுக்கு ஆதரவுத் தெரிவித்துள்ள அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்களின் கட்சிப் பதவிகளைப் பறித்து உள்ள இ.பி.எஸ், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில், அ.தி.மு.க கொறடா உத்தரவை மீறியதாக அ.தி.மு.க பொதுச்செயலாளர் இ.பி.எஸ் உள்ளிட்டோர் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தரப்பினர் சபாநாயகர் ஜெ.சி.டி.பிரபாகரிடம் நேரில் மனு அளித்து இருந்தனர்.

அதே போல், இ.பி.எஸ் தரப்பினரும் சபாநாயகரை நேரில் சந்தித்து மனு அளித்து இருந்தனர். அ.தி.மு.க வின் இருதரப்பினரின் மனுக்களும் ஆய்வில் இருப்பதாக சட்டப்பேரவை சபாநாயகர் தெரிவித்து உள்ளார். அதைத் தொடர்ந்து, சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்தது குறித்து விவாதிக்க அ.தி.மு.க பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து பெறும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த சூழலில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும், கலசப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி, "அ.தி.மு.க என்பது நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அல்ல. இது எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாயால் கோட்டையாக உருவாக்கப்பட்ட இயக்கம். இவர்களின் மறைவுக்குப் பின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க தொண்டர்களின் பாதுகாப்பிற்காக மிகச் சிறப்பான முறையில் கட்சியை வழிநடத்தி வருகிறார்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணி 53 இடங்களில் வெற்றி பெற்று 1 கோடியே 35 லட்சம் வாக்குகளுடன் பலமான எதிர்க்கட்சியாக உருவெடுத்து உள்ளது அ.தி.மு.க. ஆனால் தங்களது சொந்த மாவட்டங்களான விழுப்புரம் மற்றும் கோயம்புத்தூரில் ஏற்பட்ட படுதோல்விகளை மறைப்பதற்காகவே சி.வி.சண்முகமும், எஸ்.பி.வேலுமணியும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் இ.பி.எஸ் மீது வீண் பழி சுமத்துக்கின்றனர்.

கொங்கு மண்டலத்தில் 21 தொகுதிகளின் முழுப்பொறுப்பையும் ஏற்று இருந்த எஸ்.பி.வேலுமணி பரிந்துரைத்த நபர்களுக்கே இ.பி.எஸ் இரட்டை இலை சின்னத்தை வழங்கினார். ஆனால் அங்கு வெறும் 3 தொகுதிகளில் மட்டுமே அ.தி.மு.க வென்றுள்ளது. வேலுமணிக்கூட தொண்டாமுத்தூர் தொகுதியில் மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தான் தட்டுத் தடுமாறி வென்று உள்ளார். தங்களின் தேர்தல் தோல்விக்கு இ.பி.எஸ் எப்படி பொறுப்பாக முடியும்?

சி.வி.சண்முகத்திற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் மாநிலங்களவை எம்.பி. பதவிக்காலம் இருந்த போதிலும் தேர்தலில் வென்று சட்டமன்றத்திற்குள் நுழைந்து அமைச்சர் ஆகலாம் என்ற ஆசையில் தான் எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார். அவரது விருப்பத்திற்கு இணங்கி பெருந்தன்மையோடு எடப்பாடி பழனிசாமி அவருக்கு மயிலம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்தார். ஆனால் சி.வி.சண்முகத்தின் இந்த சுயநலப் போக்கு மற்றும் பதவி ஆசையால் தான் இன்று நாடாளுமன்ற மேலவையில் அ.தி.மு.க விற்கு கிடைக்க வேண்டிய அதிகாரப் பூர்வ அங்கீகாரமே பறிபோ உள்ளது.

வேட்பாளருக்கான ஏ மற்றும் பி படிவங்களில் கையெழுத்துப் போட்டவர் எடப்பாடி பழனிசாமி. புதுக்கோட்டையில் சி.விஜயபாஸ்கர் தவிர அனைத்துத் தொகுதிகளிலும் அதிமுக தோல்வி அடைந்து உள்ளது. கட்சி விதிகளுக்கு முரணாகச் செயல்பட்டதாலேயே அவர்கள் தற்காலிகமாகப் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளனர். எடப்பாடி பழனிசாமிக்கு அவர்களை நீக்கும் முழு அதிகாரமும் உள்ளது. 

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பா.ஜ.க தலைவர் உள்ளிட்ட பிற முக்கியத் தலைவர்கள் தங்களது தொகுதிகளில் தோல்வி அடைந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி மட்டுமே சேலம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் 98,000 வாக்குகள் வித்தியாசத்தில் பெரும் வெற்றி பெற்று உள்ளார். மேலும் சேலம் மாவட்டத்தில் 7 தொகுதிகளையும் வென்று தந்து உள்ளார்.

சென்னையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மொத்தமுள்ள 78 மாவட்டச் செயலாளர்களில் 75 பேர் நேரடியாகப் பங்கேற்று எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு முழு விசுவாசத்தையும், ஆதரவையும் தெரிவித்து கையெழுத்திட்டு உள்ளனர். மேலும் 95 சதவீதத்திற்கும் அதிகமான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி பக்கமே உள்ளனர்" என்றார்.

அதைத் தொடர்ந்து பேசிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும், வேதாரண்யம் தொகுதியின் சட்ட்டமன்ற உறுப்பினருமான ஓ.எஸ்.மணியன், "அ.தி.மு.க- தி.மு.க வுடன் ரகசியக் கூட்டணி வைக்க முயன்றதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறும் குற்றச்சாட்டுகளை 100 சதவீதம் மறுக்கிறோம். ஆதவ் அர்ஜுனாவின் அரசியல் காலத்தை கொஞ்சம் முன்னே சென்று பார்க்க வேண்டும். அவர் பல்வேறு கட்சிகளுக்கு மாறி வந்தவர், வி.சி.க வில் பயணித்தவர். 


திமுக அரசுக்கு எதிராகச் சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்ததால் தான் எங்கள் கூட்டணிக்கு 53 தொகுதிகள் கிடைத்து உள்ளன. அ.தி.மு.க வின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அனைத்தும் கட்சியின் நாளிதழான 'போர்வாள்' மூலமாக மட்டுமே வெளியிடப்படும்" என்றார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: