தளபதி ஸ்டைலில் இதயம்” ; கோவையில் காருண்யா பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் ‘விஜய்’ செய்கையைச் செய்து ரீல்ஸ் வெளியிட்ட மாணவர் - சமூக வலைதளங்களில் வைரல் !!!
கோவையில் நடைபெற்ற காருண்யா நிகர் நிலைப் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில், வேந்தர் டாக்டர் பால் தினகரனிடம் பட்டம் பெறும் போது, தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், முதல்வரான விஜய் செய்த சைகையைச் செய்து காட்டிய மாணவரின் ‘ரீல்ஸ்’ வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை காருண்யா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கல்வி நிறுவனத்தின் (நிகர் நிலைப் பல்கலைக் கழகம்) 33-வது பட்டமளிப்பு விழா, பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள டி.ஜி.எஸ். தினகரன் அரங்கில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெகுவிமரிசையாக நடைபெற்றது.
காருண்யா இறைவாழ்த்துப் பாடலுடன் தொடங்கிய இவ்விழாவில், துணைவேந்தர் பேராசிரியர் எலைஜா பிளசிங் அனைவரையும் வரவேற்றார். மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட் நிறுவனத்தின் ஆட்டோமோட்டிவ் பிரிவு வணிகத் தலைவரும், மஹிந்திரா எலக்ட்ரிக் ஆட்டோமோட்டிவ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான ஆர். வேலுசாமி முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா பேருரை நிகழ்த்தினார்.
விழாவில் அவருக்குக் கௌரவ முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, காருண்யா நிகர் நிலைப் பல்கலைக் கழக வேந்தர் டாக்டர் பால் தினகரன் தலைமை தாங்கி, படிப்புகளை வெற்றிகரமாக முடித்த மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கிக் கொண்டு இருந்தார்.
அப்போது பட்டம் பெறுவதற்காக மேடைக்கு வந்த மாணவர் ஒருவர், வழக்கமான பாணியில் பட்டத்தைப் பெறாமல், ‘தளபதி’ விஜய் தனது ரசிகர்களைப் பார்த்து கைகளால் ‘இதயம்’ வடிவில் சைகை காட்டுவது போல, வேந்தர் மற்றும் அரங்கில் இருந்தவர்களை நோக்கிச் செய்து காட்டினார்.
பட்டத்தைப் பெற்றுக் கொண்டு சில அடிகள் முன்னால் சென்ற அந்த மாணவர், மீண்டும் திரும்பி வந்து, நடிகர் விஜய் சமீபத்தில் சட்டசபையில் செய்த சைகைகளை அப்படியே செய்து காட்டி விட்டு நடந்து சென்றார்.
மாணவனின் இந்த எதிர்பாராத ‘விஜய் ஸ்டைல்’ செய்கையைக் கண்டு அரங்கில் இருந்த சக மாணவர்கள் விசில் அடித்து, கைதட்டி ஆரவாரம் செய்தனர். அங்கு இருந்த சக மாணவர்கள் இதனைத் தங்களது செல்போன்களில் ‘ரீல்ஸ்’ வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து உள்ளனர்.

0 கருத்துகள்: