அறிவிக்கப்படாத மின்வெட்டு கூடாது - அதிகாரிகளுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவுறுத்தல் !!!
பொதுமக்களுக்கு தகவல் கொடுக்காமல் மின்சாரத்தைத் துண்டிக்கக் கூடாது என்று மின்வாரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்து உள்ளார்.
சென்னை வில்லிவாக்கம் தொகுதிக்கு உட்பட்ட அனைத்துத்துறை அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.
கூட்டத்திறகு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "வில்லிவாக்கம் தொகுதியில் நிலவும் அடிப்படை பிரச்சனைகள் குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தி உள்ளோம். வில்லிவாக்கம் தாெகுதியில் பிரச்சாரம் செய்த போது ஒவ்வொரு தெருவில் நிலவும் அடிப்படை பிரச்சனையும் எனக்கு நன்றாகத் தெரியும். இந்த தொகுதியில் 11 டாஸ்மாக் கடைகள் உள்ளது. முதலமைச்சரின் உத்தரவுப்படி ஒரு கடை மூடப்பட்டு உள்ளது. மேலும் 6 டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்றும் பெண்கள் வலியுறுத்தி உள்ளனர்.
போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்களை உடனடியாக குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க கூறி உள்ளோம். காவல் நிலையங்களில் சி.சி.டி.வி கேமராக்கள் செயல்பாட்டில் இருக்க வேண்டும். அனைத்து தெருக்களிலும் சி.சி.டி.வி கேமராக்கள் செயல்பாட்டில் இருக்க வேண்டும். சென்னையில் மூன்று அல்லது நான்கு மணிநேரம் வரை எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல் மின்சாரத்தை கட் செய்கின்றனர். இனி மின்சாரம் நிறுத்தும் போது அதற்கான காரணங்களை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
பொதுவாக செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் மழைநீர் வடிகால் கால்வாய் தூர்வாரும் பணிகள் தொடங்கும். ஆனால் இம்முறை ஜூன் முதல் செப்டம்பர் மாதத்திற்குள் மழைநீர் வடிகால் கால்வாய் தூர்வாரும் பணிகளை முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாகவோ, கட்சியின் சார்பாகவோ, என் பெயரை சொல்லி அரசின் அலுவலகத்தில் எந்த தலையீடும் இருக்க கூடாது. லஞ்சம் இல்லாத நிர்வாகம் நடைபெறும்.
அமைச்சர்கள், த.வெ.க சட்டமன்ற உறுப்பினர்கள் டெண்டரில் பங்குபெறவோ, பரிந்துரைச் செய்யவோ கூடாது என கூறி உள்ளார். அதனால் நிர்வாகம் சிறக்கும். டெண்டர் எடுத்தவர்கள் குறிப்பிட்ட நாட்களில் பணிகளைச் செய்து முடிக்க வேண்டும். தமிழக வெற்றிக் கழகத்தை பொறுத்தவரையில் 234 தொகுதிகளும் ஒரே மாதிரியாக அணுக வேண்டும் என முதலமைச்சர் கூறி உள்ளார்.
அதன்படி செயல்படுவோம். டாஸ்மாக் கடைகளை மூடுவதால் 8 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. வருவாய் இழப்பைவிட மக்களின் உயிர் தான் முக்கியம். மக்களின் பாதுகாப்பு தான் முக்கியம். மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளில் பணி புரிந்தவர்களுக்கு மாற்று வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தேர்தலில் தபால் வாக்குகளை தமிழக வெற்றிக் கழகத்திற்கு காவல் துறையினர் அதிகளவில் செலுத்தி உள்ளனர். அவர்களுக்கு கடந்த ஆட்சியில் அழுத்தம் இருந்தது. அவர்களை வேலை செய்யவிடவில்லை. இந்த அரசில் அவர்களுடன் சேர்ந்து பணியாற்றுவோம். நாங்களும் அரசு ஊழியர்கள் தான். எனவே அனைவரும் சேர்ந்து உழைத்தால் கடைநிலையில் உள்ள மக்களுக்கு திட்டங்களை கொண்டுச் செல்ல முடியும். மக்களுக்கு ரூபாய் 100 ஒதுக்கினால் அது முழுமையாக சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

0 கருத்துகள்: