வியாழன், 9 ஜூலை, 2026

அம்மோனியா வாயு அகற்றும் பணிகள் நிறைவு - திருவள்ளூர் தொழிற்சாலைக்கு 'சீல்' !!!

SHARE

 அம்மோனியா வாயு அகற்றும் பணிகள் நிறைவு - திருவள்ளூர் தொழிற்சாலைக்கு 'சீல்' !!!

கடல் உணவுப் பதப்படுத்தும் தொழிற்சாலையில் இருந்து அம்மோனியா வாயுவை அகற்றும் பணிகள் தொடர்ந்து 5 நாட்களாக நடைபெற்று முடிவடைந்த நிலையில், அந்த தொழிற்சாலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

திருவள்ளுர் மாவட்டம், பெரியபாளையம் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் கடந்த ஜூன் 21 அன்று அம்மோனியா வாயு கசிந்து 18 பேர் உயிரிழந்த நிலையில், எஞ்சிய அம்மோனியாவை அகற்றும் பணிகள் 5 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வந்தன.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என 2 நாட்களில் 5 டன் அம்மோனியா வாயு, மிக பாதுகாப்பாக எடுக்கப்பட்டு, டேங்கர் லாரி மூலம் சென்னை மணலியில் உள்ள எம்.எப்.எல் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

திங்கட்கிழமை (ஜூலை 6) எஞ்சி உள்ள அம்மோனியாவை கந்தக அமிலம் கலந்து கம்ப்ரஸர் மூலம் அகற்றும் பணிகள் நடந்த நிலையில், அடுத்த நாள் (ஜூலை 7) மாலை மீதமுள்ள அம்மோனியாவை எடுத்துச் செல்ல எம்.எப்.எல் நிறுவனத்தில் அம்மோனியாவை இறக்கிய டேங்கர் லாரி மீண்டும் தொழிற்சாலைக்கு வந்தது.

மாலை 5 மணிக்கு பணிகள் நிறுத்தப்பட்ட நிலையில், புதன்கிழமை (ஜூலை 8) காலை 9.30 மணி அளவில் அம்மோனியா அகற்றும் பணிகள் மீண்டும் தொடர்ந்தது. ஐந்தாவது நாளில் அம்மோனியா வாயு கசிந்த குழாய்களை முழுவதுமாக அகற்றும் பணிகள் நடைபெற்றன. ஒரு வழியாக இந்த பணிகள் முழுவதுமாக நிறைவடைந்த நிலையில் மாலை 6 மணி அளவில் டி.ஆர்.ஓ ரவிச்சந்திரன் தலைமையில் தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டது.

மேலும், ‘இனி இந்த கம்பெனிக்குள் யாரும் நுழையக் கூடாது’ என அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 10-க்கும் மேற்பட்ட காவலர்கள் தொழிற்சாலையை சுற்றிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தொடர்ந்து தொழிற்சாலைக்கு நுழைவதற்கான அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டன. இதனால் தொழிற்சாலையை பார்க்கவோ உள்ளே செல்லவோ அனுமதி மறுக்கப்பட்டு, முழுவதுமாக அரசு கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு உள்ளது.

கடந்த 5 நாட்களாக நடைபெற்ற அம்மோனியா வாயுவை அகற்றும் பணியில் மாசு கட்டுப்பாட்டு வாரியம், தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர், ஆம்புலன்ஸ் மற்றும் காவல் துறையினர், வருவாய்துறை, ஊரக வளர்ச்சி துறை மற்றும் மின் வாரிய அலுவலர்கள் ஆகியோர் ஈடுபட்டு இருந்தனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: