ஞாயிறு, 5 ஜூலை, 2026

கோவை மாநகரமே ஸ்தம்பித்தது ; டவுன் ஹால், உப்பிலிபாளையம், உக்கடம், சாய்பாபா காலனியில் ‘கிலோ மீட்டர்’ நீண்ட வாகன வரிசை - போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி !!!

SHARE

 கோவை மாநகரமே ஸ்தம்பித்தது ; டவுன் ஹால், உப்பிலிபாளையம், உக்கடம், சாய்பாபா காலனியில் ‘கிலோ மீட்டர்’ நீண்ட வாகன வரிசை - போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி !!!

​பிரதான சாலைகளில் முடங்கிய வாகனங்கள் – வார இறுதி நாட்களில் தொடரும் அவலம் !!!

 கோவை மாநகரின் மிக முக்கியப் பிரதான பகுதிகளான உப்பிலிபாளையம் மேம்பாலம், உக்கடம், சாய்பாபா காலனி மற்றும் ப்ரூக்ஃபீல்டு சாலை உள்ளிட்ட இடங்களில் இன்று மாலை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், வாகனங்கள் அனைத்தும் ஊர்ந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது.

கோவை மாநகரில் வார இறுதி நாளான இன்று (சனிக்கிழமை) மாலை, வேலைக்குச் சென்று திரும்புபவர்கள், வெளியூர் பயணிப்பவர்கள் மற்றும் வணிக வளாகங்களுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விடக் கணிசமாக உயர்ந்தது. இதன் காரணமாக, மாநகரின் இதயமாகக் கருதப்படும் முக்கியச் சாலைகள் அனைத்தும் வாகன நெரிசலால் முற்றிலுமாக ஸ்தம்பித்தன.

அவினாசி சாலையில்  உப்பிலிபாளையம் மேம்பாலப் பகுதியில் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து நின்றன. இதனால், ரயில் நிலையம் மற்றும் காந்திபுரம் நோக்கிச் செல்ல வேண்டிய வாகனங்கள் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக ஒரே இடத்தில் முடங்கின.

​உக்கடம் பேருந்து நிலையம் மற்றும் கேரள மாநில எல்லைப் பகுதிகளை இணைக்கும் உக்கடம், டவுன்ஹால் பகுதியில், இன்று மாலை வழக்கத்தை விட வாகனப் பெருக்கம் ஏற்பட்டது.

வணிக நிறுவனங்கள் அதிகம் நிறைந்த சாய்பாபா காலனி சிக்னல் மற்றும் என்.எஸ்.ஆர் (NSR) சாலை சந்திப்புகளில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. இதனால் இப்பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் பயணிகள் நீண்ட நேரம் பேருந்திற்காகக் காத்திருக்க நேரிட்டது.

மாநகரின் மையப்பகுதியில் உள்ள ப்ரூக்ஃபீல்டு மாலுக்கு (Brookefields Mall) வார இறுதி நாட்களில் மக்கள் கூட்டம் அலைமோதும். இன்று மாலையும் கிக்கானிக் பள்ளி (Kikani School) மற்றும் மால் அமைந்து உள்ள சாலையில் நூற்றுக் கணக்கான கார்கள் ஒரே நேரத்தில் நுழைந்ததால், அந்தப் பகுதி ஒட்டுமொத்தமாகப் போக்குவரத்து நெரிசலில் சிக்கிப் திணறியது.

​இந்தத் தொடர் போக்குவரத்து நெரிசல் காரணமாக, அவசரத் தேவைகளுக்காகச் சென்ற ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசரக் கால வாகனங்கள் கூடச் சைரன் சத்தத்துடன் வழியின்றித் தவிக்கும் நிலை ஏற்பட்டது. 

“வார இறுதி நாட்களில் போக்குவரத்துப் போலீஸார் கூடுதல் எண்ணிக்கையில் பிரதான சிக்னல்களில் நின்று போக்குவரத்தைச் சீரமைக்க வேண்டும், வாகனங்களை மாற்றுப் பாதையில் திருப்பி விட தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவதிக்கு உள்ளான கோவை வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: