"சி.சி.டி.வி இருந்தும் துப்புத் துலங்கவில்லை"; ஒப்பனக்கார வீதியில் சாவியுடன் நின்ற பைக் 20 நிமிடத்தில் திருட்டு!
கடைக்குச் சென்று திரும்பிய இடைவெளியில் கொள்ளை : ஒரு வாரமாகக் திணறும் வெரைட்டி ஹால் போலிஸார்!
கோவை, ஒப்பனக்கார வீதியில் கடை முன்பாக சாவியுடன் நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனத்தைச் மர்ம நபர் ஒருவர் 20 நிமிடங்களுக்குள் திருடிச் சென்ற சி.சி.டி.வி காட்சிகள் இருந்தும், சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆகியும் கொள்ளையனைப் பிடிக்க முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர்.
கோவை, கவுண்டம்பாளையம் மீனாட்சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் வங்கியில் தற்காலிகப் பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.
கடந்த 23-ஆம் தேதி, சரவணன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மோட்டார் சைக்கிளில் பொருட்கள் வாங்குவதற்காக வெரைட்டி ஹால் பகுதிக்கு வந்தார். ஒப்பனக்கார வீதியில் உள்ள பேக் கடை ஒன்றின் முன்பாகத் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டுப் பொருட்கள் வாங்கச் சென்று உள்ளார்.
இரவு 7.30 மணி அளவில் வாகனத்தை நிறுத்தி விட்டு கடைக்குச் சென்றவர், பொருட்கள் வாங்கிவிட்டு 20 நிமிடங்கள் கழித்துத் திரும்பி வந்த போது அவர் நிறுத்திச் சென்ற இடத்தில் மோட்டார் சைக்கிள் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
யாராவது வாகனத்தைத் தள்ளி நிறுத்தி இருக்கக் கூடும் என அப்பகுதியில் தேடியும் பைக் கிடைக்காததால், அங்கு இருந்த கடைகளில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், சரவணன் கடைக்குச் சென்ற சில நிமிடங்களிலேயே மர்ம நபர் ஒருவன் மோட்டார் சைக்கிளைத் திருடிச் சென்ற அதிர்ச்சி காட்சி பதிவாகி இருந்தது.
உடனே வந்து விடலாம் என்ற அவசரத்தில் சரவணன் மோட்டார் சைக்கிளின் சாவியைப் பைக்கிலேயே மறந்து விட்டுச் சென்றதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட கொள்ளையன், வாகனத்தை மிக இலகுவாக ஓட்டிச் சென்று உள்ளான்.
இது குறித்துச் சரவணன் அளித்த புகாரின் பேரில், வெரைட்டி ஹால் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளையன் பைக் திருடிச் செல்லும் தெளிவான கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகள் கைவசம் இருந்த போதிலும், கடந்த ஒரு வாரமாக அந்த நபர் குறித்தோ ? அல்லது திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் குறித்தோ ? எந்தவொரு தகவலும் கிடைக்காமல் போலீஸார் திணறி வருகின்றனர்.
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ஒப்பனக்கார வீதியில் நடந்த இந்தத் திருட்டுச் சம்பவம் வாகன ஓட்டிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

0 கருத்துகள்: