தமிழ்நாட்டில் அடுத்தமுறை எதிர்க்கட்சி என்ற ஒன்று இருக்காது; இலங்கை எம்.பி. இராமநாதன் அர்ச்சுனா கணிப்பு !!!
தமிழ்நாட்டில் அடுத்தமுறை எதிர்க்கட்சி என்ற ஒன்று இருக்காது என நினைக்கிறேன் என்று இலங்கை எம்.பி. இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்து உள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு பொதுப் பணித் துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை, இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்துப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
"நான் அரசியலுக்கு இளையவன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக இங்கு வந்துள்ளேன். மே 18 என்பது மறக்க முடியாத நாள். லட்சக் கணக்கான மக்கள் இனப் படுகொலை செய்யப்பட்ட மாதம். தமிழ் மக்களின் வலிகளை உலகிற்கு எடுத்துச் செல்ல வேண்டும். அந்த நாளை யாரும் மறந்து விடக் கூடாது; எந்த கோரிக்கையுடனும் அமைச்சர்களை பார்க்க வரவில்லை.
தளபதியின் தளபதியான ஆதவ் அர்ஜூனா அவர்களையும் சந்தித்தேன். அவருடன் உணவு அருந்தினேன். எப்போது வேண்டுமானாலும் தொலைபேசி வாயிலாக அழைக்கச் சொன்னார். எங்களது வலிகளை நீங்கள் உணர்ந்து, எங்களையும் ஏற்றுக் கொண்டு எங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என கேட்டுக் கொண்டு உள்ளோம். முதலமைச்சர் விஜய் எனக்கு அண்ணன் போன்றவர். அவருக்கு எனது வாழ்த்துகள். இன்று (நேற்று) மீண்டும் இலங்கை செல்ல உள்ளேன். அதற்கு முன்னதாக அமைச்சர்களைச் சந்தித்தேன். சிங்கள நாடாளுமன்றத்தில் தொடர்ந்து தமிழர்களுக்காக குரல் கொடுத்து வருகிறேன்.
தமிழ்நாட்டில் அடுத்த முறை எதிர்க்கட்சி என்ற ஒன்று இருக்காது என நினைக்கிறேன். இத்தனை வேலைகளுக்கு மத்தியிலும் எங்களை அழைத்து, எங்களுடன் உணவு அருந்திய அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கும், மற்ற அமைச்சர்களுக்கும் எனது வாழ்த்துகள்" எனத் தெரிவித்து உள்ளார்.
இந்த சந்திப்பு குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். அதில், 'இலங்கை நாடாளுமன்ற எம்.பி இராமநாதன் அர்ச்சுனாவை இன்று மரியாதை நிமித்தமாக தலைமைச் செயலகம் அலுவலகத்தில் சந்தித்து உரையாடினேன். இரு நாடுகளுக்கு இடையேயான பரஸ்பர நல்லுறவு, தமிழ் மக்களின் நலன், மீனவர் பாதுகாப்பு, ஒன்றுப்பட்ட வளர்ச்சி ஆகிய விஷயங்கள் குறித்து நட்பு ரீதியாகக் கலந்துரையாடினோம்.
தமிழ் மக்களின் நல்வாழ்வு மற்றும் வளமான வருங்காலம் என்ற புள்ளியில் ஆரோக்கியமான உறவில் பயணிப்போம் என்று ஒருவொருக்கொருவர் தெரிவித்து மகிழ்ந்தோம்" என்று குறிப்பிட்டு உள்ளார்.

0 கருத்துகள்: