ஞாயிறு, 7 ஜூன், 2026

இந்தியா கூட்டணியைப் பலப்படுத்த நடவடிக்கை தேவை என இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல் !!!

SHARE

 இந்தியா கூட்டணியைப் பலப்படுத்த நடவடிக்கை தேவை என இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல் !!!

இந்தியா கூட்டணியைப் பலப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முத்தரசன் வலியுறுத்தி உள்ளார்.

தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் தனியார் வாகன பயிற்சி மையத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முத்தரசன் திறந்து வைத்தார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், "இந்தியா கூட்டணி உருவானதற்கு காங்கிரஸ் கட்சி தான் மிக முக்கிய காரணம். பாஜகவுக்கு எதிராக இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டது. தற்போது உள்ள சூழலில் அவர்கள் வருவார்கள், இவர்கள் வருவார்கள் யாரை வேண்டுமானாலும் உள்ளே அழைத்துக் கொள்ளலாம் என்ற கொள்கையை கை விட்டுவிட்டு இந்தியா கூட்டணியைப் பலப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

பெரும்பான்மை இல்லாத தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு கொடுத்து இருந்தீர்கள், தூய்மையான ஆட்சி தருவதாகக் கூறிய தமிழக வெற்றிக் கழகத்தில் தற்போது அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ க்கள், முன்னாள் அமைச்சர்கள் இணைந்து வருவது குறித்து முத்தரசனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அவர், "பாரதிய ஜனதா கட்சியினர் ஆட்சியில் எதிர்க்கட்சியில் உள்ள எம்.எல்.ஏ க்கள், அமைச்சர்கள் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டு அவர்களை தன் வசம் இழுக்க முயற்சிப்பது நடைபெறக் கூடிய ஒன்றாகும். ஊழல் வழக்குகளில் உள்ள நபர்களும் தங்கள் வழக்குகளில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஆளுங்கட்சியின் ஆதரவைத் தேடி செல்வது தற்போது வாடிக்கையாகி வருகிறது; அது தான் தற்போது தமிழ்நாட்டிலும் நடைபெற்று வருகிறது" என்றார்.

தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி எப்படி உள்ளது என்ற கேள்விக்கு பதிலளித்த முத்தரசன், "த.வெ.த இன்னும் தொப்புள்கொடி அறுக்காத குழந்தை, அது இனிமேல் வளர வளர தான் தெரியும்; அதுவரை பொறுத்து இருப்போம்" என்று பதிலளித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை கோட்பாடுகள் கம்யூனிச சித்தாந்தத்தில் வருகிறதா ? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், "ஒரு கத்திரிக்காயும் இல்லை; பெரும்பான்மை இல்லாத நேரத்தில் அவர்களுக்கு ஆதரவு தந்துள்ளோம். ஆளுநர் மூலம் மறைமுகமாக பாரதிய ஜனதா ஆட்சியைக் கொண்டு வந்து விடக் கூடாது என்பதற்காகத் தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சில கட்சிகள் த.வெ.க அரசிற்கு வெளியில் இருந்து ஆதரவுக் கொடுத்து உள்ளோம்" என்றார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: