வியாழன், 14 மே, 2026

விஜய் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை - ம.தி.மு.க பொது செயலாளர் வைகோ கருத்து !!!

SHARE

 விஜய் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை - ம.தி.மு.க பொது செயலாளர் வைகோ கருத்து !!!

விஜய் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை என தனது கருத்தை ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ முன் வைத்து இருக்கிறார்.

சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க தலைமை அலுவலகமாக தாயகத்தில் ம.தி.மு.க நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, 

“ம.தி.மு.க வின் நிர்வாகக் குழு கூட்டம் இன்று தாயகத்தில் நடைபெற்றது. அதன் முக்கியத்துவம் கருதி எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு செல்லவில்லை. ஆளுநர் விதித்த நாள்களுக்குள் அறுதி பெரும்பான்மையை முதலமைச்சர் ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் நிரூபித்து விட்டார்.

தி.மு.க தலைவர் ஸ்டாலின் 6 மாதங்கள் பார்ப்போம் என கூறி உள்ளார். எங்கள் நிலைப்பாடும் அது தான். எங்களுடைய வாழ்த்துகளை இந்த ஆட்சிக்கு தெரிவித்துக் கொள்கிறேன். முதலமைச்சர் ஜோசப் விஜய், முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களையும் சந்தித்தார். அவருடைய ஆரோக்கியமான அரசியலுக்கு என் வாழ்த்துகள்” என்று தெரிவித்தார்.

விஜய் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக பேசப்படுவது குறித்து வைகோவிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, 

“விஜய் குதிரை பேரத்தில் ஈடுப்படவில்லை என்பது என்னுடைய கருத்து. அ.தி.மு.க வில் ஒரு பிரிவினர் ஆதரவு கொடுத்ததை ஏன் விஜய் வேண்டாம் என சொல்லப்போகிறார்? முன்னதாகவே அவருக்கு தேவையான இடங்கள் இருந்தது.

குதிரை பேரம் குறித்து ஒவ்வொரு தலைவருக்கும் ஒரு கருத்து இருக்கும். என் கருத்து குதிரை பேரம் நடைபெறவில்லை. அதேபோல், ஜோதிடருக்கு வழங்கப்பட்ட அரசு நியமனம் திரும்ப பெறப்பட்டது வரவேற்கத்தக்கது” என்று கூறினார்.

சட்டப்பேரவையில் முக்கிய நாளில் கூட ம.தி.மு.க வை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அவைக்கு செல்லவில்லை. ஒருவேளை சென்று இருந்தால் ஆதரவா? என்ற கேள்விக்கு, 

“இந்த அரசு பொறுப்பேற்றதற்கு நாங்கள் வரவேற்பு அளிக்கிறோம். ஆனால் நாங்கள் தி.மு.க கூட்டணியில் தான் தொடர்கிறோம்” என்றார்.

தவிர, உதயநிதி ஸ்டாலினுக்கு கருத்து சொல்ல முழு உரிமை உள்ளது என்றும், அவரின் கருத்திற்கு தான் பதில் சொல்ல இயலாது என்றும் கூறினார்.

அ.தி.மு.க குறித்து, அக்கட்சி பிளவுபட்டதா என்பதை பொறுத்து இருந்தால் தான் தெரியும். சசிகலா, டி.டி.வி-யை மீண்டும் சேர்க்க வேண்டும் என்ற அ.தி.மு.க வினரின் கருத்திற்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை” என்றார்.

தொடர்ந்து சில கோரிக்கைகளை முன்வைத்த வைகோ,

மதசார்பற்ற சமூகநீதி, பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்டவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து ஆட்சியை நடத்திட வேண்டும்.

விவசாயத்திற்கும் நிலத்திற்கும் கேடாக உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற புதிய அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இதுகுறித்த நீதிமன்ற தீர்ப்பும் உள்ளது. நாங்களும் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட உள்ளோம்.

புல்லாறு அணைக்கட்டு திட்டத்தை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும்.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் காட்டுப் பன்றிகள் விவசாய நிலங்களை அழிக்கின்றன. அதனை தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

செண்பகவல்லி தடுப்பணையை கட்ட தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும்.

இக்கோரிக்கைகளை முன் வைத்து ஜூன் 5 ஆம் தேதி வாசுதேவநல்லூரில் உண்ணா நிலை போராட்டம் நடத்த உள்ளோம். அதில் திரளான விவசாயிகள் கலந்துக்கொள்ள இருக்கிறார்கள்” என்றார்.

மேலும் பேசிய அவர், “தி.மு.க ஆட்சியில் கல்வி நிலையங்கள், வழிபாட்டுத்தலங்கள் போன்றவற்றின் அருகில் உள்ள மதுபானக் கடைகள் அகற்றப்பட்டன. இப்போது புதிய அரசும் 717 கடைகளை அகற்ற உத்தரவிட்டு உள்ளது. ஆனால் முழு மதுவிலக்கே எங்கள் நோக்கம்.

வரும் 23 ஆம் தேதி கடையநல்லூரிலும், 27 ஆம் தேதி சீர்காழியிலும் எங்கள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற உள்ளது. ஜூன் மாதம் 27 ஆம் தேதி ம.தி.மு.க பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது” என்று தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: