கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயது சிறுவன் அடித்துக் கொலை செய்த வழக்கு ; தாய், கள்ளக் காதலனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை - கோவை எஸ்.சி/எஸ்.டி சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு !!!
"ஏக காலம் இல்லாமல் வரிசையாகத் தண்டனையை அனுபவிக்க வேண்டும்" என நீதிபதி விவேகானந்தன் அதிரடித் தீர்ப்பு !!!
கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயதுப் பெற்ற மகனையே அடித்துக் கொன்ற கொடூரத் தாய் மற்றும் அவரது கள்ளக் காதலனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கோவை எஸ்சி/எஸ்டி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பை வழங்கி உள்ளது.
இந்த வழக்கில் தண்டனைகள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக (வரிசையாக) அனுபவிக்கப்பட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.
கோவை, சாய்பாபா காலனி, கோவில்மேடு பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா. கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த இவருக்கு அபிஷேக் (6) என்ற மகனும், 3 வயதில் ஒரு மகளும் இருந்தனர். அட்டைப்பெட்டி தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்த திவ்யாவிற்கு, அதே பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் ராஜதுரை என்பவருடன் முறையற்ற கள்ளத்தொடர்பு ஏற்பட்டு உள்ளது.
திவ்யாவின் வீட்டிற்கு அடிக்கடி வந்து ராஜதுரை உல்லாசமாக இருந்து வந்த நிலையில், அதற்குத் திவ்யாவின் குழந்தைகள் இருவரும் இடையூறாக இருந்து உள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த இருவரும் சேர்ந்து இரண்டு குழந்தைகளையும் தொடர்ந்து அடித்துத் துன்புறுத்தி வந்து உள்ளனர்.
ஒருமுறை பள்ளிக்குத் தனது தந்தை வந்த போது, "அம்மாவும் வீட்டுக்கு வரும் ஒரு மாமாவும் என்னை அடிக்கடி கொடுமைப்படுத்துகிறார்கள், என்னை உன்னோடு அழைத்துச் சென்று விடு" என்று சிறுவன் அபிஷேக் கதறி அழுது உள்ளான். அதற்குத் தந்தை, புதிதாகக் கட்டி வரும் வீட்டின் வேலைகள் முடிந்ததும் இருவரையும் அழைத்துச் செல்வதாக ஆறுதல் கூறிச் சென்று உள்ளார்.
இதற்கு இடையே, கடந்த 2020-ஆம் ஆண்டு ஒரு கடையின் அருகே வைத்துச் சிறுவன் அபிஷேக்கை, தாய் திவ்யாவும் கள்ளக் காதலன் ராஜதுரையும் குச்சியால் கொடூரமாக அடித்துத் சித்திரவதை செய்து உள்ளனர்.
பொதுமக்களின் கண்டிப்பையும் மீறி நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் சிறுவன் மயங்கி விழுந்தான். உடனடியாக '108' ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட வழியிலேயே சிறுவன் அபிஷேக் பரிதாபமாக உயிரிழந்தான்.
இதுகுறித்துச் சாய்பாபா காலனி போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து திவ்யா மற்றும் ராஜதுரையைச் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கின் விசாரணை கோவையில் உள்ள தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமைகள் தடுப்புச் சட்ட (SC/ST) சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி விவேகானந்தன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. இருவர் மீதான குற்றச்சாட்டுகளும் முழுமையாக நிரூபிக்கப்பட்டதை அடுத்து, இருவருக்கும் இன்று தண்டனை விவரங்களை நீதிபதி அறிவித்தார். இதுவொரு கொடுங்குற்றம் என்பதால், தண்டனைகளை ஏக காலத்தில் (ஒரே நேரத்தில்) அனுபவிக்கக் கூடாது என்றும், வரிசையாக (ஒன்றன் பின் ஒன்றாக) அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார்.
தண்டனை விபரங்கள்:
1. கள்ளக்காதலன் ராஜதுரை:
பிரிவு 302 (கொலை):
ஆயுள் தண்டனை மற்றும் ₹10,000 அபராதம்.
பிரிவு 324 & 201 (உடந்தை,
தடயங்களை மறைத்தல்):
முறையே 3 ஆண்டுகள் (₹2000 அபராதம்) மற்றும் 7 ஆண்டுகள் (₹5000 அபராதம்) சிறை தண்டனை.
SC/ST சட்டப்பிரிவு: 3 ஆண்டுகள் சிறை (₹2000 அபராதம்) மற்றும் 1 ஆயுள் தண்டனையுடன் ₹1 லட்சம் அபராதம்.
நீதிபதியின் உத்தரவு:
ராஜதுரை முதலில் 13 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையை முழுமையாக அனுபவித்து முடித்த பின்னரே, அவரது ஆயுள் தண்டனைக் காலம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் (இரட்டை ஆயுள்).
2. பெத்த தாய் திவ்யா:
பெற்ற மகனைக் கொலை செய்ய உடந்தையாக இருந்த குற்றத்திற்காகத் தாய் திவ்யாவிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
நீதிபதியின் உத்தரவு:
திவ்யா முதலில் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையை அனுபவித்து முடித்த பின்னரே, அவரது ஆயுள் தண்டனைக் காலம் தொடங்கும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது.
பெற்ற மகனையே கள்ளக்காதலனுக்காகக் துடிதுடிக்க அடித்துக் கொன்ற தாய்க்கும், அவளது ஆண் நண்பருக்கும் நீதிமன்றம் வழங்கி உள்ள இந்த அதிரடி மற்றும் கடுமையான தீர்ப்பு கோவை நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, சமூக விரோதிகளுக்கு ஒரு பலத்த எச்சரிக்கையாகவும் அமைந்து உள்ளது.

0 கருத்துகள்: