இன்ஸ்ட்டா காதலை கைவிட்ட இளம் பெண் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய கும்பல் ; சி.சி.டி.வி யில் சிக்கிய நபர்களின் முகங்கள் : சென்னைக்கு விரைந்து தீவிர தேடுதல் வேட்டையில் தனிப்படை !!!
கோவை, தொண்டாமுத்தூர் அருகே காதலை கைவிட்ட இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசி, மர்ம கும்பலின் சிசிடிவி (CCTV) காட்சிகள் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதில் பதிவான குற்றவாளிகளின் முகங்களை அடையாளம் கண்ட தனிப்படை போலீசார் அவர்களை பிடிக்க தற்போது சென்னையில் முகாமிட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டையில் களம் இறங்கி உள்ளனர்.
கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அடுத்த கள்ளிக்கநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கு, சென்னையைச் சேர்ந்த கார்த்தி என்கிற மாரியப்பன் (30) என்ற வாலிபருடன் ‘இன்ஸ்டாகிராம்’ (Instagram) சமூக வலைத்தளம் வழியாகத் தீவிரக் காதல் உருவாகி உள்ளது. இவர்களின் லவ் டிராக் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்குத் தெரியவரவே, அவர்கள் வாலிபர் கார்த்தி குறித்துத் விசாரித்து உள்ளனர். அப்போது கார்த்தியின் பின்னணி குறித்துச் சரியான மற்றும் திருப்திகரமான தகவல்கள் கிடைக்காததாலும், குற்றவிளக்கில் தொடர்புடையவர் என அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தங்களது மகளின் காதலுக்குக் கடுமையான ‘ரெட் சிக்னல்’ காட்டி எதிர்த்து உள்ளனர். பெற்றோரின் பாசத்திற்கும் அறிவுரைக்கும் மதிப்பு அளித்த அந்தப் பெண்ணும், ரவுடி கார்த்தியுடனான அனைத்து தொடர்புகளையும் முற்றிலுமாகக் கட் செய்து, ‘பிரேக் அப்’ செய்து ஒதுங்கி உள்ளார்.
இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற காதலன் கார்த்தி, இரண்டு தினங்களுக்கு முன்பு தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து இருசக்கர வாகனங்களில் கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் உள்ள காதலியின் வீட்டிற்குப் பயங்கர ஆயுதங்களுடன் வந்து உள்ளார். அவர்கள் முன்னரே ஸ்கெட்ச் போட்டுத் தயார் செய்து கொண்டு வந்து இருந்த, எரியக் கூடிய ஆயில் மற்றும் பெட்ரோல் நிரப்பப்பட்ட பீர் பாட்டில்களைத் தீப்பற்ற வைத்து, வீட்டின் நுழைவாயிலை நோக்கி ‘டமால், டமால்’ என வீசி எறிந்து ‘பெட்ரோல் குண்டு’ தாக்குதல் நடத்தி உள்ளனர்.
இந்த அதிர்ச்சித் தாக்குதலில் வீட்டின் வாசலில் வைக்கப்பட்டு இருந்த காலணி வைக்கும் ஸ்டாண்ட் (Footwear Stand) மற்றும் போர்டிகோ பகுதி திடீரெனப் பற்றிக் கொண்டு அசுர வேகத்தில் எரியத் தொடங்கியது.
வீட்டின் போர்டிகோவில் பயங்கரச் சத்தத்துடன் தீப்பற்றி எரிந்ததைக் கண்டு, அலறி அடித்துக் கொண்டு வெளியில் வந்த குடும்பத்தினர், அங்கு நிறுத்தப்பட்டு இருந்த தங்களது சொகுசு மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள்களைத் துரிதமாகச் செயல்பட்டுத் தீயின் அருகில் இருந்து அப்புறப்படுத்தினர்.
பின்னர், அக்கம், பக்கத்தினரின் உதவியுடன் தண்ணீரை வாரி இறைத்துத் தீயை உடனடியாக அணைத்ததால், நல்வாய்ப்பாக இந்த விபரீத சம்பவத்தில் யாருக்கும் எந்தவித உடல் காயமும், உயிராபத்தும் ஏற்படவில்லை.
இதற்கு இடையே, இந்த தாக்குதல் அரங்கேறிய போது அங்கு இருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவான பதைபதைக்க காட்சிகள் வெளியாகி பரவி வருகிறது.
அந்த வீடியோவில், வீட்டின் வாசல் அருகில் இரு மோட்டார் சைக்கிளில் 4 பேர் கொண்ட மர்ம கும்பல் வந்து நிற்கிறது. அதில் பின்னால் இருந்த ஆசாமி முதலில் ஒரு பெட்ரோல் பாட்டிலைப் பற்ற வைத்துக் வீசுகிறான். அடுத்த சில நொடிகளிலேயே மற்றொரு பாட்டிலையும் வீசி எறிய, போர்டிகோ பகுதி ஒட்டுமொத்தமாகத் தீப்பற்றி எரிகிறது. காரியத்தை முடித்த அடுத்த விநாடியே, அந்தப் கும்பல் பைக்கை முறுக்கிக் கொண்டு மின்னல் வேகத்தில் அங்கு இருந்து தப்பிச் சென்றது.
இந்தக் சம்பவம் தொடர்பாகத் தொண்டாமுத்தூர் போலீசார் ஏற்கனவே வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்போது கண்காணிப்பு கேமரா காட்சிகளின் ஆய்வின் அடிப்படையில், காதலி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய அத்தனை ஆசாமிகளின் அடையாளங்களையும் போலீசார் கண்டுபிடித்து உள்ளனர். இருசக்கர வாகனங்களில் வந்து இந்த வெறிச்செயலை அரங்கேற்றிய அந்த சென்னையைச் சேர்ந்த ரவுடிகளை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) பவன் குமார் ரெட்டி குற்றவாளிகளைச் 3 தனிப்படைகளை அமைத்து உத்தரவிட்டு உள்ளார்.
எஸ்.பி-யின் உத்தரவின் பேரில் சென்னைக்கு விரைந்த தனிப்படை போலீசார், தற்போது சென்னையின் பதுங்கி இருக்கும் ரவுடி கார்த்தி மற்றும் அவனது கூட்டாளிகளைப் பிடிப்பதற்காகத் தீவிர தேடுதல் ‘வேட்டையில்’ இறங்கி உள்ளனர்.

0 கருத்துகள்: