சனி, 11 ஜூலை, 2026

கஜினி கல்பனா பாணியில் ஒரு நிஜ நாயகி” ; மாட்டுச் சாணத்தால் சிதைந்த வீட்டைப் பூசிய கோவை பழங்குடியின மூதாட்டி, இன்ஸ்டாவில் வைரலான வீடியோ – சொந்த வீடு கட்டித் தர அறக்கட்டளை அதிரடி முடிவு !!!

SHARE

கஜினி கல்பனா பாணியில் ஒரு நிஜ நாயகி” ; மாட்டுச் சாணத்தால் சிதைந்த வீட்டைப் பூசிய கோவை பழங்குடியின மூதாட்டி, இன்ஸ்டாவில் வைரலான வீடியோ – சொந்த வீடு கட்டித் தர அறக்கட்டளை அதிரடி முடிவு !!!

கோவை, சின்ன தடாகம் அருகே உள்ள பழங்குடியின கிராமத்தில், தள்ளாத வயதில் மாட்டுச் சாணத்தைக் கொண்டு தனது உடைந்த மண் வீட்டைப் பூசி வந்த மூதாட்டியின் வீடியோ இணையத்தில் வெளியாகி நெஞ்சை நெகிழச் செய்து உள்ளது. 

இதனைக் கண்ட கோவையைச் சேர்ந்த பெண் ஒருவர், ‘கஜினி’ திரைப்பட கல்பனா பாணியில் அந்த மூதாட்டிக்கு புதிய வீடு கட்டித் தர முன்வந்து உள்ளார்.

கோவை, சின்ன தடாகம் அடுத்த கீழ் மருதபதி என்ற பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்தவர் கடலை (75). ஆதரவற்ற இந்த மூதாட்டி, நீண்ட வருடங்களாக அக்கிராமத்தில் உள்ள ஒரு சிறிய பாழடைந்த மண் ஓட்டு வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

 போதிய பராமரிப்பு இல்லாததால் வீட்டின் சுவர்கள் ஆங்காங்கே இடிந்து, மழைநீர் உள்ளே புகும் அவல நிலையில் இருந்தது.

வயது முதிர்வு மற்றும் தள்ளாத நிலையிலும், மூதாட்டி கடலை தன் வீட்டைத் தானே சீரமைக்கத் துணிந்து உள்ளார். இதற்காக அருகே உள்ள மாட்டுச் சாணத்தைச் சேகரித்துக் கொண்டு வந்து, தனது கைகளாலேயே உடைந்த மண் சுவர்களில் பூசி மெழுகிக் கொண்டு இருந்து உள்ளார். 

அந்தச் சமயம், பழங்குடியின மக்களுக்கு உதவி செய்வதற்காக அக்கிராமத்திற்கு வந்த ‘நன்னயம் செய்’ அறக்கட்டளையின் பொருளாளர் தாமரைப் பெண் கல்பனா, மூதாட்டியின் இந்த நிலமையைக் கண்டு கண் கலங்கினார். 

தள்ளாத வயதில் அவர் சாணம் பூசும் காட்சியைத் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.

“சுவர்கள் எல்லாம் இடிஞ்சு கிடக்கு... இந்த வயசுல இவங்க இதைச் செய்றதைப் பார்க்கவே நெஞ்சு வலிக்குது” என்ற உருக்கமான வரிகளுடன் வெளியான அந்த வீடியோ, தற்பொழுது சமூக வலைதளங்களில் ஆயிரக் கணக்கானோரால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

சூர்யா நடித்த புகழ்பெற்ற ‘கஜினி’ திரைப்படத்தில் வரும் கல்பனா கதாபாத்திரம், யாருக்கும் தெரியாமல் ஏழை, எளிய குழந்தைகளுக்கு அஞ்சல் வழியே உதவுவது போல, நிஜ வாழ்க்கையிலும் இந்தத் தாமரைப் பெண் கல்பனா பல்வேறு நற்பணிகளைச் செய்து வருகிறார். குறிப்பாக, கீழ் மருதபதி போன்ற பின்தங்கிய பழங்குடியின கிராமங்களில் உள்ள குழந்தைகளின் கல்விக்காகத் தனது அறக்கட்டளை மூலம் கடந்த சில வருடங்களாகத் தொடர்ந்து அரிய உதவிகளை வழங்கி வருகிறார்.

தற்போது இந்த மூதாட்டியின் அவல நிலையைத் தீர்க்கும் பொருட்டு, தங்களது ‘நன்னயம் செய்’ அறக்கட்டளையின் சார்பாக மூதாட்டி கடலைக்கு அதே இடத்தில் ஒரு புதிய கான்கிரீட் வீடு கட்டிக் கொடுப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகளை அவர் முடுக்கி விட்டு உள்ளார்.

“எங்களை போன்ற அறக்கட்டளைகள் மட்டுமே எல்லாவற்றையும் செய்து விட முடியாது. இயற்கை எழில் கொஞ்சும் மலைப் பகுதிகளில் அடிப்படை வசதிகளின்றி வாழும் நம் தொல்குடிப் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த, உங்களால் முடிந்த சிறிய உதவிகளைச் செய்யுங்கள்” என்று கல்பனா உருக்கமாக வேண்டுகோள் விடுத்து உள்ளார். 

மூதாட்டிக்கு வீடு கட்டித் தர முன்வந்த இந்த நிஜக்கால கல்பனாவின் செயலுக்குக் கோவை மக்கள் தங்களது பாராட்டுகளைக் குவித்து வருகின்றனர்.


SHARE

Author: verified_user

0 கருத்துகள்: