குதிரைபேர விவகாரம்.. செந்தில் பாலாஜி, அசோக்குமாருக்கு முன் ஜாமீன் !!!
தி.மு.க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரின் முன்ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், இருவருக்கும் முன் ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது.
முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சியை கவிழ்ப்பதற்கு, சதித் திட்டம் தீட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. டாக்டர் இளையராஜாவிடம் ரூ.35 கோடி தருவதாக பேரம் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இளையராஜா புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் சென்னை திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்
அவர்கள் நடத்திய விசாரணைக்கு பின்னர் இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசியதாக, ஐ.பி.டி.எஸ். என்ற தேர்தல் கருத்துக்கணிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் திருநாவுக்கரசு உள்ளிட்ட 9 பேரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்கள், தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும், அவரது சகோதரர் அசோக்குமாரும் கூறிய அறிவுரையின் பேரில் தான் த.வெ.க. எம்.எல்.ஏ.விடம் ரூ.35 கோடி பேரத்தில் ஈடுபட்டதாக போலீசாரிடம் வாக்குமூலம் தந்ததாக கூறப்படுகிறது.
அதன் அடிப்படையில், செந்தில்பாலாஜியையும், அவரது சகோதரர் அசோக்குமாரையும் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு திருவல்லிக்கேணி போலீசார் சம்மன் அனுப்பினார்கள். அந்த சம்மனில், ஜூலை 6-ந்தேதி ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டது. ஆனால் ஆஜராகவில்லை.. தற்போது தலைமறைவாகி விட்டதாக சொல்லப்படுகிறது. இந்த சூழலில் அசோக்குமார் முன்ஜாமீன் கோரி, ஏற்கெனவே உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
அதனை தொடர்ந்து தி.மு.க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளார். அந்த மனுவில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை த.வெ.க எம்.எல்.ஏ இளையராஜாவிடம் பேரம் பேசியதாகக் கூறப்படும் விவகாரத்தில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை.. இது தொடர்பாக திருவல்லிக்கேணி போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் கூட என்னுடைய பெயர் இல்லை. அரசியல் உள்நோக்கத்துடன் எனக்கு எதிராக இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது..
இந்த வழக்கில் போலீசார் என்னைக் கைது செய்யக்கூடும் என்பதால், எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்" இவ்வாறு கூறி உள்ளார்.
இந்நிலையில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரின் முன்ஜாமீன் மனுக்கள் பிற்பகல் 3.30 மணிக்கு விசாரணைக்கு வந்தது. காலை விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசின் மூத்த வழக்கறிஞர் ஆஜரானார்."கரூர் இடைத்தேர்தலில் பணியாற்றுவதை தடுக்கவே திட்டமிட்டு வழக்குப் பதிவு. யாருக்கும் எந்தவொரு பணமும் வழங்கப்படவில்லை. விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக உள்ளோம் என செந்தில் பாலாஜி தரப்பு வாதிட்டது. இதனை அடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்ற செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக்குமாருக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

0 கருத்துகள்: