துரோகிகளை பற்றி பேசாதீங்க' - நிர்வாகிகள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம் !!!
கட்சிக்கு விசுவாசம் இன்றி துரோகம் இழைத்தவர்கள் பற்றி மீண்டும் என்னிடம் பேசாதீர்கள் என மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்ற வருகிறது. மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி சந்தித்து, தேர்தல் தோல்வி குறித்து ஆலோசித்து வருகிறார்.
அந்த வகையில், 5-வது நாளான இன்று திருச்சி மாவட்ட நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் திருச்சி புறநகர், திருச்சி வடக்கு, திருச்சி தெற்கு, திருச்சி கிழக்கு ஆகிய மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "கட்சிக்கு விசுவாசமாக இல்லாமல் துரோகம் இழைத்தவர்களின் பழைய கதையை பற்றி மீண்டும் என்னிடம் பேச வேண்டிய அவசியம் இல்லை. அ.தி.மு.க தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து வரக் கூடிய உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க விற்கு வெற்றியை தேடி தர வேண்டும்" என கேட்டுக் கொண்டார்.
மேலும், அ.தி.மு.க புத்துணர்வுடன் புதிய எழுச்சி பெற்று மீண்டும் ஆட்சி கட்டிலில் அமரும். நிர்வாகிகள் யாரும் மனசோர்வு அடையாமல் கட்சிப் பணியில் கவனம் செலுத்துங்கள் என அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக இக்கூட்டத்தில், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்விக்கான காரணமும், வரும் நாட்களில் மேற்கொள்ள உள்ள கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக வரும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவதற்கு ஏற்ப செயல்பாடுகளை தீவிரப்படுத்த நிர்வாகிகளுக்கு பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை வழங்கினார்.
தேர்தல் தோல்விக்கு பிறகு அ.தி.மு.க வின் முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் உட்பட பலர் கட்சியை விட்டு வெளியேறியதால், அ.தி.மு.க வின் செயற்குழு மற்றும் பொதுக் குழுவை மாற்றி அமைப்பதற்கு எடப்பாடி பழனிசாமி ஆலோசித்து வருவதாக பேசப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில், மாவட்டம் வாரியாக உள்ள செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களை புதிதாக சேர்ப்பது குறித்து முடிவெடுத்து, அதற்கான பட்டியலை மாவட்ட நிர்வாகிகள் தயாரித்து சமர்பிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த கூட்டத்தை முன்னாள் மாவட்ட செயலாளர்கள் ப. குமார் மற்றும் பரஞ்சோதி ஆகிய இருவரும் புறக்கணித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் ப. குமார் திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்து இருந்தார். அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு ஆதரவாக இவர்கள் செயல்பட்டதால், எடப்பாடி பழனிசாமி அவர்களை மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது.
இந்த கூட்டத்தை தொடர்ந்து இன்று மாலை திருநெல்வேலி மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

0 கருத்துகள்: