திங்கள், 31 ஆகஸ்ட், 2026

"தொட்டுப் பார்த்தால் காகிதம் ; தொடர்ந்து படித்தால் வெற்றியின் ஆயுதம்" ; கோவையில் சிந்தனைக் கவிஞர் கவிதாசனின் 4 புதிய நூல்கள் வெளியீடு!

SHARE

இளம் தலைமுறைக்குத் தன்னம்பிக்கை வளர்க்கப் புத்தக வாசிப்பு அவசியம் : காந்திபுரத்தில் கோலாகல விழா!

​ இளம் தலைமுறையினர் தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்ளப் புத்தக வாசிப்பு மிகவும் அவசியம் என ரூட்ஸ் குழும நிறுவனங்களின் இயக்குநரும் சிந்தனைக் கவிஞருமான டாக்டர் கவிதாசன் வலியுறுத்தினார்.

4 புதிய நூல்கள் அறிமுகம்:

கோவையில் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் எழுதிய ‘வெற்றிப் படிக்கட்டுகள்’, ‘வெற்றியின் விதைகள் 100’, ‘சிகரம் தொடு’ மற்றும் ‘வெற்றிப்பாதை’ ஆகிய நான்கு புதிய தன்னம்பிக்கை நூல்களின் அறிமுக விழா, கோவை காந்திபுரத்தில் உள்ள ஆர்.வி. ஹோட்டல் வளாகத்தில் சிறப்பான முறையில் நடைபெற்றது.

​இவ்விழாவில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் விஸ்வநாதன் வரவேற்புரையாற்றினார். கோவை ஞான சஞ்சீவனம் குருகுலம் நிறுவனர் ஸ்ரீ சசிகுமார் வாழ்த்துரை வழங்கினார்.

நூல் அறிமுக உரைகள்:

நிகழ்ச்சியில், ‘வெற்றிப்பாதை’ நூலை குறித்துக் கோவை பயனீர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சச்சிதானந்தர் மற்றும் இதிகாச மாமணி முனைவர் முருகேசன் ஆகியோர் அறிமுக உரையாற்றினர்.

​மன்னார்குடியைச் சேர்ந்த தமிழ் இலக்கிய ஆய்வறிஞரும் நூலாசிரியருமான பத்மாவதி, ‘வெற்றிப் படிக்கட்டுகள்’ நூல் குறித்தும்; மேட்டுப்பாளையம் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி தமிழாசிரியர் முனைவர் கருணாநிதி, ‘வெற்றியின் விதைகள் 100’ நூல் குறித்தும்; அதே பள்ளியின் தமிழாசிரியர் முனைவர் பொன். சங்கர், ‘சிகரம் தொடு’ நூல் குறித்தும் விரிவான அறிமுக உரையாற்றினர்.

புத்தக வாசிப்பின் அவசியம் - கவிதாசன் உரை:

நிகழ்ச்சியில் நூலாசிரியர் சிந்தனைக் கவிஞர் டாக்டர் கவிதாசன் பேசுகையில்:

"இன்றைய தனிக்குடும்ப வாழ்க்கை முறையில் இளம் தலைமுறையினர் பல்வேறு உளவியல் சார்ந்த சவால்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் இருந்த அனுபவ வழிகாட்டுதல்களும், எதையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவமும் தற்போது குறைந்து வருவதால், சில நேரங்களில் இளைஞர்கள் அவசரப்பட்டு ஆபத்தான முடிவுகளை எடுக்கும் நிலை ஏற்படுகிறது.

​எனவே, இளம் தலைமுறையினரிடம் தன்னம்பிக்கையையும் மன உறுதியையும் வளர்க்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். குறிப்பாகத் தன்னம்பிக்கை, தலைமைப் பண்பு மற்றும் வாழ்க்கையை எதிர்கொள்ளும் திறனை வளர்க்கும் நல்ல புத்தகங்களைத் தொடர்ந்து வாசிக்க வேண்டும்" எனக் கூறினார்.

​மேலும், “தொட்டுத் தொட்டுப் பார்த்தால் காகிதம்; தொடர்ந்து படித்தால் வெற்றியின் ஆயுதம்” என்ற கருத்துமிக்க வரிகளை முன்வைத்த கவிதாசன், புத்தக வாசிப்பு அறிவை வளர்ப்பதோடு மட்டுமின்றி, வாழ்க்கையில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளும் பக்குவத்தையும் தன்னம்பிக்கையையும் வழங்கும் எனத் தெரிவித்தார்.

​இவ்விழாவில் திரளான இலக்கிய ஆர்வலர்கள், கல்வியாளர்கள், வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு நூலாசிரியருக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: