வந்தே மாதரம் முழக்கம் முதல் படுகர் இன நடனம் வரை” ; கோவை ஏர்போர்ட்டில் ‘யாத்ரி சுவிதா திவாஸ்’ திருவிழா கொண்டாட்டம் - பயணிகளுக்கு பிரம்மாண்ட வரவேற்பு!
கோவை விமான பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தும் வகையில் Yatri Suvidha Diwas நிகழ்ச்சிகள் கோவை விமான நிலையத்தில் இன்று நடைபெற்றது.
விமான போக்குவரத்து ஆணையத்தின் சார்பில் நாடு முழுவதும் உள்ள விமான நிலையத்தில் இன்று Yatri Suvidha Diwas தினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. இதனையொட்டி விமான நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகளுக்கு சிறப்பான வரவேற்பு மற்றும் வசதிகள் வழங்கப்பட்டன.
அந்த வகையில் கோயம்புத்தூர் விமான நிலையத்தில் பயணிகளுக்கு திலகம் வைக்கப்பட்டு, பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
மேலும், விமான நிலைய பணியாளர்களுக்கு உடற் பரிசோதனை மற்றும் கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த கோவை விமான நிலைய இயக்குனர் முகமது ஆரிப் பேசுகையில்,
'Yatri Suvidha Diwas தினத்தை முன்னிட்டு விமான பயணிகளுக்கு சிறந்த வசதிகள் மற்றும் சேவைகளை வழங்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் இன்று நடத்தப்பட்டன.
குறிப்பாக, விமான நிலைய அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் இணைந்து வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டது. விமான பயணிகளுக்கு அதிகாலை முதல் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.
படுகர் இன நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டதோடு, விமான நிலைய வளாகம் முழுவதும் தூய்மை பணிகளும் நடைபெற்றது. விமான நிலையத்தில் புதிய பகுதியில் அமைய உள்ள வாகன நிறுத்துமிடத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும் விமான நிலையத்தில் சிறப்பாக பணியாற்றிய முன்னிலை பணியாளர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
விமான நிலையத்தில் பணி புரியும் ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள், டாக்ஸி ஓட்டுனர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் உடல் பரிசோதனை மற்றும் கண்பார்வை பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டன.
கோவை அரசு மருத்துவக் கல்லூரியோடு இணைந்து ரத்ததான முகாம் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிகள் அனைத்தும் பயணிகளுக்கு சிறந்த வசதிகளை வழங்கியதோடு, பயணிகளுக்கும் விமான நிலைய பணியாளர்களுக்கும் இடையே சிறந்த இணைப்பை உருவாக்கி உள்ளது.
மேலும், விமான போக்குவரத்து துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்து 50க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு ஆலோசனைகள் வழங்கப்பட்டது' என தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளிக்கையில்,
பருவமழை தொடங்கியுள்ள நிலையில் விமான நிலைய காம்பவுண்ட் சுவர்களின் வலிமை பரிசோதிக்கப்பட்டு, தேவையான இடங்களில் புதிய சுற்றுச்சூழல் அமைக்கப்படும் எனவும்,
சர்வதேச அளவில் எபோலா தொற்று பரவி வரும் சூழலில் சர்வதேச விமான பயணிகளை கண்காணிக்கும் வகையில் கோவை விமான நிலையத்தில் மருத்துவ கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தற்போது வரை எபோலா பாதிப்புகளோடு பயணிகள் யாரும் வரவில்லை எனவும் விமான நிலைய இயக்குனர் தெரிவித்தார்.

0 கருத்துகள்: