த.வெ.க வுக்கு வாக்களிக்கச் சொல்லி குழந்தைகளுக்கு வேண்டுகோள் விடுத்த விவகாரம்: விஜய் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு !!!
சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, த.வெ.க வுக்கு வாக்களிக்க தங்களது பெற்றோரை வற்புறுத்த வேண்டும் என்று பிள்ளைகளுக்கு, அக்கட்சியின் தலைவர் விஜய் வேண்டுகோள் விடுத்தது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கில் இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
கடலூர் மாவட்டம், புவனகிரியைச் சேர்ந்த வழக்கறிஞர் வாசுகி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளார். அதில், 'நடந்து முடிந்த 17- வது சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் நடைமுறையின் புனிதம் சமரசம் செய்யப்பட்டு உள்ளது. பிரச்சாரத்தின் போது வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தது, சிறுவர்களை சுரண்டியது என தி.மு.க, அ.தி.மு.க, தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சியினர் வாக்காளர்களிடம் செல்வாக்கை செலுத்தி உள்ளனர்.
கடந்த ஏப்ரல் 21- ஆம் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தற்போதைய முதலமைச்சரும், த.வெ.க தலைவருமான விஜய், த.வெ.க வுக்கு வாக்களிக்கும்படி பெற்றோருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என குழந்தைகள் மீது உணர்வுப் பூர்வமாக செல்வாக்கை செலுத்தி உள்ளார். இது பரவலாக பத்திரிகைகளிலும், சமூக ஊடகங்களிலும் வெளியாகி உள்ளது.
குறிப்பாக மயிலாப்பூர், ஆலங்குளம், திருமங்கலம் உள்ளிட்ட தொகுதிகளில் பணப்பட்டுவாடா நடந்து உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. எனினும் இந்திய தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தேர்தல் நடவடிக்கைகளில் குழந்தைகள் மீது செல்வாக்கை செலுத்தியது, பணப்பட்டுவாடா உள்ளிட்ட ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டது தொடர்பாக தி.மு.க, அ.தி.மு.க, த.வெ.க உள்ளிட்ட கட்சிகளுக்கு எதிராக சுதந்திரமான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்" என கோரி உள்ளார்.
இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று (மே 21) விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த வழக்கு குறித்து பதிலளிக்கும்படி இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் அ.தி.மு.க, தி.மு.க, த.வெ.க ஆகிய கட்சிகளுக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் மே 29- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

0 கருத்துகள்: