செவ்வாய், 9 ஜூன், 2026

தனித்து விடப்பட்ட மம்தா.. 20 எம்பிக்கள் கூண்டோடு பா.ஜ.க வுக்கு ஆதரவு.. திணறும் திரிணாமுல் !!!

SHARE

 தனித்து விடப்பட்ட மம்தா.. 20 எம்பிக்கள் கூண்டோடு பா.ஜ.க வுக்கு ஆதரவு.. திணறும் திரிணாமுல் !!!

மேற்கு வங்கத்தில் ஒரு மிகப் பெரிய அரசியல் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. அங்குத் திரிணாமுல் ஆட்சியை இழந்தது முதலே மம்தாவுக்கு சிக்கல் மேல் சிக்கல் இருந்து வருகிறது. ஏற்கனவே பெரும்பாலான எம்.எல்.ஏ க்கள் மம்தாவுக்கு எதிராகத் திரும்ப விட்டனர். இதற்கு இடையே இப்போது எம்.பி க்களும் பலரும் மம்தாவுக்கு எதிராகத் திரும்பி உள்ளனர்.

மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் திரிணாமுல் படுதோல்வி அடைந்தது. சுமார் 15 ஆண்டுகளாக ஆளும் கட்சியாக இருந்த திரிணாமுல் மிக மோசமான தோல்வி அடைந்தது. அதிலும் குறிப்பாக மம்தாவே தனது சொந்தத் தொகுதியான பவானிபூரில் தோல்வி அடைந்தார். அப்போது ஆரம்பித்த சிக்கல் இன்னும் தொடர்கிறது. ஏற்கனவே பெரும்பாலான எம்.எல்.ஏ க்கள் மம்தாவை கை விட்டு விட்டனர்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் 28 எம்.பி க்கள் உள்ள நிலையில், அதில் சுமார் 20 எம்.பிக்கள் தாங்கள் தனிப் பிரிவாகச் செல்வதாகவும் ஆளும் பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணிக்கு ஆதரவு அளிக்கத் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஷர்மிளா சர்க்கார் தங்களது கட்சியைச் சேர்ந்த 20 எம்.பி.க்கள் தனியாக செயல்பட முடிவு செய்து உள்ளதாகத் தெரிவித்து உள்ளார்.

இவர்கள் அனைவரும் மம்தா பானர்ஜியின் தலைமையில் இருந்து விலகி, நாடாளுமன்றத்தில் தனிப் பிரிவாகச் செயல்படத் திட்டமிட்டு உள்ளனர். மிக முக்கியமாக, இவர்கள் அனைவரும் பிரதமர் மோடி தலைமையிலான NDA கூட்டணிக்குத் தங்கள் ஆதரவை வழங்க முன்வந்து உள்ளனர். ஷர்மிளா சர்க்கார் திரிணாமுல் காங்கிரஸின் முக்கியமான பெண் தலைவர்களில் ஒருவர். இவர் சமீப காலமாகக் கட்சியின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தியில் இருந்து வந்தார். இந்தச் சூழலில் தான் இவர்கள் தனியாகச் செயல்பட முடிவு செய்து உள்ளனர். ககோலி கோஷ் தஸ்திதார் போன்ற மூத்த தலைவர்களும் மம்தாவுக்கு எதிராகத் திரும்பி உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த எம்.பி க்கள் தனியாகச் செயல்பட முடிவு செய்ததற்குப் பின்னால் சில முக்கிய காரணங்கள் சொல்லப்படுகின்றன.. முதலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் மீது சுமத்தப்பட்டு உள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் தங்களுக்குப் பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்துவதாக இவர்கள் கருதுகின்றனர். அடுத்து கட்சியில் மூத்த தலைவர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படுவதில்லை என்றும் முடிவுகள் எடுப்பதில் ஒரு சிலரின் ஆதிக்கம் மட்டுமே இருப்பதாகவும் இவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், எம்.பி க்களாக தங்களது கருத்துக்களைச் சுதந்திரமாகப் பதிவு செய்யக் கட்சியில் இடம் இல்லை என்பது இவர்களின் முக்கியப் புகாராக உள்ளது.

இந்த 20 எம்.பி.க்களும் ஏற்கனவே மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதி உள்ளனர். அதில், தங்களைத் திரிணாமுல் காங்கிரஸில் இருந்து பிரிந்த ஒரு தனிக் குழுவாக அங்கீகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர். கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் இருந்து தப்பிக்க, மொத்த எம்.பி.க்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் தேவை. அந்த நம்பர் இவர்களுக்கு இருப்பதால் கட்சித் தாவல் தடைச் சட்டம் பாயாது.

இந்த நெருக்கடிக்கு முன்னதாகவே, திரிணாமுல் காங்கிரஸின் மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான சுகேந்து சேகர் ராய் தனது பதவியை ராஜினாமா செய்தது மம்தா பானர்ஜிக்கு மிக பெரிய பின்னடைவாக அமைந்தது. இதுவே கட்சியின் பிளவுக்கு ஒரு தொடக்கப் புள்ளியாக அமைந்ததாகக் கருதப்படுகிறது

மேற்கு வங்கத்தில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய மம்தா பானர்ஜி இப்போது மிகப் பெரிய தர்ம சங்கடத்தில் இருக்கிறார். ஒரு பக்கம் எம்எல்ஏக்கள் அவரை புறக்கணிக்கிறார்கள்.. இன்னொரு பக்கம் 20 எம்.பி.க்கள் ஒரே நேரத்தில் விலகுவது என்பது தேசிய அளவில் திரிணாமுல் காங்கிரஸின் செல்வாக்கை வெகுவாகக் குறைக்கும். மேலும், இது மேற்கு வங்க மாநில அரசியலிலும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடும்.

மத்தியில் ஏற்கனவே ஆட்சியில் இருக்கும் என்.டி.ஏ கூட்டணிக்கு, இந்த 20 எம்.பி.க்களின் ஆதரவு கிடைத்தால், நாடாளுமன்றத்தில் அவர்களின் பலம் மேலும் அதிகரிக்கும். குறிப்பாக, முக்கிய மசோதாக்களை நிறைவேற்றும் போது இந்த ஆதரவு அவர்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: