கோவையில் ஆட்டோ மீது மோதி இழுத்துச் சென்ற தனியார் பள்ளி பேருந்து ; பதற வைக்கும் சி.சி.டி.வி காட்சிகள் வைரல் - கவனிக்காமல் அஜாக்கிரதை இயக்கிய ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை !!!
கோவை, பட்டணம் அடுத்த நடுப்பாளையம் பகுதியில், பள்ளி குழந்தைகளை இறக்கி விட்டுத் திரும்பிய தனியார் பள்ளி பேருந்து ஒன்று, பின்னால் நின்று கொண்டு இருந்த ஆட்டோ மீது மோதி இழுத்துச் சென்ற விபத்துச் சம்பவம் அப்பகுதி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 11-ஆம் தேதி புதன்கிழமை மாலை நடுப்பாளையம் பகுதியின் வளைவு ஒன்றில் இந்தத் தனியார் பள்ளி பேருந்து திரும்ப முயன்று உள்ளது. அப்போது, பேருந்தை பின்னோக்கி (Reverse) எடுத்த ஓட்டுநர், தனது வாகனத்திற்குப் பின்னால் ஆட்டோ ஒன்று நின்று கொண்டு இருந்ததைச் சற்றும் கவனிக்காமல் அஜாக்கிரதையாகப் பேருந்தை இயக்கி உள்ளார்.
பேருந்தின் பின்பகுதி மோதிய வேகத்தில் ஆட்டோ நிலைதடுமாறிய நிலையிலும், ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமல் தொடர்ந்து பின்னோக்கி இயக்கி ஆட்டோவை நீண்ட தூரத்திற்கு இழுத்துச் சென்று உள்ளார். இதனால் பதறிப்போன ஆட்டோ ஓட்டுநர், சத்தம் போட்டு அலறியடித்தபடி பேருந்தைத் தடுத்து நிறுத்தினார்.
நல்வாய்ப்பாக இந்தத் விபத்தில் ஆட்டோ ஓட்டுநருக்குப் ஏதும் ஏற்படவில்லை. இந்த விபத்துச் சம்பவம் முழுவதும் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் கண்காணிப்பு கேமராவில் (CCTV Camera) துல்லியமாகப் பதிவாகி உள்ளது.
இந்தத் சி.சி.டி.வி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வைரலாகி வருகிறது.
பொதுவாக, பள்ளி பேருந்துகளில் பின்னோக்கிச் செல்வதைக் கண்காணிப்பதற்காகப் பேருந்தின் பின்பகுதியில் பிரத்யேகக் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பது கட்டாயமாகும். மேலும், வாகனத்தைப் பின்னோக்கி எடுக்கும் போது இருபுறமும் உள்ள கண்ணாடிகளை (Side Mirrors) பார்த்து இயக்க வேண்டும் என்ற அடிப்படை ஓட்டுநர் விதிகள் உள்ள நிலையிலும், இந்தத் தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநர் எதையும் கவனிக்காமல் மிக அலட்சியமாக வாகனத்தை இயக்கியது இந்த விபத்தின் மூலம் அம்பலமாகி உள்ளது.
பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் இத்தகைய வாகனங்களின் ஓட்டுநர்கள் மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும், விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் மீது காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

0 கருத்துகள்: