கோவையில் விசித்திரம் : ஆம்லெட் போட முட்டையை உடைத்த நபருக்குக் காத்து இருந்த ‘டபுள்’ இன்ப அதிர்ச்சி – சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோ !!!
வாங்கி வந்த 5 முட்டைகளிலும் இரட்டைக் கருக்கள்; அரிய இயற்கையின் விந்தையைப் பார்த்து வாயடைத்துப் போன குடும்பத்தினர் !!!
கோவை மாவட்டம் இருகூர் அடுத்த அத்தப்ப கவுண்டன் புதூர் பகுதியில், வீட்டில் ஆம்லெட் போடுவதற்காக மளிகைக் கடையில் இருந்து வாங்கி வரப்பட்ட முட்டைகள் அனைத்திலும், ‘டபுள்’ என்று சொல்லப்படும் இரட்டைக் கருக்கள் (Double-Yolk Eggs) இருந்த அரிய விசித்திரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
அத்தப்ப கவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர், தனது வீட்டின் அருகே உள்ள மளிகைக் கடைக்குச் சென்று சமையல் தேவைகளுக்காக ஐந்து கோழி முட்டைகளை வாங்கி வந்து உள்ளார்.
வீட்டிற்கு வந்த விஜயகுமார், ஆம்லெட் போடுவதற்காக அவரது மனைவி ஒரு முட்டையை எடுத்து பாத்திரத்தில் உடைத்து ஊற்றி உள்ளார். அப்போது அந்த முட்டையினுள் இரண்டு மஞ்சள் கருக்கள் இருப்பதைக் கண்டு சற்றே வியப்படைந்து உள்ளார்.
சரி, தற்செயலாக ஏதோ ஒரு முட்டையில் இப்படி இருந்து இருக்கும் என்று நினைத்த அவர், அடுத்த முட்டையையும் எடுத்து உடைத்துப் பார்த்து உள்ளார். என்ன ஆச்சரியம்! அந்த இரண்டாவது முட்டையிலும் அதே போல இரண்டு மஞ்சள் கருக்கள் இருந்து உள்ளன.
இதனால் ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்ற விஜயகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர், மீதமிருந்த மூன்று முட்டைகளையும் உடைத்து சோதித்துப் பார்த்தனர். அப்போது அவர்கள் வாங்கி வந்த ஐந்து முட்டைகளிலுமே தலா இரண்டு, இரண்டு மஞ்சள் கருக்கள் இருந்ததைக் கண்டு ஒட்டுமொத்த குடும்பத்தினரும் அப்படியே வாயடைத்துப் போய் உறைந்து நின்றனர்.
பொதுவாக ஆயிரத்தில் ஒரு முட்டையில் தான் இதுபோன்ற இரட்டைக் கருக்கள் அமைவது இயற்கை விந்தையாகப் பார்க்கப்படும் நிலையில், ஒரே கடையில் வாங்கி வந்த அத்தனை முட்டைகளிலும் இரட்டைக் கருக்கள் அமைந்தது விசித்திரமான சம்பவமாகும்.
இந்த அரிய காட்சியைத் தவறவிடக் கூடாதென்று நினைத்த விஜயகுமார், அடுத்தடுத்து முட்டைகளை உடைக்கும் பொழுது, தனது செல்போனில் அதனைத் துல்லியமாக வீடியோவாகப் பதிவு செய்தார்.
முட்டையை உடைக்க உடைக்க இரண்டு கருக்கள் விழும் அந்த விசித்திர வீடியோ காட்சியை அவர் சமூக வலைதளங்களில் பதிவிட, அது தற்பொழுது கோவையின் நெட்டிசன்கள் மத்தியில் வேகத்தில் ‘ஷேர்’ செய்யப்பட்டு செம வைரலாகி வருகிறது.
"ஆம்லெட் போடப் போய் இவருக்கு ஜாக்பாட் அடிச்சிருக்கு" என உள்ளூர் பொதுமக்கள் இந்த வீடியோவைப் பார்த்து ஆச்சரியத்துடன் தங்களது கமெண்டுகளை வாரி இறைத்து வருகின்றனர்.

0 கருத்துகள்: