குடியிருப்பு பகுதியில் ‘குப்பை தரம் பிரிக்கும் நிலையம்’ அமைக்க மாநகராட்சி திட்டம் ? ; “10 கி.மீ பரப்பளவிற்குப் புகை மாசு பரவும் ஆபத்து” - கோவை, விளாங்குறிச்சி மக்கள் சாலை மறியல் போராட்டத்தால் பரபரப்பு !!!
கோவை, சிவானந்தபுரம், விளாங்குறிச்சி, விநாயகபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அனைவருக்கும், தங்களின் ஆரோக்கியம் மற்றும் எதிர்கால நலன் சார்ந்த மிக முக்கிய அவசர மற்றும் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று சமூக வலைதளங்கள் வாயிலாகத் தீவிரமாகப் வைரலாகி வருகிறது.
கோவை மாநகராட்சி நிர்வாகம், சிவானந்தபுரம் பகுதியில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனை மற்றும் மேல்நிலை குடிநீர் தொட்டி ஆகிய மக்கள் நடமாட்டம் மற்றும் அத்தியாவசியத் தேவைகள் நிறைந்த பகுதிக்கு மிக அருகில், மிகப்பெரிய அளவிலான ‘குப்பை சுத்திகரிப்பு மற்றும் எரிப்பு நிலையம்’ ஒன்றை அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகளை ரகசியமாகத் தொடங்கி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தத் திட்டம் குறித்து அப்பகுதி மக்களுக்கு மாநகராட்சி தரப்பில் இருந்து எவ்வித முன் அறிவிப்போ ? அல்லது கருத்துக் கேட்புக் கூட்டமோ ? நடத்தப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
சிவானந்தபுரம், விளாங்குறிச்சி மற்றும் விநாயகபுரம் ஆகிய பகுதிகள் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளாகும். இந்தத் திட்டம் இங்குச் செயல்படுத்தப்பட்டால், இதில் இருந்து வெளியேறும் நச்சுப் புகை மற்றும் துர்நாற்றம் காரணமாகச் சுற்றி உள்ள சுமார் 10 கிலோ மீட்டர் பரப்பளவில் வாழும் ஒட்டுமொத்தப் பொதுமக்களும் கடுமையாகப் பாதிக்கப்படுவர்.
குறிப்பாக, அருகில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், அப்பகுதியில் உள்ள குழந்தைகள், முதியவர்கள் மற்றும் சுவாசப் பிரச்சனை உள்ளவர்கள் கொடூரமான காற்று மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு ஆளாக நேரிடும் எனச் சமூக ஆர்வலர்கள் அஞ்சுகின்றனர். மேலும், மேல்நிலை குடிநீர் தொட்டியின் அருகிலேயே இத்திட்டம் வருவதால், விநியோகிக்கப்படும் குடிநீரின் தூய்மையும் கேள்விக்குறியாகும் அபாயம் உள்ளது.
மாநகராட்சியின் இந்த மக்கள் விரோதத் திட்டத்திற்கு எதிராகத் தங்களது ஜனநாயக உரிமையை அமைதியான முறையில் பதிவு செய்ய அப்பகுதி பொதுமக்கள் மற்றும் குடியிருப்போர் நலச் சங்கங்கள் ஒன்றிணையத் தொடங்கி உள்ளனர்.
இது குறித்துப் பகிரப்பட்டு வரும் அவசர அழைப்பில் விடுக்கப்பட்டு உள்ளது அதில் கூறி கூறியிருப்பதாவது ;
“இது எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது மத அமைப்போ நடத்தும் போராட்டம் அல்ல. இது நம் பகுதி மக்களின் ஆரோக்கியம், சுற்றுச்சூழல் மற்றும் நம் குழந்தைகளின் எதிர்கால நலனைப் பாதுகாக்கும் உன்னதமான பொதுநல முயற்சி. எனவே, அரசியல், மதம், ஜாதி உள்ளிட்ட அனைத்து வேறுபாடுகளையும் முற்றிலுமாக மறந்து, பொதுமக்களாக, ஒரே சக்தியாக ஒன்றிணைந்து நமது வலுவான எதிர்ப்பை உடனடியாகப் பதிவு செய்ய வேண்டும். வாய்ப்பு உள்ள பொதுமக்கள், இளைஞர்கள் அனைவரும் உடனடியாகக் குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்து வந்து, நம் பகுதியின் நலனுக்காகக் குரல் கொடுப்போம். ஒன்றுபட்ட மக்கள் சக்தியே வெற்றியின் அடித்தளம்!”
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கக் குடியிருப்புப் பகுதியில் அமைய உள்ள குப்பை எரிப்பு நிலையத்திற்கு எதிராக சிவானந்தபுரம் பகுதி மக்கள் போர்க்கொடி தூக்கி உள்ள சம்பவம் கோவையில் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனைத் தொடர்ந்து அங்கு கூடிய மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

0 கருத்துகள்: