வெள்ளி, 14 ஆகஸ்ட், 2026

மூதாட்டி கொடூரக் கொலை வழக்கு... செல்போனை திருட முயன்ற 17 வயது சிறுவன் கைது: 3 தனிப்படைகள் அமைத்துப் பிடித்த கோவை மாநகர போலீஸ்!

SHARE

 மூதாட்டி கொடூரக் கொலை வழக்கு... செல்போனை திருட முயன்ற 17 வயது சிறுவன் கைது: 3 தனிப்படைகள் அமைத்துப் பிடித்த கோவை மாநகர போலீஸ்!

கட்டையால் அடித்துக் கொன்று விட்டுத் தப்பிய மர்மம் விலகியது; கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளால் சிக்கிய கொலையாளி!

கோவை, பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் நள்ளிரவில் தனியாக இருந்த மூதாட்டியை அடித்துக் கொலை செய்த வழக்கின் பின்னணியில், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனை ரேஸ்கோர்ஸ் போலீஸார் அதிரடியாகக் கைது செய்து உள்ளனர். 

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி படுகொலை:

கோவை, பாப்பநாயக்கன்பாளையம் கருப்பக்கல் தோட்டத்தைச் சேர்ந்தவர் சாந்தி (58). இவருக்கு ராஜா (35) என்ற மகனும், பாலக்காட்டில் குடும்பத்துடன் வசித்து வரும் அமுதா (30) என்ற மகளும் உள்ளனர். சாந்தி அப்பகுதியில் உள்ள மருத்துவர் ஒருவர் வீட்டில் சமையல் வேலை செய்து வந்து உள்ளார்.

இந்நிலையில், கடந்த 11-ந் தேதி இரவில் வீட்டில் சாந்தி தனியாக இருந்த போது, மர்ம நபர் ஒருவரால் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த ரேஸ்கோர்ஸ் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

3 தனிப்படைகள் அமைப்பு - சி.சி.டி.வி யில் சிக்கிய காட்சி:

கொலையாளிகளை விரைந்து பிடிக்கக் காவல் துறை சார்பில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீஸார் சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளை முழுமையாக ஆய்வு செய்தனர்.

அப்போது, நள்ளிரவில் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு நபர் மட்டும் சாந்தியின் வீட்டிற்குள் சென்று, சில நிமிடங்களில் வெளியேறித் திரும்பி வரும் திடுக்கிடும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அதனடிப்படையில் போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில், அந்த நபர் அதே பகுதியில் சுற்றித்திரியும் 17 வயது சிறுவன் என்பது அம்பலமானது.

செல்போன் திருட்டு முயற்சியில் கொலை - சிறுவன் கைது:

இதனைத் தொடர்ந்து, அந்தச் சிறுவனைப் பிடித்துத் தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், சாந்தி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து ரகசியமாக உள்ளே புகுந்த அச்சிறுவன், அங்கு இருந்த செல்போனைத் திருட முயன்று உள்ளான். அதனைச் சாந்தி பார்த்து விட்டதால், மாட்டிக் கொள்வோம் என்ற பயத்தில் அருகில் இருந்த கட்டையால் சாந்தியைப் பலமாக தலையில் அடித்து விட்டுத் தப்பிச் சென்றது தெரியவந்தது.

அடிதாங்க முடியாமல் சாந்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து 17 வயது சிறுவனைக் கைது செய்த ரேஸ்கோர்ஸ் போலீஸார், அவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் மூதாட்டியைக் கொலை செய்த வழக்கில் சிறுவன் கைதான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: