வியாழன், 2 ஜூலை, 2026

பசுமைப் புரட்சி ; கோவையில் 15 வயது அரசமரத்திற்கு மறுவாழ்வு - சுந்தராபுரத்தில் துரிதமாக வேரோடு பிடுங்கி வெற்றிகரமாக மறுநடவு செய்த ‘கிரீன் கேர்’ அமைப்பினர் !!!

SHARE

 பசுமைப் புரட்சி ; கோவையில் 15 வயது அரசமரத்திற்கு மறுவாழ்வு - சுந்தராபுரத்தில் துரிதமாக வேரோடு பிடுங்கி வெற்றிகரமாக மறுநடவு செய்த ‘கிரீன் கேர்’ அமைப்பினர் !!!

​மாநகராட்சி, மின்வாரியம் மற்றும் பள்ளி குழந்தைகள் இணைந்து அசத்தல் - சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு !!!

​ கோவை, சுந்தராபுரம் பகுதியில் நீர் வழிப் பாதை சீரமைப்புப் பணிக்கு இடையூறாக இருந்த சுமார் 15 ஆண்டுகள் பழமையான பிரம்மாண்ட அரச மரத்தை வெட்டிச் சாய்க்காமல், நவீனத் தொழில் நுட்பத்துடன் வேரோடு பிடுங்கி, அருகில் உள்ள மாநகராட்சி இடத்தில் வெற்றிகரமாக மறுநடவு செய்து மறுவாழ்வு அளித்து உள்ள நெகிழ்ச்சியான சம்பவம் கோவையில் அரங்கேறி உள்ளது.

கோவை மாநகராட்சி 94-வது வார்டுக்கு உட்பட்ட சுந்தராபுரம் பகுதியில் தற்போது பல்வேறு நீர்நிலைகள் மற்றும் நீர் வழிப் பாதைகளைத் தூர் வாரி சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

 இந்தப் பணியின் போது, சாலையோரம் இருந்த சுமார் 15 வயது மதிக்கத்தக்க, நன்கு வளர்ந்த அரசமரம் ஒன்று திட்டப் பணிகளுக்குப் பெரும் இடையூறாக இருந்தது கண்டறியப்பட்டது.

ஆனால், இந்த அரசமரத்தைக் காப்பாற்றி அதற்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும் எனப் பசுமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று, இன்று கோவை மாநகராட்சி அதிகாரிகள், தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகள், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் ‘கிரீன் கேர்’ (Green Care) அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து களத்தில் இறங்கினர்.

​மரம் வேரோடு பிடுங்கப்படும் போது மின்சாரக் கம்பிகள் மற்றும் பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாதவாறு மின்வாரியத்தினர் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தனர். ராட்சத கிரேன் இயந்திரத்தின் உதவியுடன், அரச மரத்தின் வேர்கள் சேதம் அடையாமல் லாவகமாகப் தோண்டி எடுக்கப்பட்டது. பின்னர், அந்த மரம் அங்கு இருந்து பத்திரமாகக் கொண்டு செல்லப்பட்டு, அருகில் உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான பொது ஒதுக்கீட்டு இடத்தில் முறைப்படி குழி தோண்டப்பட்டு, இயற்கை உரங்கள் இடப்பட்டு வெற்றிகரமாக மறுநடவு செய்யப்பட்டது.

​இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மரத்தின் உயிர் காக்கும் பணியில் அப்பகுதியைச் சேர்ந்த பள்ளி குழந்தைகளும் ஆர்வமுடன் கலந்து கொண்டு, மரங்களை வளர்ப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பெற்றனர். வளர்ச்சித் திட்டங்களுக்காக மரங்களை வெட்டாமல், இப்படி மறுநடவு செய்து இயற்கையைக் காக்க முடியும் என நிரூபித்துக் காட்டிய கோவை மாநகராட்சி, மின்வாரியம் மற்றும் ‘கிரீன் கேர்’ தன்னார்வலர்களின் இந்த உன்னதப் பணியைப் பாராட்டிச் சமூக வலைதளங்களில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தங்களது வாழ்த்துகளை அள்ளித் தெளித்து வருகின்றனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: