வியாழன், 21 மே, 2026

மும்மொழி கொள்கையை அனுமதித்தால் மீண்டும் ஒரு மொழிப்போர் உருவாகும் - வைகோ எச்சரிக்கை !!!

SHARE

 மும்மொழி கொள்கையை அனுமதித்தால் மீண்டும் ஒரு மொழிப்போர் உருவாகும் - வைகோ எச்சரிக்கை !!!

மத்திய அரசு அழுத்தம் கொடுத்தாலும் மும்மொழி கொள்கையை அனுமதிக்க கூடாது. அப்படி செய்தால் மீண்டும் ஒரு மொழிப்போர் உருவாகும் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ எச்சரித்து உள்ளார்.

ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் மதுரை அழகர் கோயில் சாலையில் உள்ள தமிழ்நாடு உணவகத்தில் ம.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று (மே 21) நடைபெற்றது.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த வைகோ, "பிஎம் ஸ்ரீ திட்டத்தை மத்திய அரசு திணிக்க முயற்சிக்கிறது. அதனை தமிழக அரசு தடுக்க வேண்டும். முதலமைச்சர் விஜய், தமிழுக்காக உயிரிழந்தவர்கள், சிறைவாசம் அனுபவித்தவர்களின் தியாகத்தை மனதில் வைக்க வேண்டும். மத்திய அரசு அழுத்தம் கொடுத்தாலும் மும்மொழி கொள்கையை அனுமதிக்க கூடாது. அப்படி செய்தால் மீண்டும் ஒரு மொழிப்போர் உருவாகும்.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் காட்டுப் பன்றிகளின் தொல்லை அதிகமாக உள்ளது. அவற்றை காட்டு விலங்குகள் பட்டியலில் இருந்து அகற்ற வேண்டும். மேலும், காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த வேலிகள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தை நீதிமன்றம் வாயிலாக நாங்கள் தான் தடுத்து நிறுத்தினோம். அனில் அகர்வால், பிரதமருக்கு நெருக்கமானவர். வேறு வடிவில் காப்பர் என்ற பெயரில் மீண்டும் ஸ்டெர்லைட் வந்தால் அனைவரையும் ஒன்று திரட்டி போராடுவோம். நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தை தனியாருக்கு கொடுக்க விடாமல் தடுத்தது நான் தான். கருவேல மரங்களை நீக்கும் பணிகளில் நாங்கள் ஈடுபட உள்ளோம்.

ஆளுநர் நிகழ்ச்சிகளில் வந்தே மாதரத்தை திணிக்கிறார்கள். தமிழக அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலை திணிக்க கூடாது என அரசை வலியுறுத்துகிறேன். இந்த ஆட்சி கூட்டணி ஆட்சியாக உள்ளது. கூட்டாட்சி தத்துவத்துக்கு இடையூறு ஏற்படாமல், மாநில சுயாட்சியை பெறும் வகையில் அரசு இருக்க வேண்டும்.

திருமாவளவனின் கருத்துக்கு நான் விளக்கம் தர இயலாது. நான் அவர்களின் கருத்துக்கு விளக்க உரை எழுதுபவன் அல்ல. த.வெ.க-வின் வெற்றி, வரலாற்றில் இருக்கும். ம.தி.மு.க வாக்கு வாங்கி அப்படியே உள்ளது. தமிழகத்தின் நன்மைக்காக மதிமுக தொடர்ந்து செயல்படுகிறது. 17 நாட்களில் தவெக பல நல்ல காரியங்களை செய்து உள்ளது.

தி.மு.க அதன் நிலைப்பாட்டில் சரியாக உள்ளது. காங்கிரஸ் இருக்கும் இடம் தான் மதச்சார்பின்மை இருப்பதாக கூறுவது சரியல்ல. தி.மு.க-அ.தி.மு.க கூட்டணி பேச்சுவார்த்தை பற்றி எனக்கு தெரியாது. வாஜ்பாய் மத்திய அமைச்சர் பதவி கொடுக்கிறேன் என்ற போதே வேண்டாம் என சொன்னவன் நான். என்றைக்கும் அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட மாட்டேன்" என்றார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: