செவ்வாய், 16 ஜூன், 2026

கோவையில் அதிர்ச்சி ; போதைக்காக இருமல் மருந்து - வடமாநில தொழிலாளர்கள் அட்டகாசம் !!!

SHARE

 கோவையில் அதிர்ச்சி ; போதைக்காக இருமல் மருந்து - வடமாநில தொழிலாளர்கள் அட்டகாசம் !!!

மருந்துக் கடைகளில் விற்கப்படும் டானிக்குகள் : சட்ட விரோதமாக போதைக்கு பயன்படுத்தி பாட்டில்களை வீசி சென்ற வீடியோ வைரல் !!!

 கோவை, விளாங்குறிச்சி அடுத்த விநாயகபுரம் பகுதியில் உள்ள சில குறிப்பிட்ட வடமாநில தொழிலாளர்கள், தங்களது தினசரி வேலைப்பளுவை மறப்பதற்காகவும், போதைக்காகவும் இருமல் மருந்துகளை (Cough Syrups) அதிக அளவில் குடித்து உலா வரும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள்  வெளிவந்து உள்ளன.

 தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் தொழில் நகரமான கோவையின் ஏராளமான தொழில்கள் உள்ளன.  இந்நிலையில் கோவை, விளாங்குறிச்சி, விநாயகபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரக் கணக்கான வெளிமாநில மற்றும் உள்ளூர் கட்டிட தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர். இவர்களில் சிலர், சமீபகாலமாக கஞ்சா மற்றும் மதுபானங்களுக்கு மாற்றாக, எளிதில் கிடைக்கக் கூடிய சில குறிப்பிட்ட இருமல் மருந்து டானிக்குகளைத் தங்களது போதைக்காகப் பயன்படுத்தி வருவது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

​மருத்துவர்களின் முறையான பரிந்துரை சீட்டு இல்லாமல் அத்தகைய வீரியமிக்க மருந்துகளை மருந்தகங்களில் விற்கக் கூடாது என்ற சட்ட ரீதியான விதிகள் அமலில் உள்ள நிலையிலும், கோவையில் பல்வேறு பகுதியில் உள்ள சில மருந்தகங்கள் கூடுதல் லாபத்திற்கு ஆசைப்பட்டு, இந்தத் தொழிலாளர்களுக்குப் போதை தரும் இருமல் மருந்துகளை ரகசியமாக விநியோகம் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. 

இந்த மருந்துகளை மொத்தமாக வாங்கி குடித்து விட்டு, பொது இடங்களில் போதையில் மயங்கிக் கிடப்பதும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் நடந்துகொள்வதும் அப்பகுதியில் தினசரி வாடிக்கையாகி விட்டது.

 போதைக்காக இந்த மருந்துகளைத் தொடர்ந்து பயன்படுத்துவதால், சம்பந்தப்பட்ட நபர்களுக்குப் பல்வேறு கடுமையான உடல்நலக் குறைபாடுகள் ஏற்படுவது மட்டுமின்றி, அந்தப் பகுதியின் சட்டம்-ஒழுங்கு நிலைக்கும் பெரும் சவாலாக உருவெடுத்து உள்ளது.

தடாகம் மற்றும் சரவணம்பட்டி எல்லைக்கு உட்பட்ட சுகாதாரத் துறையினர் விநாயகபுரம் பகுதியில் உள்ள மருந்தகங்களில் சோதனைகளை நடத்தி மருத்துவரின் சீட்டு இன்றி மருந்துகளை விற்பனை செய்யும் கடைகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: