சனி, 8 ஆகஸ்ட், 2026

போலியான ஜிபே ஸ்கிரீன்ஷாட் ; துணிக் கடையில் ரூ.2,150 மோசடி செய்து தப்பிய வாலிபர் - சி.சி.டி.வி வெளியிட்டு உரிமையாளர் குமுறல் !!!

SHARE

 போலியான ஜிபே ஸ்கிரீன்ஷாட் ; துணிக் கடையில் ரூ.2,150 மோசடி செய்து தப்பிய வாலிபர் - சி.சி.டி.வி வெளியிட்டு உரிமையாளர் குமுறல் !!!

பணமும் போச்சு, துணியும் போச்சு:  காவல் நிலையத்தில் புகார் !!!

 கோவையில் துணிக் கடையில் ஆன்லைன் மூலம் பணம் அனுப்பி விட்டதாகப் போலி ஸ்கிரீன்ஷாட்டை காண்பித்து ஏமாற்றி, துணி மற்றும் ரொக்கப் பணத்தைச் சுருட்டிச் சென்ற வாலிபரின் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

​கோவை, சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரஷீத். இவர் மதுக்கரை, காமராஜர் நகர் பகுதியில் சொந்தமாகத் துணிக்கடை நடத்தி வருகிறார். கடந்த 6-ஆம் தேதி மாலை சுமார் 6:30 மணியளவில் ரஷீத்தின் மனைவி மட்டும் கடையில் வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டு இருந்தார். ​அப்போது கடைக்கு வந்த வாலிபர் ஒருவர், ரூ.650 மதிப்பிலான துணிகளைத் தேர்வு செய்து உள்ளார். பின்னர், தனக்கு அவசரமாக ரொக்கப் பணம் தேவைப்படுவதாகக் கூறி, கடையின் உரிமையாளரிடம் ரூ.1,500 ரொக்கப் பணத்தைப் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து, துணி மற்றும் ரொக்கப் பணம் சேர்த்து மொத்தம் ரூ.2,150 தொகையைக் கடையில் உள்ள க்யூஆர் (QR) கோடு மூலம் ஜிபே (GPay) செய்து விட்டதாகத் தனது செல்போன் திரையைக் காண்பித்து உள்ளார்.

​அந்த வாலிபர் கிளம்பிச் சென்ற பிறகு, ரஷீத்தின் மனைவி ஜிபே கணக்கைச் சரிபார்த்த போது பணம் எதுவும் வரவு வைக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாகத் தனது கணவருக்குத் தகவல் தெரிவித்தார்.

​கடைக் உரிமையாளர் ரஷீத் விரைந்து வந்து கடையில் இருந்த சி.சி.டி.வி (CCTV) கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார். அதில், அந்த வாலிபர் துணிப் பார்சலை வாங்கிக் கொண்டு அவசர, அவசரமாக வெளியேறி, சற்றுத் தொலைவில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த தனது இருசக்கர வாகனத்தில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பிச் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தன.

​தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ரஷீத், சி.சி.டி.வி காட்சிப் பதிவுகளுடன் சுந்தராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 "இதுபோன்ற போலியான ஜிபே செயலிகளைப் பயன்படுத்தி மேலும் பல கடைகளில் இந்த வாலிபர் மோசடியில் ஈடுபடக்கூடும். எனவே, போலிசார் உடனடியாக அவரைத் தேடிக் கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனப் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: