செவ்வாய், 19 மே, 2026

கீழடி அகழாய்வில் முழுமையான வட்டப்பானை கண்டெடுப்பு !!!

SHARE

 கீழடி அகழாய்வில் முழுமையான வட்டப்பானை கண்டெடுப்பு !!!

கீழடியில் நடைபெற்று வரும் 11-ம் கட்ட அகழாய்வில் முழுமையான வட்டப்பானை, சாயக் கிண்ணங்கள் மற்றும் செங்கல் கட்டுமானங்கள் கண்டறியப்பட்டு உள்ளன.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் இந்தியத் தொல்லியல் துறை மற்றும் தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை சார்பில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழர் நாகரிகத்தின் தொன்மையையும், வைகை நதிக்கரை நாகரிகத்தின் செழுமையையும் உலகிற்குப் பறை சாற்றும் வகையில் இதுவரை ஆயிரக் கணக்கான பொருட்கள் கிடைத்து உள்ளது. அதன் ஒருபகுதியாக கீழடியில் முழு வடிவிலான வட்டப்பானை கண்டெடுக்கப்பட்டு இருப்பது தொல்லியல் ஆர்வலர்கள் இடையே பெரும் கவனத்தை பெற்று உள்ளது.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 11 ஆம் கட்ட அகழாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், கீழடியில் உள்ள கஜேந்திரன் என்பவரது நிலப்பகுதியில் மார்ச் 18 ஆம் தேதி முதல் அகழாய்வு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது வரை ஏழு குழிகள் தோண்டப்பட்டு உள்ள நிலையில், பல்வேறு தொன்மைச் சான்றுகள் வெளிச்சத்துக்கு வந்து உள்ளன.

குறிப்பாக, அகழாய்வில் செங்கல் கட்டுமானங்கள், சாயக் கிண்ணங்கள், குறுகிய வாய் கொண்ட சுடுமண் பானைகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கண்டறியப்பட்டு உள்ளன. அதிலும், உருண்டை வடிவிலான பானைகள் தொடர்ந்து கிடைத்து வந்த நிலையில், தற்போது முழுமையான சிறிய வடிவிலான வட்டப்பானை கிடைத்து இருப்பது முக்கியமாக பார்க்கப்படுகிறது.

ஏனென்றால், 5 ஆம் கட்ட அகழாய்வின் போது வித்தியாசமான வடிவமைப்பில் வட்ட வடிவிலான பானை ஒன்று மேற்பகுதி சேதம் அடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அது முழுமையாக இல்லாததால் அதன் பயன்பாடு குறித்து ஆய்வாளர்கள் தெளிவான முடிவுக்கு வர முடியாத சூழல் நிலவியது. இந்நிலையில், 11 ஆம் கட்ட அகழாய்வில் அதேபோன்ற வடிவமைப்பில் முழுமையான வட்டப்பானை கிடைத்து இருப்பதால், அதன் பயன்பாடு மற்றும் காலப்பின்னணி குறித்து மேலும் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.

மேலும், வட்டப்பானை அருகே சேதம் அடைந்த சாயக் கிண்ணங்கள், கருப்பு நிறப் பானை மற்றும் இருவண்ண வாய் அகன்ற சுடுமண் பாத்திரங்களும் கண்டறியப்பட்டு உள்ளன. அகழாய்வில் தோண்டப்பட்ட 7 குழிகளிலும் செங்கல் கட்டுமானங்கள் தொடர்ந்து கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் சிந்து சமவெளி நாகரீகத்திற்கு இணையான கட்டடக் கலையும், நகரமைப்பும் கீழடியில் பயன்பாட்டில் இருந்து இருக்கலாம் என்ற கருத்து மீண்டும் வலுப்பெற்று உள்ளதாக தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: