சனி, 6 ஜூன், 2026

தளபதி விஜய் இருக்கும் வரை அவரே முதல்வர்” ; அ.தி.மு.க-வின் எதிர்காலம் அசைக்க முடியாத கேள்விக்குறி - பொள்ளாச்சி மோதலுக்குப் பின் உண்மையை உடைத்த அமைச்சர் செங்கோட்டையன் !!!

SHARE

 தளபதி விஜய் இருக்கும் வரை அவரே முதல்வர்” ; அ.தி.மு.க-வின் எதிர்காலம்  கேள்விக்குறி உள்ளது - பொள்ளாச்சி மோதலுக்குப் பின் உண்மையை உடைத்த அமைச்சர் செங்கோட்டையன் !!!

“24 மணி நேரமும் கண்காணிப்பு; கேரளா போல் விபரீதம் வராமல் தடுக்க நடவடிக்கை : கோவையில் பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து விளக்கம் !!!

தமிழகத்தில் இயற்கைச் சீற்றங்களால் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாத வகையில், முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவின் பேரில் 24 மணி நேரமும் தீவிர முன்னெச்சரிக்கை மற்றும் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.

கோவை தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பல்வேறு முக்கியக் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.  

தென்மேற்கு பருவமழை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு,

"தென்மேற்குப் பருவ மழையைப் பொறுத்த வரை தற்போது மிதமான மழையே பெய்து வருகிறது. இதனால் நிலச் சரிவுகளோ அல்லது பெரிய அளவிலான சேதங்களோ ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. எனினும், கேரளாவில் நிகழ்ந்தது போன்ற அசம்பாவிதங்கள் தமிழகத்தில் எங்கும் நடந்து விடக் கூடாது என்பதில் முதலமைச்சர் உறுதியாக இருக்கிறார்.

அதன் அடிப்படையில் நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இப்போதே ஆயத்தப் பணிகள் தொடங்கப்பட்டு, நிலைமை 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அடுத்ததாக வடகிழக்கு பருவமழை வரும்போதும் அதை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து நேற்று முதலமைச்சருடன் ஆலோசிக்கப்பட்டு உள்ளது. மக்கள் தேடி வந்து கேட்காத அளவுக்கு, உடனுக்குடன் நிவாரணப் பணிகளை ஆற்ற வேண்டும் என்பதே முதலமைச்சரின் ஆணை என தெரிவித்தார். 

அ.தி.மு.க வின் முக்கிய பிரபலங்கள்  தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து வருவது குறித்த கேள்விக்கு 

"தமிழகத்தில் ஒரு தூய்மையான, நல்லாட்சியைத் தருவதற்காக முதலமைச்சர் நாள்தோறும் பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து வருகிறார். இதைப் பார்த்து விட்டுப் பலரும் நமது இயக்கத்தில் இணைந்து வருகின்றனர். புரட்சித் தலைவர் (எம்.ஜி.ஆர்), புரட்சித் தலைவி அம்மா (ஜெயலலிதா) ஆகியோரின் காலம் வேறு, இன்றைய சூழல் வேறு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இன்றைய தேதியில் நல்லாட்சி நடத்தக் கூடிய சிறந்த தலைவராக விளங்கும் நமது தளபதி விஜய் தமிழ்நாட்டில் இருக்கும் வரை அவரே முதலமைச்சராக நீடிப்பார். அவரது பின்னால் அணிவகுக்கும் மக்களுக்கு எனது வாழ்த்துகள்."

இளைய அமைச்சர் சம்பத் தொடர்ந்து திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,

"ஒவ்வொரு அமைச்சரும் தங்கள் துறை சார்ந்த நுணுக்கங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நல்ல நோக்கத்திலேயே ஆய்வுகளை மேற்கொள்கிறார்கள். ஆய்வுக்குப் பிறகு அங்கு என்னென்ன தேவைகள் இருக்கிறதோ ? அதை முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்று நிச்சயம் நிறைவேற்றுவார்கள்" என்றார்.

இறுதியாக, அ.தி.மு.க வின் தற்போதைய நிலை மற்றும் எதிர்காலம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது,

 "அ.தி.மு.க வின் எதிர்காலம் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது" என்று அமைச்சர் செங்கோட்டையன்  பதிலளித்தார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: