கோவையில் குழியில் சிக்கிய கல்லூரி பேருந்து : பாதாள சாக்கடைக் சரிவர மூடப்படாததால் ஏற்பட்ட விபத்து - மாநகராட்சி மீது கடும் கொந்தளிப்பில் பொதுமக்கள் !!!
கோவை, சிங்காநல்லூர் அருகே சரிவர மூடப்படாமல் இருந்த பாதாள சாக்கடை திட்டக் குழியில் கல்லூரி மாணவர்களை ஏற்றி வந்த தனியார் கல்வி நிறுவன பேருந்து ஒன்று சிக்கி விபத்துக்கு உள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள பிரபல தனியார் கல்லூரியைச் சேர்ந்த பேருந்து ஒன்று, இன்று மாலை மாணவர்களை ஏற்றிக் கொண்டு சிங்காநல்லூர், உப்பிலிபாளையம் ஜி.வி ரெசிடென்சி பகுதி வழியாகச் சென்று கொண்டு இருந்தது. அப்போது சாலையோரம் பாதாள சாக்கடை திட்டத்திற்காகத் தோண்டப்பட்டு, தற்காலிகமாக மூடப்பட்டு இருந்த பகுதியில் பேருந்து சென்ற போது, எதிர்பாராத விதமாகப் பேருந்தின் முன்சக்கரம் மண்ணுக்குள் புதைந்தது.
இதனால் பேருந்து ஒருபுறமாகச் சரிந்ததை உணர்ந்த உள்ளே இருந்த மாணவர்கள் விபத்து ஏற்பட்டுவிடுமோ ? என்ற பயத்தில் அலறினர். ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பேருந்து முழுமையாகக் கவிழாமல் தப்பியது. உடனடியாகப் பேருந்தில் இருந்து மாணவர்கள் அனைவரும் பத்திரமாக கீழே இறக்கப்பட்டனர்.
கோவை மாநகரில் கடந்த சில ஆண்டுகளாகவே பாதாள சாக்கடைத் திட்டம், 24 மணி நேரக் குடிநீர் திட்டக் குழாய்கள் பதிப்பு, கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் எனப் பல்வேறு திட்டங்களுக்காகப் பிரதான சாலைகள் முதல் தெருக்கள் வரை மாநகராட்சி நிர்வாகத்தால் குழி தோண்டப்பட்டு வருகிறது. ஆனால், பணிகள் முடிந்த பின்னரும் அந்த குழிகளைச் சரிவர மூடாமலும், தார்ச் சாலைகளை முறையாக அமைக்காமலும் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாகப் பொதுமக்கள் நீண்ட நாட்களாகக் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதன் காரணமாகச் சிறிய மழை பெய்தால் கூட சாலைகள் அனைத்தும் சேறும், சகதியுமாக மாறி, எங்கு குழி இருக்கிறது என்றே தெரியாத அவல நிலை நீடிக்கிறது.
இன்று மாலையும் இதே போன்ற ஒரு அலட்சியத்தால் மாணவர்களை ஏற்றி வந்த பேருந்து பெரும் விபத்தில் சிக்க இருந்தது அப்பகுதி மக்கள் இடையே ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.

0 கருத்துகள்: