புதன், 8 ஜூலை, 2026

அரசு ஆஸ்பத்திரியா ? எலி வளர்த்தல் மையமா ? கோவை ஜி.ஹெச் எமர்ஜென்சி வார்டில் எகிரி குதிக்கும் எலி !!!

SHARE

 அரசு ஆஸ்பத்திரியா ? எலி வளர்த்தல் மையமா ? கோவை ஜி.ஹெச் எமர்ஜென்சி வார்டில் எகிரி குதிக்கும் எலி !!!

உயிர்காக்கும் பிரிவிலேயே நடக்கும் எலிகளின் அட்டகாசம்; அலட்சியத்தில் மருத்துவமனை நிர்வாகம் !!!

உயிர்காக்கும் அவசர சிகிச்சை பிரிவிற்கே அவசர சிகிச்சை தேவைப்படும் அளவுக்கு கோவை அரசு தலைமை மருத்துவமனை எலிகளின் புகலிடமாக மாறி இருப்பது, நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் இடையே பெரும் பீதியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. 

ஏழை, எளிய மக்களின் ஒரே நம்பிக்கையாக விளங்கும் கோவை ஜி.ஹெச் தரம் குறைந்து, ‘ரொம்ப மட்டமான’ நிலைக்குத் தள்ளப்பட்டு இருப்பதாகப் பொதுமக்களே நேரடியாகக் குமுறத் தொடங்கி உள்ளனர். 

விபத்து மற்றும் உயிருக்கு ஆபத்தான நிலையில் கொண்டு வரப்படும் நோயாளிகளைப் பராமரிக்கும் எமர்ஜென்சி வார்டுக்குள், தற்போது எலிகள் சுதந்திரமாக எகிரி குதித்து ‘ரேஸ்’ நடத்திக் கொண்டு இருக்கும் வைரல் வீடியோ ...

 மருத்துவமனையின் அவசர சிகிச்சை வார்டுகளில் துப்புரவுப் பணிகள் சரி வரக் கவனிக்கப்படாததே இந்த எலித் தொல்லைக்குக் காரணம் என்ற ‘கசப்பான உண்மை’ வெளிவந்து உள்ளது. 

படுக்கைகளில் படுத்து இருக்கும் நோயாளிகளின் பக்கத்திலேயே எலிகள் கூட்டமாக ஓடிப் பிடித்து விளையாடுவதும், உணவுகளைக் கடித்துக் குதறுவதும் தொடர் கதையாகி வருகிறது. 

"உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அவசர வார்டில் வந்து படுத்தால், எலி கடித்து எங்கே ‘எலி காய்ச்சல்’ வந்துவிடுமோ ? என்ற பயத்தில் தான் இரவெல்லாம் கண் விழித்துக் கிடக்கிறோம்; 

இந்த எலிகளிடம் இருந்து தப்பிக்க ஏதாவது வழிகள் இருக்கிறதா?" என நோயாளிகளின் உறவினர்கள் கண்ணீருடன் கேள்வி எழுப்புகின்றனர்.

மாவட்டத்தின் மிக முக்கிய மருத்துவமனையாகக் கருதப்படும் இந்த வளாகத்தில், சுகாதாரம் என்பது கேள்விக்குறியாகிப் போனதாகப் புகார்கள் அடுக்கடுக்காக எழுகின்றன.

 இதுகுறித்து வார்டு ஊழியர்களிடம் முறையிட்டால் அவர்கள் அலட்சியமாகப் பதில் அளிப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

கோவை அரசு மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக இந்த ‘எலி சாம்ராஜ்யத்திற்கு’ எண்ட் கார்டு போட வேண்டும் என்றும், அவசர சிகிச்சை வார்டுகளில் போர்க்கால அடிப்படையில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: