கோவையில் 90 அடி ஆழக் கிணற்றில் 3 நாட்களாக அழுகிய வடமாநில இளம்பெண் சடலம்” ; சுற்றிலும் ஹாலோ பிளாக் கற்களைக் கட்டிய கொடூரம் - “தவறான உறவா? அல்லது சதியா?” மூடிய ஆலையில் படுகொலை !!!
கொலையாளிகளை வேட்டையாட 3 தனிப்படை அமைப்பு ; “பாழடைந்த கிணற்றில் இருந்து வீசிய துர்நாற்றம்” -கயிறு கட்டி இறங்கி பெண்ணின் உடலை மீட்ட தீயணைப்புத் துறையினர் !!!
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்து உள்ள பொகளூர் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாமல் தனியாருக்கு சொந்தமான ஆலை ஒன்று உள்ளது.இந்த ஆலையை தனியார் ஒருவர் குத்தகைக்கு எடுத்து அதனை மண்டபமாக மாற்றும் பணியில் கடந்த மூன்று தினங்களாக ஆட்களை வைத்து ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல பணிக்கு வந்த தொழிலாளர்கள் கிணற்றின் அருகே துர்நாற்றம் வீசுவதை கண்டு சூப்பர்வைசருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சூப்பர்வைசர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றில் எட்டிப் பார்த்த போது சாக்கு மூட்டையில் இருந்து துர்நாற்றம் வருவது தெரியவந்தது.
உடனடியாக அவர் இதுகுறித்து சிறுமுகை போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி பாஸ்கரன், சிறுமுகை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் (பொறுப்பு) தலைமையிலான போலீசார் அன்னூர் தீயணைப்பு துறையினரின் உதவியுடன் சுமார் 90 அடி ஆழமுள்ள கிணற்றில் இருந்து நீண்ட நேரம் போராடி கயிறு கட்டி அந்த சாக்கு மூட்டையை மேலே கொண்டு வந்தனர்.
தொடர்ந்து சாக்கு முட்டையை திறந்து பார்த்த போது அதில் பெண் சடலம் இருப்பது தெரிய வந்தது. உடனடியாக போலீசார் இதுகுறித்து கோவை தடய அறிவியல் துறையினருக்கும், மோப்ப நாய் பிரிவினருக்கும் தகவல் தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தடய அறிவியல் துறையினர் இளம்பெண் சடலம் மீட்கப்பட்ட கிணறு, அங்கு இருந்த ஹாலோ பிளாக் கற்கள் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டனர். மேலும், சாக்கு மூட்டையை திறந்து சடலத்தை வெளியே எடுத்தனர்.
தொடர்ந்து சடலத்தை தடய அறிவியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இறந்தவர் சுமார் 20 முதல் 30 வயது மதிக்கத்தக்க வட மாநில இளம்பெண் என்பதும், திருமணமானவர் என்பதும், கொலை செய்யப்பட்ட பின்பு சடலத்தை சுற்றிலும் ஹாலோ பிளாக் கற்களை வைத்து கயிறு கட்டி சடலம் மேலே வராதவாறு கிணற்றில் இறக்கி உள்ளதும், இறந்து மூன்று தினங்களுக்கும் மேல் இருக்கலாம் என்பதும், அழுகிய நிலையில் கிடந்ததும் தெரியவந்து உள்ளது.
இதனை தொடர்ந்து சடலத்தை கைப்பற்றிய சிறுமுகை போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து உள்ள சிறுமுகை போலீசார் இறந்தவர் யார் ? எந்த ஊரை சேர்ந்தவர் ? எப்படி இந்த நிறுவனத்திற்கு வந்தார் ? தவறான உறவு காரணமாக கொலை செய்யப்பட்டாரா ? அல்லது வேறு ஏதேனும் காரணமா ? இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டது தனி நபரா ? அல்லது கும்பலா ? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், டி.எஸ்.பி பாஸ்கரன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் செல்வம், சுகவனம் மேற்பார்வையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சுற்று வட்டார பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமரா காட்சிகளையும் கைப்பற்றி, மேட்டுப்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் இளம்பெண் மாயமான வழக்குகள் ஏதேனும் பதிவாகி உள்ளதா ? எனவும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், சம்பவ இடத்திற்கு கோவை சூலூரில் இருந்து எஸ்.ஐ மாணிக்கராஜ் தலைமையிலான மோப்பநாய் பிரிவினர் விரைந்து வந்து "ஹீரோ" என்ற பெயர் கொண்ட சுமார் மூன்றரை வயது உள்ள மோப்ப நாயை சடலத்தை சுற்றிலும் மோப்பம் பிடிக்க வைத்தனர். தொடர்ந்து அந்த மோப்ப நாய் "ஹீரோ" நிறுவனத்தின் கிணறு, ஹாலோ பிளாக் கற்கள் இருந்த இடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சுற்றியது. ஆனால்,யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. காவல்துறையினர் தனிப்படைகள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்திய வருவது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: