புதிய அரசியல் இயக்கத்தை ஆரம்பித்தார் அண்ணாமலை : 2031 தேர்தலில் போட்டி என அறிவிப்பு !!!
தமிழகத்தில் தற்போது நிலவும் அரசியல் வெற்றிடத்தை நிரப்ப, திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஒரு புதிய 'மக்கள் இயக்கம்' தொடங்கப்பட்டு உள்ளதாக பா.ஜ.க முன்னாள் மாநில தலைவரான அண்ணாமலை அறிவித்தார்.
தமிழ்நாட்டில் சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன், அ.தி.மு.க வுடன் பா.ஜ.க கூட்டணி அமைத்தது. இதனை அடுத்து, பா.ஜ.க வின் மாநிலத் தலைவர் பதவியில் இருந்த அண்ணாமலை மாற்றப்பட்டு அவருக்குப் பதில் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட அண்ணாமலைக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது நடக்கவில்லை.
ஆனால், காரைக்குடி, சிங்காநல்லூர், ஸ்ரீவைகுண்டம், விருகம்பாக்கம், மதுரை (தெற்கு) மற்றும் பத்மநாபபுரம் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். ஆனால், அவர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் 27 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ.க ஒரே ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது.
இதன் இடையே, அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கப் போவதாக கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. இதனை நிரூபிக்கும் வகையில், கடந்த 2 நாட்களுக்கு முன் டெல்லி பயணம் மேற்கொண்ட அண்ணாமலை உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை சந்தித்தார். அப்போது அவர் பா.ஜ.க வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து விலகிக் கொள்வதாக கடிதம் அளித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அண்ணாமலையின் ராஜிநாமா ஏற்றுக் கொள்ளப்பட்டதாக பா.ஜ.க தலைமை இன்று அதிகாரப் பூர்வமாக அறிவித்தது.
இந்த நிலையில், இன்று நண்பகல் 12 மணிக்கு சமூக வலைதளத்தில் அண்ணாமலை பேசினார். அப்போது அவர், “பா.ஜ.க வில் 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி டெல்லியில் இருந்து வந்து இணைந்தேன். தமிழ்நாட்டு மக்களுக்காக 6 ஆண்டுகள் பணியாற்றியதை மிகப் பெரிய பாக்கியமாக கருதுகிறேன்.
புதிய அரசியலை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பா.ஜ.க வில் இருந்து விலகி உள்ளேன். இன்று முதல் புதிய அரசியல் இயக்கத்தை தொடங்குகிறோம். இதுவரை எனது அரசியல் பாதை வளைந்து, நெளிந்து இருந்தது. இது எளிதானது அல்ல. அதனால் ஒரு சில கருத்துக்களை தற்போது பகிர விரும்புகிறேன்.
முதலில் ஐஐம் லக்னோவில் படிக்கும் போது 25 வயதில், விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க வில் இண்டர்ன்ஷிப் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு 3 மாதங்கள் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து பாஜகவில் இணைவதற்கு முதல் நாள், நடிகர் ரஜினிகாந்த் என்னை தொடர்பு கொண்டு அவர் தொடங்க இருந்த அரசியல் கட்சியில் இணைய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
அவரிடம் எனக்கு நீண்ட கால நட்பு உள்ளது. அவருடைய அரசியல் பாதை எப்படி இருக்க வேண்டும் என பல முறை அவரிடம் பேசி உள்ளேன். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது தான் தமிழ்நாட்டிற்கு நல்லது. ஆனால் கோவிட் கால கட்டத்தில் அரசியலுக்கு வராமல் இருப்பது தான் அவருக்கு நல்லது. இது பற்றி ரஜினிகாந்த்திடம் தெரிவித்து விட்டு பா.ஜ.க வில் இணைந்தேன். பிறகு அவரை சந்தித்து மன்னிப்பு கேட்டேன். அவரும் பெருந்தன்மையாக ஏற்றுக் கொண்டார்“ என்றார்.
தொடர்ந்து பேசிய அண்ணாமலை, “என்னிடம் பலர் நீங்கள் தமிழனா? இந்தியனா? என கேட்பார்கள். எனது பெற்றோர் தமிழ்நாட்டை விட்டு வேறு மாநிலங்களுக்கு சென்றதில்லை. ஆனால் நான் தமிழ்நாட்டை விட்டு லக்னோ, டெல்லி, ஹைதராபாத் போன்ற நகரங்களிலும், கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் படிக்கவும் பணியாற்றவும் செய்து உள்ளேன். நான் ஒரு பெருமைமிகு இந்தியன், பாரம்பரியம் மிக்க தமிழன். தமிழ்நாட்டில் மக்களோடு பயணித்து, சமரசமில்லாமல் மாநிலத்தின் வளர்ச்சியை உங்களோடு முன்னெடுத்து செல்ல வேண்டும்“ என்றார்.
மேலும் பா.ஜ.க வில் இருந்து வெளியேறியது குறித்தும் அவர் பேசினார். அப்போது அவர், “தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல், மக்களவை தேர்தல் ஆகியவற்றில் பா.ஜ.க தனித்து போட்டியிட வேண்டும் என அப்போது கட்சியின் தலைவராக இருந்த ஜே.பி.நட்டாவிடம் கூறினேன். ஆனால், எனது கருத்து ஏற்கபடவில்லை.
மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு பா.ஜ.க சார்பில் கர்நாடகாவில் ஆட்சியில் இருந்த பா.ஜ.க வை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினோம். பிரதமர் மோடி மீது மிகப்பெரும் மரியாதை உள்ளது. ஆனால் ஒரு கட்டத்தில் பல பிரச்சனைகள் குறித்து எடுத்து கூறினேன். கடந்த 18 மாதங்களாக பாஜக தலைமையுடன் எனக்கு கருத்து வேறுபாடு இருந்தது.
இதனை அடுத்து கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி பாஜகவில் இருந்து விலகுவதாக கூறினேன். ஆனால் தேர்தல் பணியை முடித்து விட்டு செல்ல சொன்னார்கள். அதனால் பணியாற்றினேன். கட்சியில் இருந்து விலகுவது என்பது உடனடியாக எடுத்த முடிவு அல்ல“ என்றும் அண்ணாமலை கூறினார்.
தொடர்ந்து தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்தும் அண்ணாமலை அறிவித்தார். அப்போது அவர், “தற்போது தமிழ்நாட்டில் அரசியல் இயக்கத்தை தொடங்குகிறோம். வரும் 2031 சட்டப் பேரவைத் தேர்தலில் இதனை கட்சியாக மாற்றி போட்டியிடுவோம்.
தமிழ் கலாச்சாரம், மாநில உரிமைகள் மற்றும் தேசிய பார்வை ஆகியவற்றை ஒருங்கிணைத்த ஒரு 'தமிழ்-முதல்' மற்றும் மதச்சார்பற்ற கொள்கைப் பாதையில் இந்த இயக்கம் பயணிக்கும்.
முதலில் அரசியல் இயக்கத்திற்கான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். அதற்கு சற்று அவகாசம் தேவை. இன்னும் 6 முதல் 8 மாதங்களுக்குள் இது அரசியல் கட்சியாக முழு வடிவம் பெறும். அப்போது அதன் பெயர் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படும். ஆனால், களப்பணிகள் இப்போதே தொடங்கி விட்டன. அனைவரையும் முன்னிலைப்படுத்தும் அரசியலை முன்னெடுக்க வேண்டும். பழைய அரசியலில் இருந்து வெளியே வர வேண்டும்.
பண பலம் மற்றும் குடும்ப அரசியலை சார்ந்து இல்லாமல், தமிழக இளைஞர்களை முன்னிறுத்தி தூய்மையான அரசியல் செய்வதே இலக்கு“ என்றும் அவர் கூறினார்.
மேலும், www. betheleader.org என்ற இயக்கத்தின் இணைய தளத்தையும் அண்ணாமலை அறிமுகப்படுத்தினார். இதில் பொதுமக்கள் உறுப்பினர்களாக இணைந்து கொள்ளலாம் என்றும் அவர் அறிவித்தார்.
தொடர்ந்து பேசிய அண்ணாமலை, கோயம்புத்தூரில் 'APJ center for ethics and politics' என்ற மையம் தொடங்கப்படுவதாகவும், அங்கு இளைஞர்களுக்கு அரசியல் பயிற்சி வழங்கப்படும் என்றும் கூறினார்.
இது தொடர்பாக மேலும் பேசிய அவர், “நமது இயக்கத்தை சேர்ந்தவர்கள் எந்த தேர்தலிலும் போட்டியிடுவதற்கு முன்பு, இந்த மையத்தில் பயிற்சி பெற வேண்டும். அவர்கள் மக்களின் தேவைகளை புரிந்து கொள்ள வேண்டும். நாம் மாறினால் மாற்றம் நடக்கும். எனக்கு யார் மீதும் வன்மம் கிடையாது.
இந்த இயக்கம் மக்களுக்கான பாதையாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் தி.மு.க, அ.தி.மு.க, த.வெ.க உள்ளிட்ட கட்சிகளை போன்று பா.ஜ.க வை பார்க்கிறேன். நாம் யாருக்கும் போட்டி கிடையாது” என்றும் தெளிவுபடுத்தினார்.

0 கருத்துகள்: