வெள்ளி, 14 ஆகஸ்ட், 2026

இளைஞர்களைக் கவரும் 'சிக்ஸ் பேக்' விநாயகர் ; 3 அடி முதல் 10 அடி வரை காகிதக் கூழ், களிமண்ணால் உருவான சுற்றுச்சூழல் நட்புச் சிலைகள் !!!

SHARE

இளைஞர்களைக் கவரும் 'சிக்ஸ் பேக்' விநாயகர் ; 3 அடி முதல் 10 அடி வரை காகிதக் கூழ், களிமண்ணால் உருவான சுற்றுச்சூழல் நட்புச் சிலைகள் !!!

 விநாயகர் சதுர்த்தி - சிலைகள் தயாரிப்புப் பணிகளில் தீவிரம் !

  விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம் அடைந்து உள்ளன. 

இந்த ஆண்டு இளைஞர்களைக் கவரும் வகையில் 'சிக்ஸ் பேக்' விநாயகர் சிலைகள் அதிகளவில் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

இது குறித்துக் கோவை 'சுயம்பு ஆர்ட்ஸ்' (Swayambu Arts) உரிமையாளர் யோகானந்தம் கூறும்போது; 

தங்களது தந்தை காலத்தில் இருந்தே விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வர உள்ள விநாயகர் சதுர்த்திக்காகக் கடந்த நான்கு மாதங்களாக இரவு பகலாகச் சிலைகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். விழாவுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், தற்போது சிலைகளுக்கு வண்ணங்கள் பூசும் பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இன்றைய இளைஞர்களின் விருப்பத்திற்கு ஏற்பப் புதுவரவாகச் 'சிக்ஸ் பேக் விநாயகர்' மற்றும் 'சிவனுடன் சிக்ஸ் பேக் விநாயகர்' உருவங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. 

கடந்த ஆண்டு இரண்டு, மூன்று மாதிரிகள் மட்டுமே செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு இளைஞர்கள் இடையே பெரும் வரவேற்பு கிடைத்ததால் அதிகளவில் சிக்ஸ் பேக் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு உடள்ளன.

 மயில், அன்னம், காளை, எலி, புலி, சிங்கம் போன்ற பல்வேறு வாகனங்களில் வீற்றிருக்கும் விநாயகர் சிலைகள். வித்தியாசமான வடிவங்கள், தாமரை விநாயகர், மங்கள விநாயகர், பாகுபலி விநாயகர் எனப் பல்வேறு கலைநயமிக்க வடிவங்கள். முற்றிலும் சுற்றுச் சூழலுக்குப் பாதுகாப்பானது.

வீடுகளில் வைத்துப் பூஜை செய்ய 2 அடி வரை களிமண்ணாலும், பொது இடங்களில் பிரதிஷ்டை செய்ய 3 அடி முதல் 10 அடி வரை காகிதக் கூழ் மற்றும் இயற்கை மூலப்பொருட்களைக் கொண்டும் சிலைகள் செய்யப்படுகின்றன.

 ரசாயனங்கள் இன்றிச் செய்யப்படுவதால் இவை நீரில் எளிதில் கரைந்து, சுற்றுச்சூழலுக்கு எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாது என அவர் கூறினார்.

தற்போது முன்பதிவுகள் தொடங்கி உள்ளதாகவும், இன்னும் 10 நாட்களில் ஆர்டர்கள் மேலும் அதிகரிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். மூலப்பொருட்களின் விலை உயர்ந்து இருந்தாலும், தொழில் போட்டி காரணமாகக் குறைந்த லாபத்தில் வாடிக்கையாளர்களின் திருப்திக்காக அவர்கள் விரும்பும் வடிவங்களில் சிலைகளை நேர்த்தியாகச் செய்து தருவதாக யோகானந்தம் கூறினார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: