கோவை அதிர்ச்சி : மாமனார் வீட்டில் 1000 சவரன் நகை திருடிய மருத்துவ மருமகன் ; 3 பேர் மீது போலீஸ் வழக்கு - காவல்துறை விசாரணை !!!
கோவையில் ரியல் எஸ்டேட் தொழிலதிபரின் வீட்டில், அவரது மருமகனான மருத்துவரே கைவரிசை காட்டி, சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பு உள்ள 1000 சவரன் தங்க நகைகளை அள்ளிக்கொண்டு எஸ்கேப் ஆன விவகாரம் தற்போது போலீஸ் வட்டாரங்களில் ஹாட் டாப்பிக் ஆகி உள்ளது.
கோவை, கணபதி பகுதியை சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் தொழிலதிபர் சண்முகபாண்டியன் (67) என்பவரது மகளுக்கும், டாக்டர் எம். விக்னேஷ் என்பவருக்கும் கடந்த 2024 பிப்ரவரி மாதம் திருமணம் நடந்து உள்ளது. திருமணத்தின் போது விக்னேஷின் குடும்பத்தினர் கடுமையான பண நெருக்கடியில் தவித்து வந்ததால், பெருந்தன்மையோடு சண்முகபாண்டியன் தனது காளப்பட்டி பங்களாவிலேயே மருமகன் குடும்பத்தை குடியேற்றி உள்ளார். ஆனால், அடைக்கலம் கொடுத்த மாமனாருக்கே விபூதி அடிக்க மருமகன் போட்ட ‘பக்கா பிளான்’ அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
காளப்பட்டி வீட்டில் தங்கிய சில மாதங்களிலேயே டாக்டர் விக்னேஷின் சுயரூபம் வெளிப்படத் தொடங்கி உள்ளது. அந்த சொகுசு பங்களாவை தன் பெயருக்கு மாற்றித் தருமாறு தனது மனைவியை வற்புறுத்தி, மென்டல் டார்ச்சர் கொடுத்து உள்ளார். இதனால் குடும்பத்திற்குள் கடுமையான விரிசல் விழுந்து உள்ளது. விவகாரம் முற்றுவதை உணர்ந்த சண்முகபாண்டியன், கடந்த 2025 டிசம்பரில் அந்த வீட்டை மற்றொரு பார்ட்டிக்கு ரூ.15 கோடிக்கு விற்று ‘டீல்’ முடித்து உள்ளார்.
இதனால் கடும் அதிருப்தி அடைந்த விக்னேஷின் குடும்பத்தினர், வீட்டை காலி செய்துவிட்டு திடீரென வெளியேறி உள்ளனர்.
இதனால் சண்முகபாண்டியனுக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியதை அடுத்து, விக்னேஷிடம் இருந்த லாக்கர் சாவியை அவர் திரும்பக் கேட்டு உள்ளார். அதற்கு விக்னேஷ் மழுப்பலாகப் பதிலளித்து சாவியைத் தர மறுக்கவே, சந்தேகத்தின் பேரில் லாக்கரை உடைத்துப் பார்த்த சண்முகபாண்டியன் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார். உள்ளே பத்திரமாக வைக்கப்பட்டு இருந்த சுமார் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள 1000 சவரன் (8 கிலோ) தங்கம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து சண்முகபாண்டியன் தட்டிக் கேட்கவே, வெறும் 100 சவரனை மட்டும் தூக்கிப் போட்டுவிட்டு, மீதி நகைகளைத் தர முடியாது எனக்கூறி கொலை மிரட்டல் விடுத்து உள்ளது அந்த கும்பல். இதை அடுத்து, பாதிக்கப்பட்ட தொழிலதிபர் கொடுத்த புகாரின் பேரில், கோவை மாநகர குற்றப்பிரிவு (CCB) போலீசார், டாக்டர் விக்னேஷ், அவரது தாய் வாசுகி, சகோதரியான டாக்டர் எம். ஜீவிதா ஆகிய மூவர் மீதும் கூட்டுச்சதி, திருட்டு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்துகள்: