ஞாயிறு, 7 ஜூன், 2026

த.வெ.க தொடர்ந்து ஆட்சியில் இருக்கப் போவதில்லை; எடப்பாடி பழனிசாமி கணிப்பு !!!

SHARE

 த.வெ.க தொடர்ந்து ஆட்சியில் இருக்கப் போவதில்லை; எடப்பாடி பழனிசாமி கணிப்பு !!!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற த.வெ.க தொடர்ந்து ஆட்சியில் இருக்கப்போவதில்லை என்று அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்று இருந்தார். தன்னை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்த எடப்பாடி தொகுதி மக்களை நேரில் சந்தித்து எடப்பாடி பழனிசாமி நன்றித் தெரிவித்துக் கொண்டார்.

பின்னர் சேலம் மாவட்டம், எடப்பாடி பேருந்து நிலையம் அருகே அ.தி.மு.க சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நன்றித் தெரிவிக்கும் பொதுக் கூட்டத்தில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாவது, "நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அயராது உழைத்த அனைத்துக் கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரசியலில் வெற்றி தோல்வி மாறி மாறி வரும். இது அரசியலில் சகஜம். தேர்தலில் வெற்றி பெற்ற கட்சித் தொடர்ந்து ஆட்சியில் இருக்கப்போவதில்லை.

தோல்வி அடைந்த கட்சியும் எதிர்வரும் காலங்களில் ஆட்சியைப் பிடிக்கும். அ.தி.மு.க மக்கள் ஆதரவுடன் ஆட்சி அதிகாரத்தை நிச்சயம் பிடிக்கும். தவெக அதிக பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கவில்லை. மாநிலத்தில் 8 மாவட்டங்களில் ஒரு தொகுதியில் கூட த.வெ.க கட்சி வெற்றி பெற முடியவில்லை. தி.மு.க கூட்டணியில் வெற்றி பெற்ற கட்சிகள் கொடுத்த ஆதரவால் தான் தவெகவால் ஆட்சியைப் பிடிக்க முடிந்தது. நாற்காலியில் இரண்டு கால்கள் மட்டுமே தவெகவிற்கு உள்ளன. மற்ற இரண்டு கால்கள் தி.மு.க கூட்டணியில் வெற்றி பெற்ற கட்சிகளுக்கு சொந்தமானது.

எப்போது வேண்டுமானாலும் அந்த கட்சிகள் பிரிந்து செல்லும்; அந்த இரண்டு கால்களும் உடைந்தால் நாற்காலி எப்படி கவிழ்ந்து விடுமோ ?அதுபோல் த.வெ.க ஆட்சியும் கவிழ்ந்து விடும். திடீரென பதவிக்கு வந்தவுடன் எதையும் பேசுவது என்பதை த.வெ.க தலைவர் மற்றும் நிர்வாகிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும். நடந்து முடிந்த அமைச்சரவைக் கூட்டத்தில் 436 திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று கூறினார்கள். எந்தெந்த துறையில் என்னென்ன திட்டங்கள்? அதற்கு என்ன நிதி ஒதுக்கீடு? என்பதை குறித்து வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. திட்டங்களைக் கூறி மக்களை ஏமாற்றும் அரசாக த.வெ.க அரசு உள்ளது" என்று எடப்பாடி பழனிசாமி சாடினார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: