அண்ணாமலையின் ராஜினாமா ஏற்பு: பா.ஜ.க தலைமை அறிவிப்பு !!!
தமிழ்நாடு பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலையின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டாக அக்கட்சியின் தலைமை அறிவித்து உள்ளது.
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பா.ஜ.க, உதகை தொகுதியில் மட்டும் வெற்றி பெற்று படுதோல்வி அடைந்தது. தேர்தலுக்கு முன்னதாகவே, அண்ணாமலை பா.ஜ.க தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும், அவர் தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்பு வழங்கப்படவில்லை எனக் கூறப்பட்டது.
இதனால் அதிருப்தியில் இருந்த அண்ணாமலை, பா.ஜ.க சார்ந்த அரசியல் நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு பா.ஜ.க வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை கலந்து கொள்ளாமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அண்ணாமலை டெல்லி பயணம் மேற்கொண்டு இருந்தார். அப்போது, பா.ஜ.க வின் தேசிய தலைவர் நிதின் நபினை நேரில் சந்தித்து பேசினார். அப்போது, தமிழ்நாடு பா.ஜ.க நிர்வாகிகள் மீது தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாகவும், பா.ஜ.க வில் இருந்து விலகும் கடிதத்தை வழங்கியதாகவும் தகவல் வெளியாகியது.
அதைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்துப் பேசியிருந்தார். இந்த சூழலில், அண்ணாமலையின் ராஜினாமா கடிதம் ஏற்கப்படுவதாக பா.ஜ.க வின் தேசிய தலைமை இன்று (ஜூன் 05) அதிகாரப் பூர்வமாக அறிவித்து உள்ளது.
இதுகுறித்து பா.ஜ.க வின் தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், "தமிழ்நாடு பா.ஜ.க வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அளித்த கடிதத்தை பா.ஜ.க வின் தேசிய தலைவர் நிதின் நபின் ஏற்றுக் கொண்டு உள்ளார்" என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
பா.ஜ.க வில் 6 ஆண்டுகள் பயணத்தை அண்ணாமலை முடித்துக் கொண்டார். கடந்த 2020- ஆம் ஆண்டு தனது ஐ.பி.எஸ் பதவியை ராஜினாமா செய்து விட்டு பா.ஜ.க வில் இணைந்தவர் அண்ணாமலை. அவருக்கு அந்த ஆண்டே கட்சி மேலிடம், மாநில தலைவர் பதவியை வழங்கி இருந்தது. அண்ணாமலை தலைமையில் 2021 சட்டமன்றத் தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தலை பா.ஜ.க சந்தித்தது.
தற்போது பா.ஜ.க வில் இருந்து அண்ணாமலை ராஜினாமா செய்த நிலையில், தனது அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் குறித்து இன்று (ஜூன் 05) நண்பகல் 12.00 மணி அளவில் சமூக வலைதளம் மூலம் அவர் அறிவித்தார்.
அண்ணாமலை விலகலால் தமிழ்நாட்டில் பா.ஜ.க இரண்டாகப் பிளவுபடும் சூழலும் ஏற்பட்டு உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

0 கருத்துகள்: