தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி விவகாரம்; அமலாக்கத் துறையின் வழக்கு ரத்து !!!
தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்ட விவகாரத்தில் சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் மீது அமலாக்கத் துறை செய்த வழக்குப் பதிவை ரத்துச் செய்து சென்னை சி.பி.ஐ நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது.
கடந்த 2011-2012 மற்றும் 2014-2015 ஆகிய ஆண்டுகளுக்கு இடையே இந்தோனேசியாவில் இருந்து தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்ததன் மூலம் அரசுக்கு 487 கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியதாக கோஸ்டல் எனர்ஜி நிறுவனத்தின் இயக்குநரான அகமது ஏ.ஆர்.புகாரி, அந்த நிறுவனம், கோஸ்டல் எனர்ஜென், துபாயில் உள்ள நிலக்கரி மற்றும் எண்ணெய் நிறுவனங்கள், மொரீஷியசில் உள்ள முத்தியாரா எனர்ஜி ஹோல்டிங்ஸ், பிரிசியஸ் எனர்ஜி ஹோல்டிங் என்ற அயல்நாட்டு நிறுவனம் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக கடந்த 2018- ஆம் ஆண்டு சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்தது.
இந்த முறைகேட்டின் மூலம் கிடைத்த மோசடி பணத்தை வெளிநாடுகளுக்கு சட்டவி ரோதமாகப் பரிமாற்றம் செய்த குற்றத்திற்காக மத்திய அமலாக்கத் துறையினரால் அகமது ஏ.ஆர்.புகாரி, கடந்த 2022- ஆம் ஆண்டு மார்ச்சில் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து சி.பி.ஐ பதிவுச் செய்த இந்த வழக்கின் அடிப்படையில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த அமலாக்கத் துறை, சென்னை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்நிலையில் அகமது ஏ.ஆர்.புகாரிக்கு எதிராக சி.பி.ஐ பதிவு செய்து இருந்த வழக்கில் தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்ததற்கான எந்த ஆதாரங்களும் இல்லை. எந்தவொரு முடிவுக்கும் வர முடியவில்லை என சி.பி.ஐ தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த 2025- ஆம் ஆண்டு தொழிலதிபர் அகமது வி.ஆர்.புகாரிக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டு இருந்தது.
அதன் அடிப்படையில், அகமது ஏ.ஆர்.புகாரி மற்றும் இந்த முறைகேட்டில் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் 2 நிறுவனங்களுக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்து இருந்தது.
இந்த சூழலில் நான்கு நிறுவனங்களுக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கை விசாரித்த சென்னை சி.பி.ஐ நீதிமன்ற நீதிபதி ஜெ.ஓம்.பிரகாஷ், இந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ பதிவுச் செய்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்றமும், அமலாக்கத் துறை வழக்கை சென்னை உயர்நீதிமன்றமும் ரத்து செய்து உள்ளதால் நான்கு நிறுவனங்களுக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கை ரத்து செய்து தீர்ப்பளித்து உள்ளார்.

0 கருத்துகள்: