திங்கள், 25 மே, 2026

புதிய கரகாட்ட கோஷ்டிக்கு மக்கள் விரைவில் பாடம் புகட்டுவார்கள்; தவெக தலைவர் விஜய் மீது இபிஎஸ் கடும் விமர்சனம் !!!

SHARE

 புதிய கரகாட்ட கோஷ்டிக்கு மக்கள் விரைவில் பாடம் புகட்டுவார்கள்; தவெக தலைவர் விஜய் மீது இ.பி.எஸ் கடும் விமர்சனம் !!!

அடுத்தவர்களின் முதுகில் ஏறி பயணம் செய்வதில் தான் தங்களின் வாழ்வு இருக்கிறது என்று செயல்படும் புதிய கரகாட்ட கோஷ்டிக்கு தமிழக மக்கள் விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று முதலமைச்சர் விஜய்யையும், த.வெ.க வையையும் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்து உள்ளார்.

அ.தி.மு.க வைச் சார்ந்த மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ ஜெயக்குமார், தாராபுரம் தொகுதி எம்.எல்.ஏ சத்யபாமா ஆகியோர் இன்று (மே 25) திடீரென்று சட்டப்பேரவையின் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை நேரில் சந்தித்து தங்களது ராஜினாமா கடிதத்தை வழங்கினர்.

அதன் பின்னர், தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவைச் சந்தித்து தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். அ.தி.மு.க எம்.எல்.ஏ க்கள் மூன்று பேரையும் அமைச்சர் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். இதற்கிடையே, அ.தி.மு.க எம்.எல்.ஏ க்கள் மூன்று பேரின் ராஜினாமாவையும் ஏற்பதாக சபாநாயகர் அறிவித்து உள்ளார்.

அ.தி.மு.க எம்.எல்.ஏ க்களின் ராஜினாமா அ.தி.மு.க கட்சியினர் இடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே, அடுத்தவர்களின் முதுகில் ஏறி பயணம் செய்வதில் தான் தங்களின் வாழ்வு இருக்கிறது என்று செயல்படும் புதிய கரகாட்ட கோஷ்டிக்கு தமிழக மக்கள் விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

இதுதொடர்பாக அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு உள்ள அறிக்கையில், "சுத்த சுயம்பிரகாச தூய சக்தி என்று தன்னைத் தானே அறிவித்துக் கொண்டு அரசியலில் குதித்த திரையுலகப் பிரபலம், மக்களின் முழுமையான ஆதரவு தனக்கு கிடைக்கவில்லை என்ற நிலையில், தான் அமைத்த பொய்க்கால் குதிரை ஆட்சியைக் காப்பாற்ற பல்வேறு தகிடுதத்த அரசியலில் ஈடுபட்டு வருவது வெட்கக்கேடான ஒன்றாகும்.

தமிழக அரசியல் வரலாற்றிலேயே இல்லாத வகையில், மோசமான ஒரு குதிரை பேர அரசியலை நடத்தி, தான் அமைத்த மைனாரிட்டி ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள முனைவது கண்டு தமிழக மக்கள் எள்ளி நகையாடுகின்றனர்.

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 126 தொகுதி மக்கள் தனக்கு எதிராக வாக்களித்து உள்ளார்கள் என்பதை சிறிதும் உணராமல், தான் எந்தக் கட்சியை தீய சக்தி என்று வர்ணித்து களமாடினாரோ அந்தக் கட்சியின் தயவில் வெற்றி பெற்ற ஒருசில கட்சிகளை தேடிப்போய் ஆதரவு கேட்டதும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சில சட்டமன்ற உறுப்பினர்களை சோஃபாவோடு போய் 'புஷ்பா' பட பாணியில் ஆதரவு பெற்றதும் ஒரு நேர்மையான அரசியல்வாதியின் செயலா ? என்று வாக்களித்த மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது விசுவாசம் கொண்டு உள்ள உண்மைத் தொண்டர்களின் கடுமையான உழைப்பால், தியாகத்தால் வெற்றி பெற்ற 3 சட்டமன்ற உறுப்பினர்கள் இடம் இருந்து, கோட்டையின் கீழ்தளத்தில் உள்ள சபாநாயகர் அறையில் ராஜினாமா கடிதம் எழுதி வாங்குவதும், அடுத்த 10 நிமிடத்தில் முதல் மாடியில் உள்ள த.வெ.க அமைச்சர் ஒருவரின் அறையில் அவர்களுடைய கைகளில், கட்சி உறுப்பினர் அட்டை வழங்குவதும் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஓரங்க சதி நாடகத்தை, குதிரை பேரத்தை அம்பலப்படுத்தி உள்ளது.

தற்போதைய த.வெ.க அரசின் இதுபோன்ற தகிடுதத்த வேலைகளை சந்திப்பது தமிழக அரசியலில் புதிதான அணுகுமுறையாகும். எத்தனையோ துரோகச் செயல்களையும், முதுகில் குத்திய நிகழ்வுகளையும் தாங்கித் தான் மக்கள் பணியாற்றி வருகிறது 'அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' என்கிற மாபெரும் பேரியக்கம். இந்த அரசிற்கு முட்டு கொடுக்கக் கூடிய சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும், தற்போது ராஜினாமா செய்து உள்ளவர்களாக இருந்தாலும், திரைப் பிரபலத்தின் சின்னத்திற்கு எதிராக மக்கள் வாக்களித்து தான் வெற்றி பெற்று உள்ளார்கள் என்பதை மறந்து விடக் கூடாது.

இதுபோன்ற துரோகச் செயல்களால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அசைத்துப் பார்க்கலாம்; வீழ்த்திவிடலாம்; அந்த இடத்திற்கு நாம் வந்துவிடலாம் என்று யாராவது நினைத்தால் அது பகல் கனவாகவே முடியும். 'ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை' என்பது போல, 'பழைய மந்தையில் புதிய கள்' என்பது போல, அடுத்தவர்களின் முதுகில் ஏறி பயணம் செய்வதில் தான் தங்களின் வாழ்வு இருக்கிறது என்று செயல்படும் புதிய கரகாட்ட கோஷ்டிக்கு தமிழக மக்கள் விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள்" என்று குறிப்பிட்டு உள்ளார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: