புதன், 20 மே, 2026

தமிழ்நாட்டின் அரசியல் போக்கை இப்போதும் தீர்மானிக்கும் இயக்கம் தி.மு.க தான் - மு.க.ஸ்டாலின் !!!

SHARE

 தமிழ்நாட்டின் அரசியல் போக்கை இப்போதும் தீர்மானிக்கும் இயக்கம் தி.மு.க தான் - மு.க.ஸ்டாலின் !!!

தமிழ்நாட்டின் அரசியல் போக்கை இப்போதும் தீர்மானிக்கும் இயக்கம் தி.மு.க தான் என்று அக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக தி.மு.க தொண்டர்களுக்கு அவர் இன்று எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

ஒவ்வொரு நாளும் அண்ணா அறிவாலயத்திற்கு திரண்டு வரும் உடன்பிறப்புகளின் முகம் கண்டு, உங்களில் ஒருவனான நான் ஊக்கம் பெறுகிறேன். என்னைக் கண்ட நொடியில், உடன்பிறப்புகள் தங்கள் உள்ளத்தை அழுத்தி கொண்டு இருந்த கவலையில் இருந்து விடுபடுகிறார்கள். அவர்களின் உணர்வு மழையில் நான் நனைகிறேன்.

திருச்சி, தஞ்சை ஆகிய இடங்களுக்குப் பயணம் செய்த போதும் உடன்பிறப்புகளின் உணர்வைக் கண்டேன். சமூக வலைதளங்களில் பதிவிடும் ஆயிரக் கணக்கான உடன்பிறப்புகளின் உணர்வுகளையும் கவனிக்கிறேன். தேர்தல் முடிவுகளைக் கடந்த தி.மு.க உணர்வே நம் வலிமை.

வெற்றி பெற்றால் வெறிக் கூத்தாடுவதுமில்லை; தோல்வி கண்டால் துவண்டு விடுவதுமில்லை. இது நம் உயிர்நிகர் தலைவர் கருணாநிதி நமக்குக் கற்றுத் தந்த அரசியல் பாடம். அண்ணாவின் மறைவுக்குப் பிறகு 50 ஆண்டுகாலம் இந்த இயக்கத்தைக் கட்டிக்காத்த மகத்தான தலைவரான கருணாநிதி தேர்தல் களத்தில் பெறாத வெற்றியுமல்ல, அடையாத தோல்வியுமல்ல. தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும் அவரது பயணமும் தி.மு.க வின் பயணமும் ஓய்வதேயில்லை.

தோல்வி அடைந்த தேர்தல்களுக்குப் பிறகு தான், சுவரில் அடித்த பந்து போல தி.மு.க அதிக வேகத்துடன் திரும்பவும் (bounce back) களத்திற்கு வரும். ஏனென்றால், திராவிட முன்னேற்றக் கழகம் என்பது இனம் - மொழி காத்திடும் சமூகநீதி இயக்கம். தமிழ் மொழிக்காகத் தன்னுயிரைத் தந்த தியாகத் தொண்டர்களின் இயக்கம். தமிழ்நாட்டின் நலன் காக்க சிறை கண்ட தலைவர்களின் இயக்கம். துரோகங்களை எதிர்கொண்டு முறியடித்த இயக்கம். தோல்வியைப் படிக்கட்டுகளாக்கித் திரும்பத், திரும்ப வென்று காட்டும் வலிமை கொண்ட இயக்கம்.

கருணாநிதி தன் உடன்பிறப்புகளுக்காக முரசொலியில் எழுதிய கடிதங்கள் பலவற்றில் திமுகவினர் பற்றி அடிக்கடி குறிப்பிடுவார், “அற்ற குளத்து அறுநீர்ப் பறவை போல இல்லாமல், கொட்டியும் ஆம்பலும் போல எப்போதும் உடன் இருப்பவர்கள் தான் என் உண்மையான உடன்பிறப்புகள்” என்று சொல்வார்.

கோடைக் காலத்தில் குளம் வற்றியதும், அதுவரை அதில் தண்ணீர் குடித்து வந்த பறவைகள் வேறு இடம் தேடிப் போய்விடும். இது மற்றவர்கள் இயல்பு. ஆனால், குளத்தின் கரையோரமாக வளர்ந்த செடி கொடிகளான கொட்டி, ஆம்பல் போன்றவை எந்த நிலையிலும் அந்தக் குளத்துடனேயே தான் இருக்கும். இதுதான் தி.மு.க உடன்பிறப்புகளின் உணர்வு. அந்த உணர்வை நமக்கு ஊட்டி வளர்த்தவர் கருணாநிதி. அவர் ஊட்டிய உணர்வு தான் இன்றும் நம்மை பெரியார் - அண்ணா கொள்கைப் பார்வையுடன் வழிநடத்துகிறது.

தமிழ்நாட்டின் அரசியல் போக்கைத் தீர்மானிக்கும் இயக்கமாக இப்போதும் தி.மு.க.வாக தான் இருக்கிறது. அதன் வலிமையைப் பெருக்குகின்ற வகையில், கட்சியின் அமைப்பு முறையில் மிகப்பெரிய அளவிலான மாற்றங்களைச் செய்வதற்கு உங்களில் ஒருவனான நான், உரிய ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறேன். உடன்பிறப்புகள் அனைவரின் பங்களிப்பும் சிறந்த முறையில் வெளிப்படும் இயக்கமாக தி.மு.க திகழும்.

உங்களால் கட்சியின் தலைவராக நான் பொறுப்பேற்று இருந்தாலும், உங்களைப் போல நானும் கருணாநிதியின் உடன்பிறப்பு தான். திமுகவின் முதன்மைத் தொண்டன் என்ற உணர்வுடனேயே என் பணியினைத் தொடர்கிறேன். நம் உயிர்நிகர் தலைவர் கருணாநிதியின் நேரில் கற்ற அரசியல் பாடத்தை நெஞ்சில் ஏந்தி, நம் கழகப் பயணம் என்றென்றும் தொடர்ந்திடும்.

கருணாநிதி பிறந்த ஜூன் 3-ஆம் நாள் வந்தாலே ஒவ்வொரு ஆண்டும் நம் உடன்பிறப்புகள் அனைவருக்கும் புத்துணர்வு ஏற்படும். சோர்வு – கவலை - விரக்தி எல்லாவற்றையும் ‘கலைஞர்’ எனும் குருதியுடன் கலந்த உணர்வு விரட்டியடித்து, களத்தில் நம்மை ஊக்கத்துடன் பணியாற்றச் செய்யும். கருணாநிதியின் உடன்பிறப்புகளான நமக்கு ஊக்கமும் உற்சாகமும் தருவதற்காகவே வரவிருக்கிறது, ஜூன் 3.

கருணாநிதியின் 103-ஆவது பிறந்த நாளான வரும் ஜூன் 3-ஆம் நாள், நமக்கான புத்தெழுச்சி நாளாக அமையட்டும். தமிழ்நாடு முழுவதும் அவரது பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாடுவோம். கிளைகள் எங்கும் கருப்பு - சிவப்பு இருவண்ணக் கொடி உயர்ந்து பறக்கட்டும். நலிந்தோருக்கும் - ஏழைகளுக்கும் உதவி செய்யும் நிகழ்வுகள் நடக்கட்டும். 75 ஆண்டுகளைக் கடந்த இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சிக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மூத்த முன்னோடிகளுக்கு உதவிடும் வகையில் கருணாநிதியின் பிறந்தநாளை நிர்வாகிகள் கொண்டாட வேண்டும்.

கடந்த இரண்டு வாரங்களாக தி.மு.க வில் புதிய இளைஞர்களின் பங்களிப்பை சமூக வலைதளங்களில் அதிகளவில் காண்கிறேன். தகவல் தொழில்நுட்பத்திற்கான கொள்கையை வகுத்து, தமிழ் இணைய மாநாட்டினை நடத்தி, இன்றைய டிஜிட்டல் பெரும்பாய்ச்சலுக்கு அன்றே வழிவகுத்த கருணாநிதியை இளைய தலைமுறை நினைவில் கொண்டு, எக்ஸ் (ட்விட்டர்) - இன்ஸ்டாகிராம் - யூடியூப் - ஃபேஸ்புக் - வாட்ஸ்அப் என அனைத்து தளங்களிலும், நவீனத் தமிழ்நாட்டை வடிவமைத்த சிற்பியான கருணாநிதியின் வரலாற்றுச் சாதனைகளைக் காணொளிகளாகப் பரப்புங்கள்.

தி.மு.க.வினரான நம் பயணம் ஒரு நாளும் ஓயாது, என்றென்றும் தொடரும் என ஜூன் 3 அன்று கருணாநிதியின் மீது ஆணையிட்டு உறுதியேற்போம். தமிழ்நாட்டின் நலன் காக்க மேலும் அதிகமாக உழைத்திடுவோம்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: