வெள்ளி, 22 மே, 2026

கோவை பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரியில் விடுதி அறையில் பி.பார்ம் இறுதியாண்டு மாணவர் தூக்கிட்டு தற்கொலை - உடலை கைப்பற்றி காவல்துறை விசாரணை !!!

SHARE

 கோவை பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரியில் விடுதி அறையில் பி.பார்ம் இறுதியாண்டு மாணவர் தூக்கிட்டு தற்கொலை - உடலை கைப்பற்றி காவல்துறை விசாரணை !!!

 கோவை, அவிநாசி சாலையில் உள்ள பிரபல பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த மருத்துவக் கல்வி மாணவர் ஒருவர், கல்லூரி விடுதி அறையிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த பீளமேடு போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாலாஜி (22) என்ற மாணவர் கோவை பீளமேடு பகுதியில் உள்ள பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரியில் பி.பார்ம் (B.Pharm) நான்காம் ஆண்டு படித்து வந்து உள்ளார். கல்லூரி வளாகத்தில் உள்ள மாணவர் விடுதியில் தங்கித் தனது படிப்பைத் தொடர்ந்து வந்து உள்ளார். இந்நிலையில், இன்று காலை அவரது விடுதி அறை நீண்ட நேரமாகத் திறக்கப்படாமல் இருந்ததால் உடன் தங்கி இருந்த சக மாணவர் சந்தேகமடைந்த கதவைத் தட்டி உள்ளனர். உள்ளே இருந்து எவ்வித பதிலும் வராததால், அதிர்ச்சி அடைந்து சக மாணவர்கள் உதவியுடன் கதவை உடைத்துப் பார்த்த போது மாணவர் பாலாஜி விபரீத முடிவு எடுத்துத் தற்கொலை செய்து கொண்டு இருப்பது தெரியவந்தது.

​இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர், உடனடியாக பீளமேடு காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர்.

 சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவரின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 மருத்துவக் கல்வி படித்து வந்த மாணவர், படிப்பின் காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலால் இந்த விபரீத முடிவை எடுத்தாரா ? அல்லது குடும்பப் பிரச்சினையா ? அல்லது காதலா எனப் பல்வேறு கோணங்களில் பீளமேடு போலீஸார் வழக்கு பதிவு செய்து தங்களது விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: