உணவு பார்சல் கழிவுகளை குப்பைத் தொட்டியில் போடாமல் பஸ் ஸ்டாண்டுக்குள் காலால் தள்ளிவிடும் நடத்துனர் ; கேள்வி எழுப்பும் சமூக ஆர்வலர் - செல்போன் வீடியோ காட்சிகள் வைரல் !!!
கோவை மாநகரப் பகுதியில் உக்கடம், காந்திபுரம், சிங்காநல்லூர், மேட்டுப்பாளையம் சாலை எனச் சுமார் ஏழு முக்கியப் பேருந்து நிலையங்கள் மக்கள் பயன்பாட்டில் இயங்கி வருகின்றன. இதில் மிகக் குறுகிய காலத்திற்கு முன்பு தான் உக்கடம் பகுதியில் அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்டது. ஆனால், இந்த பேருந்து நிலையத்தை அசுத்தப்படுத்துவதில் பயணிகளை விட, அங்கு இயக்கப்படும் பேருந்துகளின் ஓட்டுநர்கள் (டிரைவர்கள்) மற்றும் நடத்துனர்களே முன்னிலையில் இருப்பது தான் தற்பொழுது பெரும் சோகம்.
இவர்கள் தாங்கள் உண்ணும் உணவுக் கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கவர்களைப் பேருந்துகள் வந்து நிற்கும் "பே" (Bay) பகுதியிலேயே கண்டபடி வீசி எறிந்து விட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டு உள்ளனர்.
இதன் உச்சக்கட்டமாக, பேருந்து நிலைய வளாகத்திற்குள் இருக்கும் பசுமையான பூங்காவின் அருகே உள்ள மதில் சுவர் பகுதியை, ஊழியர்கள் சிலர் தங்களது "திறந்தவெளி கழிப்பிடமாக" மாற்றி அநாகரிகமாகச் செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பேருந்து நிறுத்தத்தில் தனது பேருந்தை நிறுத்தி விட்டு, பொதுமக்கள் முகம் சுளிக்கும் வகையில் அங்கு இருந்த மதில் சுவரில் அரசுப் பேருந்து நடத்துனர் ஒருவர் பட்டப்பகலில் சிறுநீர் கழித்து உள்ளார்.
இந்த அநாகரிகச் செயலைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பயணி ஒருவர், தனது செல்போனில் இந்த வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
"லட்சக் கணக்கில் மக்கள் வரிப் பணத்தைச் செலவழித்துக் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை இப்படித்தான் பராமரிப்பதா ? பொதுமக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய அரசுப் பேருந்து ஊழியர்களே இவ்வாறு பொதுவெளியில் அநாகரிகமாகச் செயல்படலாமா ?" என அந்த வீடியோ பதிவில் சமூக ஆர்வலர்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவகாரத்தில், கோவை மாநகராட்சி மற்றும் அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பேருந்து நிலையத்தின் தூய்மையை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

0 கருத்துகள்: