மீண்டும் வருவேன்; தேர்தல் தோல்வி எதிரொலியாக அரசியல் ஓய்வை அறிவித்த பி.டி.ஆர் !!!
தேர்தல் தோல்வி எதிரொலியாக அரசியலில் இருந்து சிறிது காலம் ஓய்வு எடுப்பதாக அறிவித்து உள்ளார் தி.மு.க முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்.
தமிழக அரசியலில் மிக பாரம்பரியமான குடும்பத்தைச் சேர்ந்தவர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன். இவரது தாத்தா பி.டி. ராஜன், தந்தை பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் பின்னர் மூன்றாம் தலைமுறையாக அரசியலில் கால் பதித்தவர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன். 2016 மற்றும் 2021 ஆகிய இரண்டு சட்டமன்றத் தேர்தல்களிலும் மதுரை மத்திய தொகுதியில் இருந்து வெற்றி பெற்றவர்.
கடந்த தி.மு.க ஆட்சியில் தமிழக நிதி மற்றும் மனித வளத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்த இவர், ஒரு ஆடியோ சர்ச்சைக்கு பின்னர் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டார்.
மதுரை மாநகராட்சியில் வரி முறைகேடு விவகாரத்தில் மேயர் மற்றும் மண்டலத் தலைவர்கள், மாநகராட்சி அதிகாரிகள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்ய நேரிட்டது. அத்துடன் பி.டி.ஆர் பழனிவேல்ராஜனின் செல்வாக்கைப் பயன்படுத்தி அவரது உதவியாளர் ஜெய்பாலாஜி மோசடி செய்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. இந்த விவகாரம் பி.டி.ஆரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக அமைந்து விட்டது.
இந்நிலையில், இந்தாண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க வேட்பாளர் மதார் பதூருதீனிடம் 19,128 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். கட்சிகள் கடந்து அனைவரிடமும் நல்ல மதிப்பையும், ஆதரவையும் பெற்றவர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்.
மதுரை மாநகராட்சியின் செயல்பாடுகள் முடங்கிப் போனதும், பி.டி.ஆரை வீழ்த்த தி.மு.க வுக்கு உள்ளே இயங்கிய எதிர்ப்பாளர்களும், மத்திய தொகுதியில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்களில் முனைப்புக் காட்டாத அதிகாரிகளும் தான் பி.டி.ஆர் என்ற பெரும் ஆளுமையை தோற்கடிக்கப்பட்டதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.
இந்நிலையில், தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் நான்கு பக்கங்கள் கொண்ட ஒரு அறிக்கையை பி.டி.ஆர் வெளியிட்டு உள்ளார்.
அதில் அவர் வகித்த பதவிகளில் அவரின் செயல்பாடுகள் குறித்தும், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் பேசி உள்ளார்.
குறிப்பாக சட்டமன்றத் தேர்தல் தோல்வி குறித்து குறிப்பிட்ட அவர், “இந்த தேர்தலில் நான் தோல்வி அடைவேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. என்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க மற்றும் த.வெ.க வேட்பாளர்கள் இருவரின் வேட்பு மனுவிலும் தவறான தகவல்கள் இடம் பெற்று இருந்தன.
த.வெ.க வேட்பாளர் மாதர் பதூருதீன் வேட்பு மனுவில் அவரது மனைவின் பான் எண் குறைவான எண்களுடன் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதே போன்று, தி.மு.க சார்பாக போட்டியிட்ட புதிய நீதி கட்சியின் வேட்பாளர் சுந்தர்.சி வேட்பு மனுவிலும் அவரது நிறுவனங்களின் பெயர்கள் முறையாக குறிப்பிடப்படவில்லை. இருப்பினும், இதுகுறித்து நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை” என குறிப்பிட்டு உள்ளார்.
மேலும், புதிதாக பொறுப்பேற்று உள்ள த.வெ.க ஆட்சிக்கும், நிதித்துறை அமைச்சராக பொறுப்பேற்று உள்ள கே.ஏ.செங்கோட்டையனுக்கும் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
அறிக்கையின் கடைசி பக்கத்தில், “சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய 10 ஆண்டுகள், நாள், நேரம் பாராமல் தொடர்ந்து சுமக்க வேண்டிய ஒரு பொறுப்பாக அமைந்து இருந்தது. அத்தகைய காலத்திற்குப் பிறகு, ஒரு குடிமகனாக, எனது நேரம் மற்றும் கால அட்டவணை முழுவதையும் நானே தீர்மானிக்கும் சுதந்திரத்துடன், சில வாரங்கள் ஓய்வெடுக்க ஆவலுடன் காத்து இருக்கிறேன்.
இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களுக்குச் சென்று உரையாற்றவும், நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் வந்து இருந்த பல அழைப்புகளை, முன்பு நேரமின்மையால் என்னால் ஏற்க இயலவில்லை. இப்போது அவற்றை என்னால் ஏற்றுக்கொள்ள முடியும்.
இந்த இடைவேளையானது அமெரிக்கா, ஐரோப்பா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா ஆகிய இடங்களில் இருந்து நீண்ட காலமாக வந்து கொண்டு இருந்த அழைப்புகளுக்குப் பதிலளிக்க எனக்கு வாய்ப்பளிக்கிறது. முன்னரே குறிப்பிட்டது போல, 'Harper Collins' பதிப்பகத்துடன் இணைந்து நான் வெளியிட ஒப்பந்தம் செய்து உள்ள ஒரு புத்தகத்தை எழுதுவதற்கான கால அட்டவணையில் நான் ஏற்கனவே பின்தங்கி உள்ளேன்.
எனவே, இந்த நேரத்தை அந்தப் புத்தகத்தை எழுதுவதற்காகப் பயன்படுத்திக் கொள்ள உள்ளேன். மேலும், சமீபத்தில் எனக்கு 60 வயது பூர்த்தியான நிலையில், எனது உடல்நலத்தை மேலும் மேம்படுத்தும் வகையில், ஒரு சீரான கால அட்டவணை மற்றும் சிறந்த வாழ்க்கை முறையின் மீது கவனம் செலுத்த விரும்புகிறேன்.
வரும் சில வாரங்களில், எனது பத்தாண்டு காலப் பொதுவாழ்வில் நான் முன்னெடுத்த மிக முக்கியமான முன்னெடுப்புகள், நிகழ்வுகள் மற்றும் சாதனைகளை எனது குழுவினர் தொகுத்து வெளியிடுவார்கள். நான் எத்தகைய நேர்மறையான மாற்றங்களை உருவாக்க முயன்றேன் என்பதை நினைவுகூரும் வகையில் இது அமையும். மதுரை மத்தியத் தொகுதி வாக்காளர்கள் தொடங்கி, இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்த எனக்குத் துணை நின்ற அனைவருக்கும் நான் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.
பொதுச்சேவை மீதும், ஒரு மாற்றத்தின் முகவராகச் செயல்படுவதன் மீதும் எனக்கு உள்ள ஆர்வம் சிறிதும் குறையாமல் அப்படியே உள்ளது. புதுப்பிக்கப்பட்ட ஆற்றலுடனும், புத்துணர்ச்சியுடன் நான் மீண்டும் வருவேன்” என உருக்கமாக குறிப்பிட்டு உள்ளார்.
சட்டமன்றத் தேர்தல் தோல்வியை அடுத்து, சிறிது காலம் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ஓய்வெடுப்பதாக அறிவித்தது அரசியல் களத்தில் பேசுபொருளாகி உள்ளது.

0 கருத்துகள்: